தமிழ்த் திரையுலகத்தின் முதல் திருநங்கை இயக்குநர் எனப் பெயர் வாங்கியுள்ளார் சம்யுக்தா விஜயன்.
இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நீல நிறச் சூரியன்’ கோடம்பாக்கம் வட்டாரங்களில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
கீதா கைலாசம், கஜராஜ், மஷாந்த் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை, மாலா மணியன் தயாரித்துள்ளார். ஸ்டீவ் பெஞ்சமின் இசையமைத்துள்ளார். அக்டோபர் 4ஆம் தேதி இப்படம் திரைகாண உள்ளது.
ஓர் ஆண், பெண்ணாக மாற விரும்புவது குறித்து மட்டுமல்லாமல், நம் சமுதாயம் அவர்களை எப்படிப் பார்க்கிறது என்பதை அலசும் விதமாக இப்படத்தை தாம் உருவாக்கியுள்ளதாகச் சொல்கிறார் சம்யுக்தா.
“மேலும் அனைத்தையும் கடந்து திருநங்கைகள் எவ்வாறு நினைத்ததைச் சாதிக்கிறார்கள் என்பதையும் காட்சிப்படுத்தியுள்ளோம்.
“எனது அனுபவத்தில் நான் தெரிந்துகொண்ட உண்மைகளை நாடகத்தன்மை இன்றி திரையில் வெளிப்படுத்த விரும்பினேன், அதுதான் இந்தப்படம்.
“பல உலகத் திரைப்பட விழாக்களில் பங்கேற்று பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது. தமிழ் ரசிகர்களும் நல்ல வரவேற்பு அளிப்பார்கள் என எதிர்பார்க்கிறேன்,” என்கிறார் சம்யுக்தா விஜயன்.