ஒவ்வொரு காட்சிக்கும் கடுமையாக உழைத்தோம்: ஹரீஷ்

ஒவ்வொரு காட்சிக்கும் கடுமையாக உழைத்தோம்: ஹரீஷ்

படம்: விகடன்

07 Nov 2026 - 11:07 am

1 mins read

படப்பிடிப்பு முடிவடைந்து பல மாதங்களாகப் பெட்டிக்குள்ளேயே முடங்கிக்கிடந்த ‘நூறு கோடி வானவில்’ திரைப்படம், ஒருவழியாக ரசிகர்களின் பார்வைக்கு வரத் தயாராகிவிட்டது.

இயக்குநர் சசி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், சித்தி இட்னானி முதன்மைப் பாத்திரங்களில் நடித்திருக்கும் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல், நேரடியாக ‘ஜீ5’ ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

“இந்தப் படம் இவ்வளவு காலம் வெளியாகாமல் தாமதமானதில் வருத்தம்தான். ஆனால், ஒவ்வொரு பாடலிலும் காட்சியிலும் ஒட்டுமொத்தப் படக்குழுவின் உழைப்பும் சிந்தப்பட்டுள்ளது,” எனச் செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது குறிப்பிட்டார் நடிகர் ஹரீஷ் கல்யாண்.

இயக்குநர் சசியைச் சிறந்த படைப்பாளி என்றும் மிக ஒழுக்கமான மனிதர் என்றும் பாராட்டினார்.

“அவரிடம் இருந்த அந்த நற்பண்புகளை நாங்களும் கற்றுக்கொண்டோம். சசி சிறந்த சிந்தனையாளர். அவருக்குள் ஒரு சிறந்த தொழில்நுட்பக் கலைஞரும் உள்ளார் என்பதை இப்படம் மூலம் தெரிந்துகொண்டேன்.

“படப்பிடிப்பு நேரத்தில் துளியும் வீண் செலவோ தாமதமோ இல்லாமல் திட்டமிட்டுச் செயல்படுவார் சசி. மனித உணர்வுகளைத் திரையில் நேர்த்தியாகக் கையாள்வதில் அவர் வல்லவர். இந்தக் காதல் கதை நிச்சயமாக அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார் ஹரீஷ் கல்யாண்.

கோவை சரளா, தம்பி ராமையா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த உணர்வுபூர்வமான காதல் திரைப்படம், ஓடிடி தளத்தில் நல்ல வரவேற்பைப் பெறும் என்று படக்குழுவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்