இந்தியத் திரைப்பட வரலாற்றில் அதிகமுறை ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூலித்த படங்களின் நடிகர்கள் பட்டியலில் ரஜினிகாந்த் இணைந்துள்ளார்.
கே. பாலச்சந்தர் இயக்கத்தில் 1975ல் வெளியான ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படம் மூலமாக ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமானார்.
ஐம்பது ஆண்டுகாலத் திரையுலக வாழ்க்கையில் ரஜினிகாந்த் நடிப்பில் இதுவரை 172 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிக்கும் ‘தர்மன்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
இதுவரை ‘2.0’, ‘ஜெயிலர்’, ‘கூலி’, ‘ஜெயிலர் 2’ என நான்கு திரைப்படங்கள் மூலம் ரூ.500 கோடி வசூல் தந்துள்ளார்.
இதன்மூலம் நான்கு முறை ரூ.500 கோடி வசூல் திரைப்படங்களைக் கொடுத்த பாலிவுட் நடிகர்களான அமீர் கான், பிரபாஸ் ஆகியோருடன் ரஜினிகாந்த் இணைந்துள்ளார்.
‘தங்கல்’, ‘சீக்ரெட் சூப்பர்ஸ்டார்’, ‘பிகே’, ‘தூம் 3’ ஆகிய நான்கு ரூ.500 கோடி வசூல் திரைப்படங்களை அமீர் கான் கொடுத்துள்ளார்.
‘பாகுபலி’, ‘பாகுபலி 2’, ‘சலார்’, ‘கல்கி ஏடி’ என நான்கு ரூ. 500 கோடி வசூல் திரைப்படங்களைப் பிரபாஸ் கொடுத்துள்ளார்.
‘பதான்’, ‘ஜவான்’ ஆகிய இரண்டு படங்கள் மூலம் ஷாருக்கான் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
நடிகர் விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் மட்டுமே ரூ.500 கோடி வசூலித்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் ஏழு நாள்களில் ரூ.549 கோடி வசூலித்துள்ளது.
2023ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாகத்தில் நடித்த மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன், யோகிபாபு உள்ளிட்டோர் இந்தப் படத்திலும் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, ஹிருத்திக் ரோஷன், மிதுன் சக்கரவர்த்தி, விஜய் சேதுபதி, நமோ நாராயணா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தைப் பார்த்து தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் பாராட்டியுள்ளார்.
இத்திரைப்படம் விரைவில் ரூ.1,000 கோடி வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
