‘எப்போது திருமணம்?’ எனப் பலரும் மாறி மாறி கேள்வி கேட்ட நிலையில், இதோ தனது தலை தீபாவளியைக் கொண்டாட உள்ளார் பிரேம்ஜி.
கங்கை அமரனின் மகன், வெங்கட் பிரபுவின் இளைய சகோதரர், நடிகர் ஆகியவற்றைக் கடந்து, தனது காதல் கணவரான பிரேம்ஜியை மிகவும் நேசிப்பதாகச் சொல்கிறார் மனைவி இந்து.
இருவரும் இன்ஸ்டகிராம் மூலம் அறிமுகமாகி காதலை வளர்த்துள்ளனர்.
“எனக்கு அப்பா மீது மிகுந்த பாசம் உண்டு. சின்னச்சின்ன விஷயங்களில்கூட தனது பாசத்தை வெளிப்படுத்தி நெகிழ வைப்பார் அப்பா.
“கடந்த 2022ஆம் ஆண்டு அப்பா திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்ட பிறகு தனிமை என்னை வாட்டியது,” என்று சோகத்துடன் குறிப்பிடுகிறார் இந்து.
அப்போது இன்ஸ்டகிராமில் அறிமுகமான பிரேம்ஜியிடம் தன் தந்தையின் மொத்த பாசத்தையும் அன்பையும் காண முடிந்ததாகச் சொல்பவர், நட்பாகத் தொடங்கிய அறிமுகம், பின்னர் காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது என்கிறார்.
“அப்பா இறந்த பிறகு பிரேம்ஜி இன்னொரு தந்தையாக எனக்குத் தெரிந்தார். அவரும் தன் தாயாரை இழந்து ஓராண்டுதான் ஆகியிருந்தது. அவரும் தனிமையாக உணர்ந்த அந்தத் தருணம்தான் இருவரையும் இணைய வைத்தது எனலாம்,” என்று சொல்லும் இந்துவுக்கு நகைச்சுவை படங்கள்தான் மிகவும் பிடிக்குமாம்.
திரையரங்குக்குச் சென்று படம் பார்க்கும் பழக்கம் இவரது மொத்த குடும்பத்துக்கும் கிடையாதாம். காதல் திருமணம் என்றால் சம்பந்தப்பட்ட பெண் வீட்டில் எத்தகைய எதிர்ப்புகள் வருமோ அவை அனைத்தையும் தானும் எதிர்கொண்டதாகச் சொல்கிறார் இந்து.
தொடர்புடைய செய்திகள்
குறிப்பாக இவருக்கும் பிரேம்ஜிக்கும் 15 வயது வித்தியாசம் என்பதைச் சுட்டிக்காட்டி இந்துவின் தாய் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால் காதலர்கள் இருவரும் உறுதியாக இருந்ததால் காதல் வெற்றி பெற்றது.
“நான் உறுதியாக இருந்ததால் வேறு வழியின்றி பிரேம்ஜியை என் குடும்பத்தார் ஏற்றுக்கொண்டனர். என் குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளும் விதத்தாலும் தன் அன்பாலும் அனைத்து எதிர்ப்புகளையும் தூள்தூளாக்கிவிட்டார் பிரேம்ஜி,” என்று உற்சாகத்துடன் சொல்கிறார் இந்து.
இயக்குநர் வெங்கட் பிரபுதான், ஒரு அண்ணன் என்ற முறையில் பிரேம்ஜியின் திருமணத்தைச் சிறப்பாக நடத்தி வைத்தாராம்.
மேலும் ஒற்றை ஆளாக இருந்து திருமணத்துக்கான அனைத்து வேலைகளையும் முன்னின்று கவனித்ததும் அவர்தானாம்.
“வெங்கட் பிரபு அண்ணாதான் என் அப்பாவின் இடத்திலும் பிரேம்ஜியின் அம்மா இடத்திலும் நின்று திருமணத்தை நடத்தி வைத்தார். திருமணத்தில் விருப்பம் இல்லாத உறவினர்கள்கூட ஏதோ ஒப்புக்கு வந்த விருந்தாளிகள் போல்தான் நடந்துகொண்டனர்.
“வெங்கட் அண்ணா இல்லையென்றால் தவித்துப்போய் இருப்போம். எங்கள் இருவர் மீதும் அப்படி ஒரு பாசம் காட்டுகிறார். அவருடைய சமையலுக்கு நான் மிகப்பெரிய ரசிகை.
“கடந்த ஓராண்டுக்கு மேலாக பிரேம்ஜி உடல் இளைத்துக் காணப்படுவதை வைத்து சமூக ஊடகங்களில் வெளிவரும் விமர்சனங்களை யாரும் நம்ப வேண்டாம்,” என்று சொல்லும் இந்து, தாயாரின் இழப்பை பிரேம்ஜியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்கிறார்.
“அவர் ‘கோட்’ படத்தில்கூட சற்று சோர்வாகவும் உடல் மெலிந்தும்தான் காணப்பட்டார். இதை வைத்து வதந்தி பரப்பினர். நேரத்துக்குச் சரியாகச் சாப்பிடாமல், தூங்காமல் இருந்ததுதான் அவரது உடல் இளைப்புக்குக் காரணம். இப்போது மூன்று வேளையும் வீட்டுச் சாப்பாடுதான். அதனால் மீண்டும் பழையபடி உடல் எடை கூடத் தொடங்கிவிட்டார்.
“தன் நண்பர்களுடன் கேளிக்கை, சந்திப்பு நிகழ்வுகளுக்கு அவர் செல்வதில்லை. மாறாக, தினமும் கோவில், படப்பிடிப்பு, வீடு என்று மட்டுமே அவரது பொழுது பெரும்பாலும் கழிகிறது. இது அவரது நண்பர்களை வெகுவாக ஆச்சரியப்படுத்தி உள்ளது.
“பிரேம்ஜியிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், நண்பர்கள், குடும்பத்தார் என அனைவருக்கும் மகிழ்ச்சியையும் தந்திருக்கிறது,” என்கிறார் இந்து.