ஆஷா போஸ்லேக்கு இசை அஞ்சலி செலுத்தும் ரகுமான்

ஆஷா போஸ்லேக்கு இசை அஞ்சலி செலுத்தும் ரகுமான்

கோப்புப் படம்: தி ஹன்ஸ் இந்தியா

21 Aug 2026 - 4:21 pm

1 mins read

இந்தியத் திரையுலகின் முன்னணிப் பின்னணிப் பாடகியான ஆஷா போஸ்லேயின் கலைப்பணியைக் கௌரவிக்கும் வகையில், இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் ஒரு சிறப்பு இசைக் காணொளியை உருவாக்கி, நினைவஞ்சலி நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி, தமது 92வது வயதில் மாரடைப்பு காரணமாக மும்பையில் காலமானார் ஆஷா போஸ்லே.

அவர் கிட்டத்தட்ட 80 ஆண்டுகால நீண்ட இசைப் பயணத்தில், 20க்கும் மேற்பட்ட மொழிகளில் 12,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடி, கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்துள்ளார். தமிழ்த் திரைப்படங்களிலும் பல வெற்றிப் பாடல்களைப் பாடி ரசிகர்களைக் கவர்ந்தவர்.

இசைத் துறைக்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பைப் போற்றும் வகையில், ஏ.ஆர். ரகுமான் இந்தச் சிறப்புக் காணொளியை வடிவமைத்து வருகிறார்.

இந்திய அளவில் பல முன்னணித் திரை நட்சத்திரங்கள் இதில் பங்கேற்க உள்ளனர். குறிப்பாக, தமிழ்த் திரையுலகின் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், ‘உலகநாயகன்’ கமல்ஹாசன், பாலிவுட் நடிகர் சல்மான் கான், பிரபல இயக்குநர் கரண் ஜோஹர் ஆகியோர் இந்தப் பணியில் இணைந்துள்ளனர்.

இதுகுறித்து தமது சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஏ.ஆர். ரகுமான், “கோடிக்கணக்கான ரசிகர்களால் நேசிக்கப்படும் ஒரு ஜாம்பவானை மற்றொரு ஜாம்பவான் கௌரவிப்பது உண்மையிலேயே நெகிழ்ச்சியான தருணம்,” என்று குறிப்பிட்டு, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களுக்கும் தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்