‘விடாமுயற்சி’ திரைப்படத்தைத் தொடர்ந்து, ‘மூக்குத்தி அம்மன்-2’ படத்திலும் சக்திவாய்ந்த வில்லி கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார் நடிகை ரெஜினா காஸ்ன்ட்ரா.
தனது திரைப்பயணத்தில் முதல்முறையாக இவ்வளவு பெரிய வணிகப் படத்தில் வில்லியாக நடித்திருப்பது புதிய அனுபவமாக இருந்தது என்று அண்மைய நேர்காணலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இயக்குநர் சுந்தர் சி, தனது சொந்த முத்திரையோடு ஒரு பிரம்மாண்டமான கற்பனை உலகத்தை உருவாக்கியிருக்கிறார்.
“இப்படத்தில் நிறைய ‘கிராஃபிக்ஸ்’ காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்காகத் தொழில்நுட்பக் குழுவினர் கடந்த ஓராண்டாகக் கடுமையாக உழைத்துள்ளனர்,” என்று கூறியுள்ளார் ரெஜினா.
மேலும், ஒப்பனைக்காக மட்டுமே நாள்தோறும் இரண்டு மணி நேரம் செலவிட்டதாகவும் சவால்கள் நிறைந்த காட்சிகளை மனப்பூர்வமாக ரசித்து நடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
“வரலாற்றுப் படங்கள் என்றாலே கூடுதல் ஒப்பனை, ஆடை, அலங்காரங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால், ஒரு நடிகையாக நான் அதை மிகவும் ரசித்து ஏற்றுக்கொண்டேன்.
“ஒப்பனை செய்துகொள்ள நேரம் எடுக்கும் என்றாலும், மனத்தளவில் அதை ஏற்றுக்கொண்டு செய்யத் தொடங்கிவிட்டால் அது கடினமாகத் தெரியாது,” என்று ரெஜினா தெரிவித்துள்ளார்.
திரைத்துறையில் நிலவிவரும் பாலினச் சமத்துவம் குறித்து தனது கருத்துகளை வெளிப்படுத்த அவர் தயங்கவில்லை.
“பல்லாண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு மட்டுமே 50, 60 அடிகளில் பிரம்மாண்ட பதாகைகள் வைக்கப்பட்டு வந்ததைப் பார்த்திருக்கிறோம்.
“ஆனால், தற்போது நயன்தாராவுக்கு 60 அடியில் ரசிகர்கள் பதாகைகள் வைத்திருப்பதும் நடிகை ராதிகாவுக்கு ‘தாய் கிழவி’ படத்திற்காக பதாகை வைக்கப்பட்டதும் பெரிய விஷயம். இது தமிழ்த் திரையுலகில் ஏற்பட்டுள்ள நல்ல மாற்றத்தின் அடையாளம்,” என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் ரெஜினா.
வில்லி கதாபாத்திரங்கள் தொடர்ந்து வந்தாலும், ஒரே மாதிரியான கதாபாத்திரக் கட்டமைப்புக்குள் சிக்கிக்கொள்ளாமல் கவனமாகக் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
“எனக்கு ‘விடாமுயற்சி’ படத்துக்குப் பிறகு வில்லி கதாபாத்திரங்கள் நிறைய வருகின்றன. அந்த வரிசையில்தான் ‘மூக்குத்தி அம்மன்-2’ பட வாய்ப்பும் வந்தது.
அஜித் போன்ற நட்சத்திர நடிகருடன் ‘விடாமுயற்சி’ போன்ற பெரிய திரைப்படத்தில் நடித்த பிறகு, எந்தவொரு திரையுலகிலும் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களுக்குள் நடிகர்களை அடைப்பது மிகவும் எளிதாக நடந்துவிடும்.
“ஆனால், இதுபோன்ற விஷயங்களில் என்ன முடிவெடுக்க வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறேன். அதன் காரணமாகவே நான் மிகவும் கவனமாக, குறைந்த அளவிலான திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன்.
“பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்களுக்கு மத்தியில், கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் திரைப்படங்களுக்கும் திரையரங்குகளில் வரவேற்பு அதிகரித்து வருவது தமிழ் சினிமாவின் புதிய வளர்ச்சிப் பாதையைக் காட்டுகிறது,” என்று ரெஜினா கூறியுள்ளார்.
இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், நடிகை நயன்தாரா முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘மூக்குத்தி அம்மன்-2’ திரைப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வந்துள்ளது.
ஊர்வசி, ரெஜினா கஸான்ட்ரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
