நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் காவியத் திரைப்படம் ‘ராமாயணம்- தி ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்’.
இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும் சாய் பல்லவி சீதையாகவும் யாஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் முதல் பாகத்திற்காக ‘ட்ரைப் அம்ரபாலி’ நிறுவனம் 18 மாதங்களில் 4,500 பிரத்யேக ஆபரணங்களை வடிவமைத்துள்ளது.
அயோத்தி, மிதிலை, இலங்கை ஆகிய மூன்று சாம்ராஜ்யங்களின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் நகைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
ராமர் கதாபாத்திரத்தில் தோன்றும் ரன்பீர் கபூருக்காக அவரது சூரிய வம்சத்தைக் குறிக்கும் பிரத்யேக ‘சூரிய முத்திரை’, புனித தாமரை மலர்கள், தர்ம சக்கரக் குறியீடுகள் கொண்ட ஆபரணங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
சீதையாக நடிக்கும் சாய் பல்லவியின் ஆபரணங்கள் பூக்கள், மொட்டுகள், கொடிகளின் உருவங்களை மென்மையாகப் பிரதிபலிக்கின்றன.
மிதிலையின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலை நுணுக்கங்கள் இதில் பயன்படுத்தப்பட்டு, சீதையின் சாந்தமான குணத்திற்கும் இயற்கையோடு இணைந்த எளிமைக்கும் உயிர் கொடுக்கப்பட்டுள்ளது.
ராவணனாக நடிக்கும் யாஷ்க்கு கூர்மையான விளிம்புகள், கனமான தங்க வடிவங்கள், ஆதிக்கத்தை உணர்த்தும் பிரம்மாண்ட அணிகலன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
வெறும் காட்சி அலங்காரமாக இல்லாமல், கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் பண்பாட்டு வேறுபாடுகளையும் விவரிக்கும் முக்கிய கருவியாக இந்த ஆபரணங்கள் உருப்பெற்றுள்ளன.
சென்னையில் நடைபெற்ற இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் நடிகர் நடிகைகள் ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பேசிய சாய் பல்லவி, “ராமாயணத்தைக் கேட்டு வளர்ந்திருப்போம்; ஆனால், காட்சிகள், வடிவமைப்புகள் வாயிலாக ராமாயணக் கதையின் பிரம்மாண்டத்தை இப்படத்தில் கண்டு மகிழலாம்.
“இந்தியாவிலிருந்து உலகிற்குச் சொல்லப் போகும் மிகச் சிறந்த கதைகளில் ஒன்றாக இது இருக்கும்,” என்றார்.
“ஏ.ஆர். ரஹ்மான் அற்புதமான இசையைப் படைத்து எங்களது மகிழ்ச்சியான தருணங்களில் எல்லாம் எங்களுடன் இசை வழி உடனிருக்கிறார்,” எனக் கூறினார்.
நடிகர் யாஷ் பேசுகையில், “நான் சிவபெருமானின் ஆற்றலை இந்த இராவணன் பாத்திரத்திற்குள் கொண்டுவந்தேன்,” என்றார்.
ரஹ்மான் வழங்கிய ‘சிவ தாண்டவம்’ பாடலைக் கேட்கும்போது அந்த ஆற்றலைத் தாம் முழுமையாக உணர்வதாகத் தெரிவித்தார்.
ரன்பீர் கபூர் பேசுகையில், “சென்னைக்கு வணக்கம்! ‘ராமாயணா’ என்பது அன்பு, நம்பிக்கை, நமது பண்பாட்டின் வழி நம் அனைவரையும் ஒன்றாகப் பிணைக்கும் ஓர் அற்புதக் காவியம்,” என்றார்.
ரஹ்மான் உங்களுக்காகப் பல அற்புதமான பாடல்களை வரிசையாக வைத்துள்ளதாக ரன்பீர் கபூர் சுட்டிக்காட்டினார்.
ஹான்ஸ் ஜிம்மர், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இத்திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் மாதம் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது.
