நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் மலேசியாவில் உருவான ‘ஏஸ்’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விஜய் சேதுபதி படத்தில் நடித்த கலைஞர்களைப் பற்றி பாராட்டிப் பேசினார்.
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏஸ்’ ( ACE) எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு, ருக்மணி வசந்த், திவ்யா பிள்ளை, பப்லு பிரிதிவிராஜ், பி.எஸ்.அவினாஷ், முத்துக்குமார், ராஜ்குமார், டெனிஸ் குமார், ஆல்வின் மார்ட்டின், பிரிசில்லா நாயர், ஜாஸ்பர் சுப்பையா, கார்த்திக் ஜே, நகுலன், ஜாக்கிநாரீஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
கிரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் பாடல்களுக்கும் சாம் சி. எஸ். படத்திற்கான பின்னணி இசையையும் அமைத்திருக்கிறார்கள். பென்னி ஆலிவர் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள ஏ.கே.முத்து கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார்.
இம்மாதம் இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிகை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில், மே 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
படத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி பேசுகையில், “இங்கு வந்திருக்கும் பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
“நான் வாய்ப்பு தேடி அலைந்த காலத்தில் என்னை நம்பி, என் திறமையை நம்பி என்னைப் படத்தில் சிபாரிசு செய்தவர் ஆறுமுகம். நன்றாக இருக்கும்போது வரும் உதவிகள் வேறு. ஆனால், நம்மை யாரென்றே தெரியாத காலத்தில், நம் மீது யாரோ ஒருத்தர் வைக்கும் நம்பிக்கைதான் மிகப்பெரியது. அதற்காக ஆறுமுகத்திற்கு நன்றி.
“இசையமைப்பாளர் ஜஸ்டின். எனக்கு இவரை மிகவும் பிடிக்கும். ஏனென்று தெரியாது. அவர் நன்றாக இசையமைப்பார் என்பதால் இல்லை. அவரைச் சந்தித்த முதல் நாளிலிருந்தே அவரை எனக்குப் பிடிக்கும். ஒரு முறை கீரவாணி அவரைப் பத்தி பேசியதைக் கேட்டேன். அவர் கூட பிறந்திருந்தால், அவர் வீட்டினர், எவ்வளவு சந்தோஷப்படுவார்களோ எனக்கு அவருடன் பழகியது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. இவரின் வேலை இந்தப் படத்தில் மிகப் பிரமாதம்.
“அவினாஷ் சார் பார்க்கத்தான் கரடு முரடு. ஆனால், மிகவும் இனிமையானவர்.
“ருக்மணி மிகத் திறமையான நடிகை. மலேசியாவில் ஓர் இடத்தில் படப்பிடிப்பு செய்தோம். அந்த இடத்தை பற்றிய வரலாறே சொன்னார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படி எனக்கேட்டேன். இங்கே படப்பிடிப்பு என்று சொன்னதால் இந்த இடம் பற்றி படித்துவிட்டு வந்தேன் என்றார். இதிலிருந்தே அவர் படத்திற்காக எவ்வளவு தயாராகியிருப்பார் என்று தெரியும். மிக அற்புதமாக நடித்துள்ளார்.
“பப்லு இவர் நல்லவரா? கெட்டவரா? என்றே கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தப் படத்தில் அவருக்கு நல்ல வேடம்.
“யோகிபாபு இந்தப்படத்தில் மற்றொரு கதாநாயகன். அவரைப்பற்றி அண்மையில் தவறான செய்திகள் வருகின்றன. அது உண்மையில்லை. அவர் நல்ல மனிதர். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். இப்படத்தில் அவரின் கதாபாத்திரம் அனைவருக்கும் பிடிக்கும்,” என்றார்.
உடை வடிவமைப்பாளர் பேசுகையில், “எனக்கு இந்த வாய்ப்பை தந்த இயக்குநர், தயாரிப்பாளர் ஆறுமுகத்திற்கு நன்றி. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மிக வித்தியாசமான வகையில் உடை வடிவமைத்துள்ளேன். மலேசியா சென்று அங்கு இருக்கும் வாழ்க்கைக்கு ஏற்ப நாகரிக வாலிபனாக இப்படத்தில் அவரைக் காட்டியுள்ளோம். இப்படம் பெரிய அளவில் வெற்றி பெறும்.
எடிட்டர் பென்னி ஆலிவர் பேசுகையில், “என்னை நம்பி இந்தப் படத்தைத் தந்த இயக்குநர் ஆறுமுகத்திற்கு என் நன்றி. விஜய் சேதுபதி நடிப்பை எடிட் செய்வது மிகவும் கடினம். அவர் அனைத்துக் காட்சிகளிலும் நம்மை பிரமிக்க வைப்பார்.
