பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது ‘பராசக்தி’ திரைப்படம்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, ரவிமோகன், அதர்வா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
சிவகார்த்திகேயனுக்கு இது 25வது படம் என்பதுடன் ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் நூறாவது படம் என்பது சிறப்பம்சம்.
தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்து இப்படத்தில் விரிவாகப் பேசப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியானது. படத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தைப் போல் பிரம்மாண்ட அரங்கம் அமைத்து பல காட்சிகளைப் படமாக்கினர்.
இந்நிலையில் ,சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்துகொண்டு இப்படம் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
சுதா கொங்கராவுடன் ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுவது என முடிவு செய்த பிறகுதான் இப்படத்தின் கதையைத் தாம் கேட்டதாகவும் இயக்குநர் சொல்வதை செய்தாலே போதும், தாம் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் நிச்சயம் ரசிகர்களைச் சென்றடையும் என முடிவுக்கு வந்ததாகவும் கூறுகிறார் சிவகார்த்திகேயன்.
“இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் கொஞ்சம் சவாலானவை. எனினும், அனைவருமே சவாலை ஏற்கத் தயாராக இருந்தோம்.
“சோதனைகளைச் சந்தித்தால்தான் சாதனைகள் செய்ய முடியும் என்று தலைவர் ரஜினி சொல்வதுபோன்று இந்தப் படம் அப்படிப்பட்ட சாதனையாகத்தான் இருக்கும் என நம்புகிறேன். காரணம், இந்தப் படம் கொடுத்துள்ள அனுபவங்கள் இவ்வாறு சொல்ல வைக்கிறது,” என்றார் சிவகார்த்திகேயன்.
தொடர்புடைய செய்திகள்
“எனக்கும் அதர்வாவுக்கும் உணவு மூலமாகத்தான் தொடர்பு ஏற்பட்டது. என்னை நன்றாக இனிப்பு சாப்பிட வைத்துவிட்டு அவர் மட்டும் நன்றாக உடற்பயிற்சி செய்துவிடுவார். நான் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனது முதல் படத்தை விளம்பரம் செய்யும் வகையில் கலந்துகொண்டார். இப்போது அவருடன் இணைந்து நடிப்பதைச் சிறப்பானதாகக் கருதுகிறேன்.
“திறமையை மீறி உண்மையாக உழைத்தோம் என்றால் தமிழ் ரசிகர்கள் உயரமான இடத்தில் நம்மை உட்கார வைப்பார்கள். நான் அப்படி வந்தவன்தான்.
“கதாநாயகனாக இத்தனை ஆண்டுகள் நடித்த பிறகு வில்லனாக நடிக்க அதர்வா முடிவு எடுத்தது பெரிய சவால். அவர் இந்தப் படத்தில்தான் வில்லன். எனது கல்லூரி நாள்களில் எப்போதுமே நான் பார்த்து வியந்த கதாநாயகன்தான். அதனால்தான் இந்தப் படத்தில் அவருடைய பெயர் முதலில் இடம்பெற்றிருக்கும்.
“இந்த மாதிரியான படக்குழு, நல்ல இசையமைப்பாளர், நல்ல ஒளிப்பதிவாளர் எல்லாமே அமைந்திருப்பது அந்த பராசக்தியின் அருள் என்று நினைக்கிறேன்,” என்றார் சிவகார்த்திகேயன்.
இந்தப் படம் கடந்த 1960களில் தமிழகத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது. முக்கியமான பிரச்சினை குறித்து அலசும் திரைக்கதையில் காதல், வீரம், பாசம் ஆகியவற்றுக்கும் இடம் இருக்குமாம்.
பொங்கல் பண்டிகைக்கு ‘பராசக்தி’ படம் நல்ல கொண்டாட்டமாக இருக்கும் என்கிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தின் கதையை இயக்குநர் சுதா கொங்கரா பத்து நிமிடங்கள்தான் விவரித்தாராம். அடுத்த நிமிடமே தம்மிடம் அதற்கு முன்பு சுதா கூறிய இரு கதைகளை விட்டுவிட்டு இந்தக் கதைக்குப் பச்சைக்கொடி காட்டியுள்ளார் சிவா.
“ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ‘பராசக்தி’ குறித்து பேச்சு தொடங்கியது. ஜிவி பிரகாஷ் நல்ல நண்பர். அவர் மூலம்தான் ‘மண்டாடி’ பட இயக்குநர் மதிமாறனைச் சந்தித்தேன். அவர் பல நல்ல கதைகளை வைத்துள்ளார். நான் சந்தித்தபோது 1960களில் நடக்கும் கதையை பல வரலாற்று நிகழ்வுகளுடன் கோத்து அடிப்படை அமைத்துக்கொடுத்தார். அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்தோர்களின் அனுபவங்களும் கைகொடுத்தன,” என்றார் சுதா கொங்கரா.

