தனுஷ், மம்மூட்டி கூட்டணியில் உருவாகிறது ‘ஓம்’

தனுஷ், மம்மூட்டி கூட்டணியில் உருவாகிறது ‘ஓம்’

1 of 2
படம்: விகடன்
படம்: விகடன்

31 Oct 2026 - 4:41 pm

2 mins read

தமிழ் சினிமாவில் ‘அமரன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, தேசிய விருது பெற்ற இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஓம்’ (OM - Chapter 1: Udhiram - The Blood Wood).

நடிகர்கள் தனுஷ், மம்மூட்டி இணைந்து நடிக்கும் இப்படம், இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தனது முதல் படமான ‘ரங்கூன்’ வெளியீட்டின்போதே ‘ஓம்’ படத்தின் கரு தன் மனத்தில் உருவாகிவிட்டதாகச் சொல்கிறார்.

‘அமரன்’ படப்பிடிப்பின் இடைவெளியில் நடிகர் தனுஷை சந்தித்துக் கதையைக் கூறியபோது, அவர் உடனடியாக இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

நடிகர் சித்திக் மூலம் மம்மூட்டியின் தொடர்பைப் பெற்று கதையைக் கூறியதாகவும் கதையின் ஆழத்தைப் புரிந்துகொண்டு அவர் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

‘ஓம்’ வெறும் குண்டர் கும்பலைப் பற்றிய படமாக மட்டுமில்லாமல், உணர்ச்சிபூர்வமான பிணைப்புகளையும் மனித வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களையும் பேசும் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது.

“மியன்மாரைப் பின்னணியைக் கொண்ட கதைக்களத்துடன், திருவண்ணாமலை, திருப்பதி பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. மார்ட்டின் ஸ்கார்செஸியின் இத்தாலியன் ‘மாஃபியா’ படங்களின் பாணியில், புலம்பெயர்ந்த மனிதர்களின் வாழ்வியலையும் இது தொட்டுச் செல்கிறது.

“இந்தித் திரையுலகின் மூத்த நடிகர் நஸ்ருதீன் ஷா, மலையாள நடிகர் இந்திரன்ஸ் ஆகியோரின் பங்களிப்பு படத்திற்கு மேலும் வலிமை சேர்க்கிறது.

“சாய் பல்லவி, ஸ்ரீலீலா என இரண்டு நாயகிகள் உள்ளனர். இருவரும் தங்களின் வழக்கமான பாத்திரங்களில் இருந்து விலகி, முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். சாய் அபயங்கரின் இசையில் உருவாகியுள்ள பாடல்களும் படத்திற்குப் பெரிய பலமாக அமையும் என எதிர்பார்க்கிறோம்,” என்கிறார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.

தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் ரசிகர்களைக் கவரும் வகையில் நேரடியாக உருவாக்கப்படுகிறது ‘ஓம்’ திரைப்படம்.

குறிப்புச் சொற்கள்