முன்னணி நாயகி எனப் பெயர் எடுக்காவிட்டாலும், நல்ல நடிகை என்ற பெயரைத் தாம் பெற்றிருப்பதும் அதைத் தக்கவைத்திருப்பதும் மகிழ்ச்சி அளிப்பதாகச் சொல்கிறார் நடிகை சாந்தினி தமிழரசன்.
14 ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருகிறார் இவர். ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்காமல், ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான வேடங்களைத் தேர்வு செய்ததுதான், தனது பயணம் இதுநாள் வரை நீடிக்க முக்கிய காரணம் என்கிறார் சாந்தினி.
“எவ்வளவுதான் வித்தியாசமான வேடங்களில் நடித்தாலும் நான் எதிர்பார்த்த வெற்றியும் புகழும் கிடைக்கவில்லை. அதனால்தான் இடையில் சிலகாலம் சின்னத்திரை பக்கம் சென்றுவிட்டேன். அங்கு இரண்டு தொடர்களில் நடித்தது சற்று சவாலான, ஆபத்தான முடிவுதான்.
“வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்துவிட்டால் மீண்டும் முடிவை மாற்றிக்கொண்டாலும் பலன் இருக்காது என்பார்கள். பிறகு சின்னத்திரையில்தான் நீடிக்க வேண்டி இருக்கும். ஏனெனில், நம்மையும் தங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து ஆதரிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கிடைப்பார்கள்.
“நான் எடுத்த துணிச்சலான முடிவால் ரசிகர்களின் ஆதரவு கிடைத்தது. அதனால்தான் மீண்டும் என்னால் திரையுலகுக்கு வர முடிந்தது,” என்று சொல்லும் சாந்தினி, தற்போது ஜே.எஸ்.கே.சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் ‘ஃபயர்’ என்ற படத்தில் நாயகியாக நடித்து முடித்துள்ளார்.
அடுத்து அரவிந்த்சாமி, சிம்ரனுடன் ‘வணங்காமுடி’ படத்திலும், ஸ்ரீகாந்துடன் ஒருபடம், நரேனுடன் ஒரு படம், இரண்டு இணையத் தொடர்கள் என அடுத்த ஆண்டு முழுவதும் படபிடிப்பில்தான் இருப்பாராம்.
தமிழ்த் திரையுலகில் தமக்கென எந்தவோர் இடத்தையும் தாம் எதிர்பார்க்கவில்லை என்றும் தனக்கு இலக்குகள் ஏதுமில்லை என்றும் குறிப்பிடுபவர், சினிமாவில் நடிக்க தனக்கு வாய்ப்பு கிடைத்ததே பெரிய அதிர்ஷ்டம்தான் என்றும் கூறுகிறார்.
“தொடக்கத்தில் கிடைத்த வாய்ப்புகளைத் தக்கவைத்துக் கொண்டிருப்பேன். இப்போது நானே கதைகளைத் தேர்வு செய்து நடிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளேன். இதன் மூலம் என்னுடைய கதாபாத்திரங்கள் குறித்து ரசிகர்களுக்குத் தெரியவந்துள்ளது.
“எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் நடிக்க வந்தேன். எனவே கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி முன்னேறிச் செல்ல வேண்டும் என்பது மட்டுமே எனது ஒரே இலக்கு.
“பள்ளிப் பருவத்திலேயே எதைக் கொடுத்தாலும் அதை மனப்பாடம் செய்யும் திறமை இருந்தது. அந்த திறமைதான் பல மொழிகளிலும் வசனங்களை மனனம் செய்து நடிக்க உதவியாக இருந்தது.
“இப்போது சில மொழிகளைக் கற்று வருகிறேன். வசனங்களை மனனம் செய்து நடிப்பதைவிட நல்ல கதைகள் என்று வரும்போது, அதைப் புரிந்துகொண்டு நடிப்பதுதான் நல்லது எனக் கருதுகிறேன்,” என்று கூறும் சாந்தினிக்குத் திருமணமாகிவிட்டது.
இவரது கணவர் வேறு துறையைச் சார்ந்தவராக இருந்தாலும், சாந்தினியை நன்கு புரிந்து கொண்டுள்ளாராம். இருவருமே குடும்பம் வேறு, தொழில் வேறு என்ற அடிப்படையில் புரிந்துணர்வுடன் வாழ்வதாகச் சொல்கிறார்.
“பல வகையிலும் என் கணவர் எனக்கு உதவிகரமாக இருக்கிறார். 14 ஆண்டுகால சினிமா பயணத்தில் எந்தக் கட்டத்திலும் பொறுமை இழந்துவிடக்கூடாது, காத்திருப்பு என்பது மிகவும் அவசியம் என்பதே நான் கற்றுக்கொண்ட பாடம்.
“அனைத்துக்கும் மேல் மனதுக்குப் பிடித்த ஒரு விஷயத்தை ஆத்மார்த்தமாகச் செய்யும்போது அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன்,” என்கிறார் சாந்தினி தமிழரசன்.

