பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு, அவர்களின் திருமணம், ஒரு சம்பவத்தின் பின்னணி என ஆவணப்படங்களுக்கான வரவேற்பு அதிகரித்துவரும் நிலையில், இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன், அவரின் குடும்பத்தினரின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டுள்ளது.
‘தி ரோஷன்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த நான்கு பாக ஆவணப்படத் தொடர், ஹிருத்திக் ரோஷனின் தாத்தா ரோஷன் லால் நாக்ரத்தின் வாழ்வை மையமாகக் கொண்டு படமாக்கப்பட்டுள்ளது.
‘எஸ்ராஜ்’ எனும் அரியவகை நரம்பிசைக் கருவி வாசிப்பவரும் புகழ்பெற்ற இசையமைப்பாளருமான அவரது புகழ், தங்கள் குடும்பப் பெயரை ‘ரோஷன்ஸ்’ என எவ்வாறு மாற்றியது எனும் வரலாற்றைப் பேசுகிறது இத்தொடர்.
வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) நெட்ஃபிளிக்சில் வெளியாகிய இத்தொடரில் ஆஷா போன்ஸ்லே, அனில் கபூர், சோனு நிகம், சஞ்சய் லீலா பன்சாலி, ப்ரீத்தி ஜிந்தா, பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர்.
சஷி ரஞ்சன் இயக்கத்தில் வெளியாகியுள்ள இத்தொடர், ரோஷன் லால் மட்டுமன்றி அவருடைய மகன்களான இசையமைப்பாளர் ராஜேஷ் ரோஷன், இயக்குநரும் தயாரிப்பாளருமான ராகேஷ் ரோஷன், அவரின் மகன் ஹிருத்திக் ரோஷன் ஆகியோரின் கதைகளையும் பேசுகிறது.
அண்மையில் வெளியான இத்தொடரின் முன்னோட்டக் காணொளி, ரசிகர்களிடையே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது.
“இந்த ஆவணத் தொடரைப் படமாக்குவது குறித்த பேச்சு தொடங்கியபோது, எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை பகிரங்கமாகப் பகிர்ந்துகொள்வதில் தயக்கம் இருந்தது. ஆனால், இது ஒரு வரலாறு. அதனை தனிப்பட்டதாகக் கருதாமல், அனைவருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என என் தந்தை ராகேஷ் ரோஷன் சொன்னது சரி எனத் தோன்றியது,” என்றார் ஹிருத்திக் ரோஷன்.
“என் தாத்தாவின் இசையைக் கேட்டபோது, அதை நவீனகால ரசனையுடன் பொருத்திப் பார்ப்பதன் அவசியத்தை உணர்ந்தேன். என் தந்தையின் குழந்தைப் பருவம், அவர் சந்தித்த சவால்கள் குறித்து அறிந்துகொண்டேன். என் தயக்கம் தகர்த்தெறியப்பட்டு இத்தொடர் தொடங்கியது,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
‘க்ரிஷ்’ திரைப்படம் சிங்கப்பூரில் படமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் உள்ள ஹிருத்திக் ரோஷன் ரசிகர்கள் இத்தொடரைக் காண ஆவலுடன் உள்ளனர்.