“எந்த காட்சியை வைக்க வேண்டும், எதை வெட்டவேண்டும் என்று குழப்பமாக இருக்கும். இனிமேலாவது எங்களுக்காகக் கொஞ்சம் சொதப்பி நடித்தால் நன்றாக இருக்கும். ருக்மணி இப்படத்தில் நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.
‘கேஜிஎஃப்’ன் ஆக்ரோஷமான வில்லன் அவினாஷ் இதிலும் ஆக்ரோஷமாக நடித்துள்ளார். அருமையான இசையை ஜஸ்டின் தந்துள்ளார்.
நடிகர் கேஜிஎஃப் அவினாஷ் பேசியபோது, “இந்தப் படத்திற்காக ஆறுமுகம் சார் கால் பண்ணி விஜய்சேதுபதி, யோகிபாபு, ருக்மணி நடிக்கும் படத்தில் உங்களுக்கு ஒரு வேடம் என்றார். நான் உடனே ஒத்துக்கொண்டேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய ஆறுமுகத்திற்கு நன்றி.
“விஜய் சேதுபதி மிக அற்புதமான மனிதர். படப்பிடிப்பு நடக்கும்போது அவரைக் காண ஒரு பெரும் கூட்டம் எப்போதும் காத்திருக்கும். எல்லோரிடமும் பொறுமையாக நின்று பேசுவார். அவரைச் சுற்றி ஓர் அற்புதமான காந்த அலை உள்ளது. அவருடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி. யோகிபாபுவுக்கும் விஜய் சேதுபதிக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரி அற்புதம். இப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும்,” என்றார்.
நடிகர் பப்லு பிரிதிவிராஜ் பேசியபோது, “இயக்குநர் ஆறுமுகம் முதன்முதலில் இப்படத்தில் சிறிய வேடம் என என்னை அழைத்தார். இரண்டு காட்சிதான் என்றார். விஜய் சேதுபதி படம் என்றவுடன் உடனே நடிக்கிறேன் என்றேன். ஆனால், சில நாள்களில், என் வேடம் முக்கியமான கதாபாத்திரமாக மாறிவிட்டது.
“அது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. படப்பிடிப்பில் என்னைப் பார்த்தவுடன், விஜய் சேதுபதி உங்களுக்கு நல்ல காலம் தொடங்கிவிட்டது என்றார். அதைப்போல நடந்து விட்டது.
“இப்போது தமிழில் 6 படங்களில் நடிக்கிறேன். தெலுங்கில் 22 படம் செய்கிறேன் மகிழ்ச்சி. இந்தப்படத்தில் வேலை செய்தது மறக்க முடியாத அனுபவம். இப்படத்தில் நானும் இருப்பது பெருமை,” என்றார்.
நடிகை ருக்மணி வசந்த் பேசும்போது, “‘ஏஸ்’ என் முதல் தமிழ்ப்படம். விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்தது மிகுந்த மகிழ்ச்சி. படத்தில் அனைவரும் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார்கள். அனைவருக்கும் நன்றி. இதுவரை நான் மிக அழுத்தமான கதாபாத்திரங்கள்தான் அதிகம் செய்துள்ளேன். ஆனால், ‘ஏஸ்’ கொஞ்சம் நகைச்சுவை கலந்த அழகான படம். கதை சொல்ல ஆரம்பித்ததிலிருந்து, படம் முடியும் வரை எனக்கு மிகவும் ஆதரவாக இருந்த இயக்குநர் ஆறுமுகத்திற்கு நன்றி,” என்றார்.
இயக்குநர் ஆறுமுக குமார் பேசியபோது, “விஜய் சேதுபதி என் மீது எவ்வளவு அக்கறை எடுத்துக் கொண்டுள்ளார் என வார்த்தைகளால் சொல்ல முடியாது. ருக்மணி நடிப்புத் திறமை பற்றி சொல்லத் தேவையில்லை. இப்படத்தில் அவரை நடிக்க கேட்டபோது, எனக்குத் தமிழ் வராதே எனத் தயங்கினார். பரவாயில்லை இங்கு எல்லோருமே தமிழ் தெரியாமல்தான் நடிக்கிறார்கள் என சமாதனப்படுத்தினேன்.
“படப்பிடிப்பில் வசனம் பற்றி ஆர்வமாக கேட்டுக்கொண்டே இருப்பார். அவர் அழகானவர் மட்டும் இல்லை, அருமையான நடிகையும் ஆவார். இந்தப்படத்தில் யோகிபாபுவிற்கு நல்ல கதாபாத்திரம்,” என்றார்.
தொடர்ந்து பலரும் படத்தைப் பாராட்டிப் பேசினர். ‘ஏஸ்’ திரைப்படம் வரும் மே 23ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.