தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அண்ணன் என்னடா, தம்பி என்னடா அவசரமான உலகத்திலே...

4 mins read
கவிஞர் கண்ணதாசன் கவிச்சுவை
188f458c-6545-4058-b9da-ef09118674ea
‘பழநி’ படத்தில் வரும் காட்சி. - படம்: ஊடகம்

சென்ற வாரம் திமுக நிறுவனர் அறிஞர் அண்ணா மேல் உள்ள கோபத்தில் கவிஞர் கண்ணதாசன், அவரைப் பாடல் வரிகளில் வம்புக்கு இழுத்ததைப் பார்த்தோம். அறிஞர் அண்ணா மட்டுமல்ல, கவிஞருக்குக் கோபம் வந்தால் அவர் யார், எது என்று பார்க்க மாட்டார். அவருக்கு இருக்கும் ஆயுதத்தைக் கொண்டு திட்டித் தீர்த்து விடுவார்.

கவிஞர் கண்ணதாசனின் வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகம் என்று பலர் கூறுவர். அவர் மது, தூக்கப் பிரியர். சுருங்கச் சொன்னால், அவர் யோகியல்ல, போகி.

இப்படித்தான் அவருக்கு வெளிநாட்டு மதுபானப் புட்டி ஒன்று விலைக்கு வந்தபோது, அதை வாங்கத் தேவையான பணத்தைத் திரைப்பட செட்டிலிருந்த ஒவ்வொருவரிடமும் அவர்களிடம் இருக்கும் பணத்தைக் கேட்டுப் பெற்றாராம்.

பல்லாயிரக்கணக்கான பாடல்களை எழுதியவரிடம் பணம் இல்லையா என்று கேட்பது எளிது. ஆனால், அவரோ தனது மனவாசம் புத்தகத்தில் கூறியிருப்பதுபோல், அவர் “பிர்லாவைப் போல் சம்பாதித்து, ஊதாரியைப் போல் செலவழித்து, பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல் ஏங்கி நிற்கும் வாழ்க்கையே என் வாழ்க்கையாயிற்று,” என்று வாழ்ந்தார்.

அவருடைய பெண்கள் திருமணத்திற்குக்கூட அண்ணன் ஏ எல் சீனிவசான், சாண்டோ சின்னப்பா தேவர், டி ஆர் ராமண்ணா, நடிகை அஞ்சலிதேவி போன்றோரின் உதவியுடன் நடத்தியிருப்பதாக கவிஞர் கூறியிருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, வெளிநாட்டு மதுபானப் புட்டியை வாங்க தேவைப்பட்ட மீதிப் பணத்தை தமது அண்ணன் ஏ எல் சீனிவாசனிடம் கேட்டுள்ளார். பணம் எதற்கு என்று தெரிந்தவுடன் அண்ணன் பணம் தர முடியாது என்று கூறி கவிஞரைத் தீட்டித் தீர்த்துவிட்டாராம்.

சும்மா விடுவாரா கவிஞர். அதில் பிறந்தது இன்னொரு அண்ணன் பாடல். அதுதான், 1965ஆம் ஆண்டு வந்த ‘பழநி’ படத்தில் வரும் ஒரு பாடல்.

படத்தில் அநியாய ஜமீன்தாருக்கு எதிராகப் போராடும் அண்ணன் சிவாஜியை விட்டுப் பிரிந்து விடுகின்றனர் எஸ் எஸ் ஆர், முத்துராமன் ஆகிய தம்பியர் இருவர்.

அந்த விரக்தி மனோபாவத்தைப் பயன்படுத்தி தமது அண்ணனைத் திட்டித் தீர்த்து விடுகிறார் கவிஞர்.

அந்தப் பாடல்,

“அண்ணன் என்னடா, தம்பி என்னடா அவசரமான உலகத்திலே

ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா காசில்லாதவன் குடும்பத்திலே

தாயும் பிள்ளையும் ஆனபோதிலும் வாயும் வயிறும் வேறடா

சந்தைக் கூட்டத்தில் வந்த மந்தையரை சொந்தம் என்பதும் ஏனடா

கவிஞர் கோபத்தில் எப்படி பாடல் வரிகளை அமைத்திருக்கிறார் என்று பாருங்கள்,

உறவினர்களைச் சந்தைக் கூட்டத்தில் வந்த மந்தையர் என்று கூறுகிறார்.

