1950, 60களில் கவியரசு கண்ணதாசனின் சோக, தத்துவப் பாடல்கள் யாவும் மிகவும் பிரபலமானவை.
யாருக்கு என்ன சங்கடம், சிக்கல் வந்தாலும் அவருடைய பாடல்களில் ஏதாவது ஒன்று சம்பந்தப்பட்ட அந்த மனிதருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்திருக்கும்.
ஆனால், அவர் கைவண்ணத்தில் வந்த ஒரு நகைச்சுவைப் பாடல் இன்றளவும் பலரையும் துள்ளிக் குதிக்க வைக்கும்.
அந்தப் பாடலால் அன்று வெளிவந்த அந்தப் படமும் சிறப்பாகப் பேசப்பட்டது.
அதுமட்டுமல்ல, இயக்குநர் ஸ்ரீதர் தயாரித்த அந்தப் படத்தின் பெயரே அந்தப் பாடலை வைத்துத்தான் வந்தது.
ஆம் 1964ஆம் ஆண்டு வெளிவந்த ‘காதலிக்க நேரமில்லை’ என்ற அந்தப் படம் பல நகைச்சுவைப் படங்களுக்கு முன்னோடி.
திரைப்பட நட்சத்திரங்களான ரவிச்சந்திரன், காஞ்சனா போன்றோருக்கு அதுதான் முதல் படம்.
புதுமை விரும்பியான இயக்குநர் ஸ்ரீதர், புதுமுகங்களையும் நடிகர்கள் பாலையா, நாகேஷ் இருவரையும் நம்பியே படத்தை எடுத்தார்.
தொடர்புடைய செய்திகள்
அந்தப் படத்தில் சினிமா படம் எடுப்பதற்காக பணம் கேட்டுத் தனது தந்தையைத் தொந்தரவு செய்யும் நாகேஷ், தான் எடுக்கப்போகும் படத்தின் கதையைத் தந்தைக்குச் சொல்கிறேன் என்று கூறி பேய்க் கதை ஒன்றைச் சொல்கிறாரே, அதையே மையமாகக் கொண்டு இன்றும் பல படங்களில் நகைச்சுவை காட்சி அமைக்கப்படுகிறது.
அந்தப் படத்தில் காலம் காலமாகப் பேசப்படுவதே படத்தின் நகைச்சுவை கலந்த வசனம், அதை நாகேஷ் சொல்லும் விதம், நாகேஷ்-பாலையா நடிப்பு, அதில் வரும் நான் கூறும் பாடல்.
படத்தின் கதாநாயகனாக அறிமுகம் ஆகும் ரவிச்சந்திரன் தனது காதலியை (பாலையாவின் மகள் ராஜஸ்ரீயை) அடைய முத்துராமனை தனது வயதான தந்தையாக நடிக்கச் சொல்வார்.
ஊட்டியில் இருக்கும் பாலையாவின் வீட்டிற்குச் சென்றால் அங்கு தனது காதலிதான் (காஞ்சனா) பாலையாவின் மூத்த மகள் என்பதை அறிந்து அவரிடம் வயோதிகராகவே தனது காதல் விளையாட்டை ஆரம்பிப்பார்.
ஒரு நாள் ‘பிக்னிக்’ போகலாம் என்று ஆரம்பித்து ரவிச்சந்திரன்-ராஜஸ்ரீ ஜோடியுடன் முத்துராமன், காஞ்சானாவும் செல்கின்றனர்.
அங்குதான் தனது காதலை வெளிப்படுத்தும் விதமாக முத்துராமனுக்காக கண்ணதாசன் வடித்த பாடல் இடம்பெறுகிறது.
அது வெறும் பாடலல்ல. காதல் வயப்படுவோரை சிரிக்க, சிந்திக்க வைக்கும் பல அற்புதமான கருத்துகளைக் கண்ணதாசன் அதில் கூறியுள்ளார்.
இதோ அந்தப் பாடல்:
“காதலிக்க நேரமில்லை, காதலிப்பார் யாருமில்லை, வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை. பஞ்சணையும் கண்டதில்லை, பால், பழம் குடித்ததில்லை, வஞ்சி உன்னைக் காணும்வரை மனதும் துடித்ததில்லை.”
