கவிஞர் கண்ணதாசன் வாழ்க்கை துன்பம் நிறைந்தது. அதில் பெரும் பங்கு வகித்தது அவரது அரசியல் வாழ்க்கை. போதாக் குறைக்கு அவருக்கு இருந்த குடிப்பழக்கம், உணவுப் பழக்கம், போதை மருந்துகள் சாப்பிடும் பழக்கம் என எல்லாமாகச் சேர்ந்து அவருடைய வார்த்தைகளிலேயே (மனவாசத்தில்) கூற வேண்டுமானால், “ என்னைப் பிறரும் கெடுத்து, நானும் கெடுத்துக்கொண்ட பிறகு மிச்சமிருக்கும் கண்ணதாசனையே இப்போது சந்திக்கிறீர்கள்.
இந்த மிச்சமே இவ்வளவு பிரகாசமாக இருக்குமானால் எல்லாம் சரியாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?”
கவிஞரின் மனம் கவர்ந்த காமராஜரையே அவரது நினைவுகள் சுற்றிச் சுற்றி வந்தன. அதன் விளைவுதான் அவர் பட்டணத்தில் பூதம் படத்தில் இயற்றிய பாடலின் தொடக்க வரிகள் இவ்வாறு அமைந்தது,
“ அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி
என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி...”
பின்னர் சிவகாமியின் செல்வன் படத்தில்,
“எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே..”
என்று தொடங்கும் பாடலில்,
தொடர்புடைய செய்திகள்
“சிவகாமி பெற்றெடுத்த செல்வனல்லவோ
நாளை இந்த மண்ணை ஆளும் மன்னல்லவோ...”
என்று தலைவர் காமராஜரின் தாயான சிவகாமி அம்மாளின் பெயரைக் குறிப்பிட்டு பாடல் வரிகளை அமைத்தார்.
இப்படி பூடகமாக தன்னை ஈர்த்த தலைவர் காமராஜரைப் போற்றிப் புகழ்ந்த கவிஞர், 1973ஆம் ஆண்டு வெளிவந்த பட்டிக்காடா பட்டணமா படத்தின் ஒரு பாடலை, கிட்டத்தட்ட அந்த பாடல் முழுவதையுமே தலைவர் காமராஜருக்கு அர்ப்பணித்தார் என்றால் அது மிகையாகாது.
அந்தப் பாடல் வரிகளில் தலைவர் காமராஜர் மீண்டும் முதல்வராக வேண்டும் என்று கூறியதுடன் பாடலைக் அவருக்காகவும் அவரது கட்சிக்காகவும் எழுதியது போலவே வரிகளை வடித்தார்.
அந்தப் பாடல்,
“அம்பிகையே, ஈஸ்வரியே எம்மை ஆளவந்து கோயில் கொண்ட குங்குமக்காரி,
ஓம் காரியே வேப்பிலைக்காரி, ஒரு உடுக்கையிலே பகை விரட்டும் மத்துமாரி,
அதன்பின் 1971ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த காமராஜ் காங்கிரஸ், எம்ஜிஆரின் அதிமுக அரசியல் களத்தில் முத்திரை பதிக்குமுன், மீண்டும் எழுச்சி பெற்று வந்ததைக் குறிக்கும் விதமாக அடுத்து வரும் வரிகள் அமைந்திருக்கும்.
“வேலையிலே மனசு வச்சோம் முத்துமாரி
இப்போ வெற்றிக்கொடி நாட்டுகிறோம் முத்துமாரி
ஆலமரம் போலிருக்கும் எங்கள் கூட்டம்
எம்மை ஆதரிச்சு வாழ்த்துதடி முத்துமாரி
“ஏழைகளை ஏய்ச்சதில்லை முத்துமாரி
நாங்க ஏமாத்தி பொழச்சதில்லே முத்துமாரி
வாழவிட்டு வாழுகிறோம் முத்துமாரி
இனி வருங்காலம் எங்களுக்கே முத்துமாரி
இதன்பின், முடியும் வரிகளில்,
“சிவகாமி உமையவளே முத்துமாரி
உன் செல்வனுக்கு காலம் வரும் முத்துமாரி
மகராஜன் வாழ்க என்று வாழ்த்துக் கூறி
இந்த மக்களெல்லாம் போற்ற வேண்டும் கோட்டை ஏறி
என்று முடிக்கிறார். காமராஜரின் பெயரை மிக அழகாக மகராஜன் என்று மாற்றி
தலைவரின் தாயார் பெயரில் ஆரம்பித்து காமராஜர் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்ற தனது ஆசையைக் கூறி முடிக்கிறார் கவிஞர்.
இப்படி காமராஜ் மீது மாறாத அன்பைப் பொழிந்த கவிஞர் கண்ணதாசன்
காமராஜ் அவர்களின் இறப்பைத் தாங்க முடியாதவராக,
“வசந்தத்தின் வாயிலில் நுழைய வேண்டிய வயதில்
சிறையில் நுழைந்து சித்திரவதைப்பட்டு சீரழிந்தவனும் மற்றவர்களும் ஒன்றுதானா..”
என்று இறைவனைப் பார்த்துக் கேட்கிறார். அந்த வரிகள் பலரது மனத்தில் நீங்கா இடம் பெற்றுவிட்டன என்று சொல்லலாம்.