அடுத்து,

“பெட்டைக் கோழிக்கு கட்டுச் சேவலைக் கட்டி வைத்தவன் யாரடா

அவை எட்டு குஞ்சுகள் பெற்றெடுத்ததும் சோறு போட்டவன் யாரடா

வளர்ந்த குஞ்சுகள் பிரிந்தபோதிலும் வருந்தவில்லையே தாயடா

மனித ஜாதியில் துயரம் யாவுமே மனதினால் வந்த நோயடா

மனதினால் வந்த நோயடா

அண்ணன் என்னடா, தம்பி என்னடா அவசரமான உலகத்திலே...

அதேபோல், மனிதனாகப் பிறந்துவிட்டால் அவன் துன்பம் யாவும் மனதினால் வந்த நோயடா என்றும் கூறுகிறார்.

ஆனால், அடுத்து வரும் வரிகள், பலர் வாழ்வில் இன்றும் நடப்பதுதான்,

“வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய் வந்து சேர்கிறார் பாரடா

கை வறண்ட வீட்டிலே உடைந்த பானையை மதித்து வந்தவர் யாரடா

மதித்து வந்தவர் யாரடா

பணத்தின்மீதுதான் பக்தி என்றபின் பந்தபாசமே ஏனடா

பகைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா

இந்த வரிகள்தான் மனித மனத்தை வருடும் வரிகள்.

பல குடும்பங்களில் ஒருவர் வளமுடன் இருக்கும்போது சூழும் சுற்றம் அவர் நிலைமை தாழ்ந்து விட்டால் அவரை விட்டு ஓடி விடும். இதில் அண்ணன், தம்பி உறவு எப்படிப்பட்டது, எப்படி இருக்க வேண்டும் என்பதையும் கவிஞர் தனது கடைசி வரிகளில் சுருக்கமாகச் சொல்கிறார்.

இந்தப் படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் தெவிட்டாத தேன். படம் தேசிய விருது பெற்றாலும் வசூலில் படுத்துவிட்டது. அதற்கு ஒரு காரணம் அந்தக் காலகட்டத்தில் ரசிகர்கள் மனத்தில் ஏற்பட்ட மாற்றம்தான்.

அந்த ஆண்டு வந்த திருவிளையாடல், எங்க வீட்டுப் பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், அதற்கு முன் வந்த காதலிக்க நேரமில்லை போன்ற படங்கள் கசக்கிப் பிழியும் சோகத்தை விடுத்து மாறுதலான கதை வடிவத்தைக் கொண்டிருந்தன. அந்த நேரமாகப் பார்த்து பண்ணையார் கொடுமை, அதைத் தாங்கும் விவசாயியாக, குடுமியுடன் கிராமத்துக்காரராக வரும் சிவாஜி கணேசனும் படத்தில் ரசிக்கும்படியாக இல்லை.

இந்தப் பாடல் மட்டுமல்ல, படத்தின் எல்லாப் பாடல்களும் என்றென்றும் கேட்டுக் கொண்டிருக்கலாம். அதிலும் குறிப்பாக, நாகேஷ் அவர்களை மாட்டை அடக்கச் சொல்லி அவரை ஜல்லிக்கட்டு மைதானத்தில் முன்னுக்குத் தள்ளும்போது வரும் “அண்ணாச்சி வேட்டி கட்டும் ஆம்பிளையா நீங்க, யாராச்சும் ரோஷமிருந்தா மாட்டுப் பக்கம் போங்க...” பாட்டை எளிதில் மறக்க முடியாது. அந்தப் பாடலில் கவிஞர் மூலம் ஆழ்ந்த கிராமத்து பழக்க வழக்கங்கள், நடப்பு, பேச்சு வழக்கு என அனைத்தையும் அறிய வரும் நமக்கு, அவர் மீதான மதிப்பும் மரியாதையும் பன்மடங்கு கூடும்.

ஒன்று, இரண்டு என்றில்லாமல் இதில் வரும் கவிஞரின் அத்தனை பாடல்களையும் கேட்டு இன்புறுங்கள்.

குறிப்புச் சொற்கள்