வயோதிக வேடமிட்ட காதலன் இல்லற வாழ்க்கையை அனுபவிக்கவில்லை என்பதை கண்ணதாசன் எவ்வளவு எளிமையாக, சுருக்கமாக விரசமே தட்டாதவாறு சொல்வதைக் கவனியுங்கள்.
இனி, அடுத்து வரும் பாடல் வரிகள் இதைவிட சுவையானவை.
“பஞ்சுபோல் நடை மெலிந்து, பார்வையும் குழி விழுந்து, ரெண்டுங் கெட்ட வேளையிலே கண்டேனே உன்னையடி, கண்டேனே உன்னையடி.”
அதாவது பஞ்சணை அனுபவம் இல்லாத இவருக்கு நடை பஞ்சுபோல் மெலிந்து விட்டதாம், பார்வையும் கெட்டு கண்கள் குழி விழுந்த நிலையில் தனக்கு மனம் ஒத்தவளைக் கண்டாராம்.
பல வேளைகளில் இங்கிருப்பதா, அங்கு செல்வதா, இதைச் செய்வதா; இல்லை அதைச் செய்யலாமா எனத் தவிக்கும் நிலையை ரெண்டுங்கெட்டான் நிலை அல்லது இரண்டும் கெட்ட நிலை என்று கூறுவதுண்டு.
அதையே கண்ணதாசன், கதாநாயகனின் நடையையும் பார்வையையும் இணைத்து இரண்டும் கெட்ட வேளையிலே என்ற வரிகளாகச் சேர்த்துவிட்டார்.
அடுத்து வரும் பாடல் வரிகள், காதலன் தான் வயோதிகனாக இருந்தாலும் தனக்கும் காதல் வரும், அந்தக் காதல் வாழ்க்கையும் இளவயதுக் காதலைவிட சுவையான ஒன்றுதான் என்று கூறுகிறான்.
“காயிலே சுவைப்பதில்லை, கனிந்தபின் கசப்பதில்லை, நோயில்லா உடலிருந்தால் நூறு வரை காதல் வரும்..”
இதற்குப் பின் வரும் வரிகள் இன்னும் சிறப்பானவை.
இன்று சில பெண்கள் தங்கள் காதலர்களிடம் மாமியார், மாமனாருடன் சேர்ந்து வாழ முடியாது என அடம்பிடித்து தனிக்குடித்தனம் போக வேண்டும் என விடாப்பிடியாக இருப்பதைக் காண முடிகிறது. இதற்கு ஏற்றாற்போல் படத்தின் காதலனும்,
“மாமியார் கொடுமை இல்லை, மாமனார் யாருமில்லை, இந்த சாமியை மணம் முடித்தால் சந்தோஷம் குறைவதில்லை,” என்று பாடுகிறான்.
1964ஆம் ஆண்டிலேயே வருங்கால குடும்ப வட்டம் எப்படி இருக்கும் என்பதைக் கூறும் கவியரசர் உண்மையிலேயே தீர்க்கதரிசிதான்.
கூட்டுக் குடும்பம், பெரியப்பா, சித்தப்பா பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடி இன்பமாக காலம் கழிக்கும் அந்த நிலை இனி என்றென்றும் இருக்கப்போவது இல்லை என்ற யதார்த்த நிலையை அன்றே கணித்த கண்ணதாசன் எப்படிப்பட்ட சிந்தனைவாதி என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.
இறுதியில் காதலன் தன் வேடத்தைக் கலைத்து காதலிக்கு தனது உண்மையான தோற்றத்தைக் காட்டி, “காதலிக்க நேரமுண்டு, கன்னியுண்டு காளையுண்டு..” என்று பாடி முடிக்கிறாான்.
அந்தப் பாடலைக் கேட்டு இன்புறுங்கள். அந்தப் பாடல் காட்சியில் இடம்பெற்ற முத்துராமன், காஞ்சனா நடிப்பு இன்னமும் என் கண்முன் நிற்கிறது.

