இந்தித் திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்திய ‘ஆப்பரேஷன் சிந்தூர்’

2 mins read
8f0500eb-6317-41f2-8206-3da4ef4dce53
 ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ படச் சுவரொட்டி. - படம் ஊடகம்

இந்தியா, பாகிஸ்தான் இடையேயான மோதல் முடிவுக்கு வந்துவிட்டாலும் இந்தித் திரையுலகில் புது மோதல் வெடித்திருக்கிறது.

பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ எனும் பெயரில் நடவடிக்கை எடுத்தது இந்தியா.

இந்நிலையில், ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ எனும் தலைப்பில் திரைப்படம் எடுக்க பலரும் போட்டியிடுகிறார்கள்.

இதுவரை பாலிவுட் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என்று முப்பதுக்கும் அதிகமானோர் இந்தத் தலைப்பை தங்களுக்கு ஒதுக்கக் கோரி விண்ணப்பித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தப் பெயரில் திரைப்படம் ஒன்றை இயக்கப்போவதாக பாலிவுட் இயக்குநர் உத்தம் மகேஸ்வரி அறிவித்தார்.

வெள்ளிக்கிழமை, நிக்கி விக்கி பக்னானி பிலிம்ஸ், தி கன்டென்ட் இன்ஜினியர் ஆகிய தரப்பினரும் ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ என்ற தலைப்பில் சுவரொட்டி வெளியிட்டதன் மூலம் படம் தயாரிப்பது உறுதியானது.

அச்சுவரொட்டியில் சீருடை அணிந்த ஒரு ராணுவ வீராங்கனை, ஒரு கையில் துப்பாக்கியும் மற்றொரு கையால் நெற்றியில் குங்குமம் வைப்பது போல ஒரு சித்திரிப்புக் காட்சி இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில், மேற்குறிப்பிட்ட இயக்குநர், தயாரிப்புத் தரப்புக்கு சமூக ஊடகங்களில் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கண்டனக் குரல்களைச் சமாளிக்க முடியாமல் இயக்குநர் உத்தம் மகேஸ்வரி மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

தாம் புகழுக்காவோ, பணத்துக்காகவோ அல்லாமல் இந்திய ராணுவ வீரர்களின் துணிச்சல், தியாகம், வலிமையால் நெகிழ்ந்து போனதாகவும் அதன் காரணமாகவே இப்படிப்பட்ட படத்தை இயக்க விரும்பியதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

“எப்போதும் முதலில் தாய்நாடுதான் என்ற குறிக்கோளுடன் நாட்டிற்காக இரவும் பகலும் உழைத்து நம்மைப் பெருமைப்படுத்தும் நமது ராணுவத்திற்கும் பிரதமர் மோடிக்கும் நன்றி. எங்கள் அன்பும் பிரார்த்தனையும் வீரர்களுக்கு எப்போதும் இருக்கும்,” என்றும் உத்தம் மகேஸ்வரி மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்