தேசிய விருது பெற்றவர் எனும் அலட்டல் இல்லாமல் நட்பாகவும் இயல்பாகவும் இருப்பவர் ராகுல் ரவீந்திரன்.
தெலுங்கில் ‘சி லா ஸோ’, படத்திற்குச் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கும் ராகுல், இப்போது ராஷ்மிகா மந்தனாவை வைத்து ‘தி கேர்ள் ஃப்ரெண்ட்’ படத்தை இயக்கியிருக்கிறார்.
ராஷ்மிகாவைப் பற்றி பாராட்டிப் பேசும் போட்டி வைத்தால் இன்றைய தேதியில் ராகுலுக்குத்தான் முதல் பரிசு கிடைக்கும் போலிருக்கிறது. அந்த அளவுக்குத் திகட்டத்திகட்டப் பாராட்டுகிறார்.
“நான் அவரைப் பற்றி சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் மிகவும் பொருத்தமானவர் ராஷ்மிகா. ஒரு இயக்குநர் சொல்வதை, எதிர்பார்ப்பதை அப்படியே தன் நடிப்பில் கொண்டு வரும் திறமைசாலி.
“இந்திய சினிமாவில் இப்போது உச்சத்தில் உள்ள நாயகி என்றால் அது ராஷ்மிகாதான். அதற்குக் காரணம், அதிர்ஷ்டமும் அல்ல. அதேசமயம் இது தற்செயலாக நடந்த விஷயமும் கிடையாது. சரியான கதைத் தேர்வும் கடும் உழைப்பும் அவரது வெற்றிக்குக் காரணம். கதைத்தேர்வில் அவரை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது.
“ஒரு படம் கண்டிப்பாக வெற்றிபெறும் என்று அவரது உள்ளுணர்வு சொல்வதைக் கேட்டு கதையைத் தேர்வு செய்கிறாரோ என்று எனக்கு அடிக்கடி தோன்றும்.
“நடிப்பை மிகத் தீவிரமாக எடுத்துக்கொள்ளும் பெண் ராஷ்மிகா. பல மொழிகளிலும் நடிப்பில் பெயர் வாங்கியவர்,” என்கிறார் ராகுல் ரவீந்திரன்.
ராஷ்மிகாவைப் போல் இயக்குநர்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ள, நட்புக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய நாயகியைப் பார்க்க இயலாது என்றும் சொல்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
‘தி கேர்ள் ஃப்ரெண்ட்’ படத்தில் ராஷ்மிகாவுக்கு மிக அருமையான வேடம் அமைந்துள்ளதாகவும் அவர் தனது கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டி உள்ளார் என்றும் தெலுங்கு ஊடகங்கள் பட வெளியீட்டுக்கு முன்பே அவரைப் பாராட்டிவிட்டன.
இயக்குநர் என்ற வகையில் இந்தப் படத்தின் கதையை ராஷ்மிகாவிடம் விவரித்தது ராகுல் அல்ல. இணைத் தயாரிப்பாளரான தீரஜ் மொகில்னேனிதான் கதை சொல்லியிருக்கிறார்.
ராஷ்மிகா உடனே சம்மதம் தெரிவிக்க, பல மொழிகளிலும் அவர் முன்னணியில் இருப்பதால், படத்தை ஐந்து மொழிகளிலும் வெளியிடத் திட்டமிட்டதாகச் சொல்கிறார் ராகுல். அதே வேகத்தில் படப்பிடிப்புக்கும் போய் படத்தையும் அழகாக நிறைவு செய்துவிட்டனர்.
படத்தில் இடம்பெறும் ‘நதியே’ பாடலுக்கு இளையர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ராஷ்மிகாவும் நாயகன் தீக்ஷித்தும் போட்டி போட்டு நடனமாடியுள்ள இப்பாடலில் இருவரது உடல்மொழியும் அசத்தல் என்கிறார்கள் ரசிகர்கள்.
இது கல்லூரிப் பின்னணியில் நடக்கும் கதையாம். நாயகன் தீக்ஷித் ஷெட்டியின் தோழிதான் ராஷ்மிகா.
“வாழ்க்கையில் கிடைக்கப்போகும் ‘இணை’ நமக்கு சரியானவர்தானா என்பதை இந்தப் படம் பேசும். முழுத் தெளிவோடு எத்தனை பேர் வாழ்க்கையைத் தொடங்குவார்கள் எனத் தெரியவில்லை. அப்படியோர் விஷயத்தை உணர்வுபூர்வமாகப் பேசியிருக்கிறோம்.
தீக்ஷித் ஷெட்டி இதற்கு முன் கன்னடம், தெலுங்கில் முக்கியமான படங்களில் நடித்தவர். நானியின் ‘தசரா’வில் அவர்தான் இரண்டாவது நாயகன். மேலும், ரோகிணி, அனு இமானுவேல் இருவரும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர்,” என்று சொல்லும் ராகுலும் சிறு வேடத்தில் நடித்துள்ளாராம்.
பின்னணிப் பாடகி சின்மயி இவருடைய மனைவி என்பது பலருக்குத் தெரிந்திருக்கலாம். ‘முத்த மழை’ பாடல் வெற்றிபெற்ற மகிழ்ச்சியை கணவர் முகத்திலும் பார்க்க முடிகிறது.
“ஒரு கணவனாக சின்மயியை நினைத்து மிகவும் பெருமைப்பட்டேன். கிடைக்க வேண்டிய அங்கீகாரம் சற்று தாமதமாகக் கிடைத்தாலும் அழகாக அமைந்துவிட்டது. இவ்வளவு பேர் பாசம் காட்டுவதை நினைக்கும்போது நெஞ்சம் நிறைகிறது,” என்று விகடன் ஊடகப் பேட்டியில் கூறியுள்ளார் ராகுல் ரவீந்திரன்.