எண்ணிக்கையைவிட தரம்தான் முக்கியம்: இவானா

எண்ணிக்கையைவிட தரம்தான் முக்கியம்: இவானா

படம்: விகடன்

13 Nov 2026 - 4:32 pm

2 mins read

‘நாச்சியார்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமாகி, ‘லவ் டுடே’, ‘டிராகன்’ ஆகிய படங்களில் நடித்துத் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வரும் நடிகை இவானா, அண்மைய நேர்காணலில் தனது திரைப்படப் பயணம், தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பல்வேறு சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த ஆண்டு தனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் அமைதியையும் கொடுத்ததாகக் கூறியுள்ள இவானா, குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட்டதை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.

“என் சகோதரி லயாவுக்கு ஆண் குழந்தை பிறந்ததால் வீடே கொண்டாட்டமாக இருந்தது. மேலும், கனடாவுக்கு மேற்கொண்ட பயணம் இனிய அனுபவமாக அமைந்தது.

“எந்தவொரு செயலையும் அவசரப்படாமல் நிதானமாகவும் பொறுமையாகவும் செய்தால், சிறந்த பலன் கிடைக்கும் என்பதை இந்த ஆண்டில் கிடைத்த அனுபவங்கள் மூலம் கற்றுக்கொண்டேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை மலையாளப் படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடிய அவர், ‘லவ் டுடே’ படம் வெளியான தீபாவளித் தருணங்களையும் நண்பர்களுடன் சென்னையில் கொண்டாடிய பண்டிகை நாள்களையும் உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவாவுடன் இவானா இணைந்து நடித்துள்ள ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

காதல் முதல் திருமணம் வரையிலான காலகட்டத்தில் நடக்கும் சுவாரசியங்களையும் சிக்கல்களையும் நகைச்சுவையாகச் சொல்லும் அப்படத்தில், ஒரு துறுதுறுப்பான கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

“ஜீவாவின் நகைச்சுவை உணர்வும் சக நடிகர்களுக்கு அவர் கொடுக்கும் ஒத்துழைப்பும் வியக்க வைக்கிறது. அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்,” எனப் பாராட்டியுள்ளார் இவானா.

மேலும், கார்த்திக் ராஜு இயக்கத்தில் வெளியான ‘சிங்கில்’ படத்தின் மூலம் தெலுங்கிலும் தடம்பதித்துள்ள இவானா, அப்படக்குழுவில் பலர் தமிழ் பேசியதால் சொந்த ஊரில் நடித்த உணர்வு ஏற்பட்டதாகக் கூறுகிறார். தற்போது தெலுங்கு மொழியைச் சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டு, தொடர்ந்து டோலிவுட்டிலும் நடிக்க ஆர்வமாக உள்ளாராம்.

தீவிர உணவுமுறைகளைப் பின்பற்றாத இவானாவுக்கு, கேரளப் பாரம்பரிய உணவுகளான கஞ்சி, அவியல், பொரியல் ஆகியவை மிகவும் பிடிக்குமாம். உடற்பயிற்சிக்கூடம் செல்வதைவிட நாள்தோறும் நீச்சல் பயிற்சி மேற்கொள்வதையே அவர் விரும்புகிறார்.

தமிழ்த் திரையுலகுக்கு வந்து எட்டு ஆண்டுகள் ஆனபோதிலும் குறைவான படங்களிலேயே நடித்திருப்பது குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்.

“திரைப்படப் பின்னணி இல்லாத குடும்பத்திலிருந்து வந்த எனக்கு, ‘லவ் டுடே’ நிகிதா கதாபாத்திரம்மூலம் கிடைத்த அடையாளம் பெரிய வரம். நிறைய படங்களில் நடிப்பதைவிட, மக்கள் மனத்தில் நிற்கக்கூடிய தரமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதையே விரும்புகிறேன்.

“பத்து ஆண்டுகள் கழித்தும் ‘இவானா என்றொரு நடிகை இருந்தார்’ என ரசிகர்கள் நினைவுகூர வேண்டும் என்பதே என் இலக்கு,” என நேர்காணலில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார் இவானா.

குறிப்புச் சொற்கள்
நடிகைதிரைப்படம்தெலுங்கு