எந்தவொரு வேலையைச் செய்தாலும், நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் ஆகச்சிறந்த பங்களிப்பை அள்ளித் தருவது நம்முடைய கடமை என்கிறார் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்.
ரசிகர்கள் நடிகர்களுக்குக் கொடுக்கும் அன்பிற்கு எப்போதும் மதிப்பளிக்க வேண்டும் என்ற அறிவுரையையும் அண்மையில் நடைபெற்ற ‘பெத்தி’ தெலுங்குப் படம் குறித்து அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
ராம் சரணுடன் ஜான்வி இணைந்து நடித்துள்ள இந்தத் திரைப்படம், ஜூன் 4ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.
தெலுங்கில், ‘உபெனா’ படத்தை இயக்கிய புச்சி பாபு சனா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். ஏ.ஆர். ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ள இப்படம், தெலுங்கு ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
“ஒரு நடிகையாக எனக்குச் சவால்விடும் வகையிலான கதாபாத்திரங்களில் நடிப்பதை நான் எப்போதும் ரசிப்பேன். நமக்குப் பழக்கம் இல்லாத வித்தியாசமான விஷயங்களை சில கதாபாத்திரங்களின் மூலம் திரையில் வெளிப்படுத்துவதில் எனக்கு அலாதியான ஆர்வம் உண்டு.
“இப்படிச் சில சோதனை முயற்சிகளைச் செய்வது நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில் ரீதியிலும் வளர்ச்சிக்கு உதவுகிறது.
“மேலும், இத்தகைய முயற்சிகள் எனக்குள் ஒரு பெரிய ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன எனலாம். நமக்கு வசதியாக உள்ள சில அம்சங்களைத் தவிர்த்து வெளியே வரும்போதுதான் புதுப்புது அம்சங்களைப் பற்றி தெரியவரும். அவற்றையும் முயற்சி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கும்,” என்று ஜான்வி கூறியுள்ளார்.
ஒருவர் தாம் யார் என்ற யதார்த்தத்தை, உண்மையைத் தெரிந்துகொள்ளும் அந்தத் தருணத்தில்தான், ஒரு கலைஞராக இன்னும் வளர முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
திரைத்துறையில் இருக்கும் அழுத்தங்கள் குறித்து ஜான்வி அதிகம் யோசிப்பதில்லையாம். மாறாக, தன்னுடைய வேலையில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறாராம்.
“இதனை நான் ஒரு அழுத்தமாகப் பார்க்காமல், என்னுடைய பொறுப்பாகவே பார்க்கிறேன். ரசிகர்கள் நடிகர்களாகிய நமக்குக் கொடுக்கும் அன்பிற்கு நாம் எப்போதும் மதிப்பளிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன். ஏனெனில் ரசிகர்களின் ஆதரவின்றி யாராலும் திரையுலகில் அடுத்தடுத்த உயரங்களை எட்டிப்பிடிக்க இயலாது. இதை நன்கு உணர்ந்துள்ளேன்.
“ரசிகர்களின் மாறாத அன்புதான் என் அம்மா ஸ்ரீதேவியை உலகெங்கும் உள்ள இந்தியத் திரை ரசிகர்கள் கொண்டாடும் நடிகையாக உயர்த்தியது. அதனால்தான் அவர்களை என்றும் மறக்கக்கூடாது என அவர் என்னிடம் தொடர்ந்து கூறி வந்தார்,” என்று ஜான்வி கபூர் பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளார்.

