தனக்குத் தெரிந்த விஷயங்களில் தன்னால் சிறப்பாகச் செய்யக்கூடிய ஒன்று என்றால், அது நடிப்பு மட்டும்தான் என்றும் இதை தாம் மனதளவில் எப்போதும் நன்கு உணர்ந்துள்ளதாகவும் சொல்கிறார் நடிகை மஞ்சிமா மோகன்.
வாழ்க்கை அழைத்துச் செல்லும் பாதையில் தாம் செல்வதாகவும் அண்மையில் விகடன் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் கௌதம் ராம் கார்த்திக்கும் இவரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து மணம் புரிந்தனர். இதனால் திரையுலகில் இருந்து சிலகாலம் விலகி இருந்தார் மஞ்சிமா. இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
இந்த இரண்டாவது சுற்றில் தனது திறமைக்கேற்ற வாய்ப்புகளை மட்டுமே ஏற்க இருப்பதாகச் சொல்கிறார். அண்மையில் ரசிகர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘சுழல் 2’ இணையத்தொடரில் நடித்துள்ளார் மஞ்சிமா. இத்தொடருக்கும் மஞ்சிமாவுக்கும் நல்ல பாராட்டு கிடைத்து வருகிறது.
“நடிகர், நடிகைகள் என்று யாராக இருந்தாலும் சில காலம் திரையுலகில் இருந்து விலகியிருந்த பிறகும் மீண்டும் நடிக்க வரும்போது, அது சிறந்த விதத்தில் இருக்க வேண்டும். நானும் அதைத்தான் விரும்பினேன். திருமணத்துக்குப் பிறகு சில பணிகளைக் கவனிக்க வேண்டி இருந்தது.
“எனினும் கணவர் கௌதம், ‘உனக்கு விருப்பமானதைச் செய். வாழ்க்கை என்பது ஒருமுறைதான். மீண்டும் சினிமாவில் நடிக்க விரும்பினால் தாராளமாக நடிக்கலாம். அது உன் உரிமை’ என்றார்.
“அதற்குப் பிறகுதான் இயக்குநர் காயத்ரியைத் (புஷ்கர்-காயத்ரி) தொடர்புகொண்டு பேசினேன். ‘இப்போதைக்கு வாய்ப்பு ஏதும் இல்லை. ஆனால், அமையும்போது நானே அழைக்கிறேன்’ என்று சொன்னார்.
“என்ன ஆச்சரியம், அடுத்த பத்து நாள்களிலேயே என்னை அழைத்தார். ‘சுழல்-2’ இணையத் தொடர் பற்றிய தகவலையும் அதில் ஒரு நல்ல கதாபாத்திரம் இருக்கும் சூழலையும் விவரித்தார்,” என்று நடந்ததை உற்சாகத்துடன் விவரிக்கிறார் மஞ்சிமா.
இத்தொடரில் முதன்முறையாக மீனவப் பெண் வேடத்தில் நடித்துள்ளார். இதற்காக சில நாள்கள் பயிற்சி மேற்கொண்டாராம். தொடரின் இயக்குநர் பிரம்மா, இதற்குப் பெரும் உதவியாக இருந்ததாகச் சொல்கிறார்.
மீனவப் பெண்கள், மீன் வியாபாரத்தில் ஈடுபடுவதையும் அதை உறுதியுடன் திறம்பட இயல்பாக நடத்துவதையும் நேரில் பார்த்துக் கற்றுக்கொண்டாராம்.
“பொதுவாக சில கதாபாத்திரங்களுக்கு 50% நடிப்பை நாமாகக் கொடுத்துவிட முடியும். மீதமுள்ள 50% என்பதை சமூகத்தில் இருந்துதான் எடுக்க வேண்டும். அப்படி மீனவப் பெண்களின் அன்றாட வாழ்க்கையை நேரில் பார்த்ததிலிருந்து நிறைய கிரகித்துக்கொண்டேன். முக்கியமாக, அவர்கள் பேசுகின்ற முறை. அதன் மூலம் அந்தக் கதாபாத்திரம் குறித்த நல்ல தெளிவு ஏற்பட்டது.
“இணையத் தொடர் ‘சுழல் 2’ பார்த்தவர்கள், வழக்கத்துக்கு மாறான என் நடிப்பைப் பாராட்டுகிறார்கள். அப்பா, அண்ணனின் பாராட்டும் கிடைத்தது. இருவரும் அவ்வளவு எளிதில் பாராட்ட மாட்டார்கள். கௌதமும்கூட சிறப்பாக வந்திருக்கிறது என்றார். அதைக்கேட்டதும் என் மகிழ்ச்சி இரட்டிப்பாகிவிட்டது,” என்று சொல்லும் மஞ்சிமாவுக்கு, திகில் கதைகள்தான் மிகவும் பிடிக்குமாம்.
குறிப்பாக, ‘ராட்சசன்’ மாதிரியான படங்கள் என்றால் தவறாமல் பார்த்துவிடுகிறார். எதிர்காலத்தில் திகில் படங்களை இயக்க வேண்டும் என்பது இவரது ஆசைகளில் ஒன்று.
நித்யா மேனன், நயன்தாரா ஆகியோரின் படங்களை ரசித்துப் பார்ப்பதுண்டு என்றும் ‘அமரன்’ படத்தில் சாய் பல்லவியின் கதாபாத்திரமும் நடிப்பும் அபாரம் என்றும் சொல்கிறார்.
“அதேபோல் ‘சாணிக்காயிதம்’ படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பும் முக்கியமானது. கடந்த 1980களில் மலையாளத்தில் நடிகைகள் ரேவதி, ஷோபனா போன்றவர்கள் செய்ததுபோல் நல்ல கதாபாத்திரங்கள் இப்போதுள்ள நடிகைகளுக்கு நிறைய கிடைக்கின்றன.
“இதுபோன்ற வேடங்களில் நடிக்க விரும்புகிறேன். கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதே சமயம், வாழ்க்கை அழைத்துச் செல்லும் பாதையில் நடப்பவள் நான். இதுவரை எனக்கு எல்லாமே தானாக அமைந்ததுதான்,” என்று தத்துவார்த்தமாகவும் பேசுகிறார் மஞ்சிமா மோகன்.