சமந்தா தயாரித்த ‘சுபம்’ படம் வசூல் ரீதியில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனால், தொடர்ந்து தான் நடிக்கும் படங்கள், இணையத் தொடர்களில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், சமூக ஊடகங்களில் இடம்பெறும் பாராட்டுகளை எவ்வாறு மனதார ஏற்கிறோமோ, அதேபோல் கேலி, கிண்டல்கள், விமர்சனங்களையும் ஏற்கும் பக்குவம் தேவை என்று அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் சமந்தா.
“என் வாழ்க்கையில் சமூக ஊடகங்கள் நேர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்தின. அங்குதான் நான் அதிகம் மதிப்பிற்குரியவர்களைக் கண்டுகொண்டேன். அவர்கள் என் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பெரிதும் உதவினர்.
“எனவே, சமூக ஊடகங்களில் காணப்படும் கருத்துகள் அனைத்துமே மோசமானவை என்று நான் நினைக்கவில்லை. அதேசமயம் சமூக ஊடகங்கள் உங்கள் வாழ்க்கையை முழுமையாகக் கட்டுப்படுத்த அனுமதித்து விடாதீர்கள்,” என்று கூறுகிறார் சமந்தா.
தற்போது தனது வாழ்க்கை மிக எளிமையான ஒன்றாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றும் உடல்நலத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“வாழ்க்கையில் பல பிரச்சினைகள் இருக்கலாம். ஆனால், உடல்நலம் பாதிக்கப்பட்ட பின், அது மட்டுமே ஒரே பிரச்சினையாகிவிடும் என்பார்கள். எனவே, உடல்நலம் மட்டுமே முக்கியம் என்பதில் தெளிவாக இருக்கிறேன்,” என்றும் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் சமந்தா.