காலஞ்சென்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் சகோதரி சைலஜாவின் கணவர் சுபலேகா சுதாகர்.
சினிமா, தொலைக்காட்சி ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். பல வெற்றிப் படங்களில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடித்தவர்.
அண்மையில் வெளியான ‘கோர்ட்’ திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் பேட்டி ஒன்றில், எஸ்.பி.பாலாவின் கடைசி நாள்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
‘‘என்னதான் அவர் (எஸ்.பி.பாலா) நெருக்கமான உறவாக இருந்தாலும், நான் அவரை ‘சார்’ என்றுதான் அழைப்பேன். அவர் மீது அவ்வளவு மதிப்பு, மரியாதை இருக்கிறது.
“இந்த உலகத்தை விட்டு நான் போகும் வரை எனக்குள் ஒரு குற்ற உணர்வு நிரந்தரமாக மனதில் இருக்கும்.
“கொரோனா நெருக்கடியின்போது எனக்கு ஹைதராபாத்தில் படப்பிடிப்பு இருந்தது. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அங்கே வர வேண்டி இருந்ததால், என்னிடம் ஹைதராபாத்தில் உள்ள சூழல் குறித்து விசாரித்தார்.
“அதற்கு நான், ‘எங்களுக்கே இங்கே இவ்வளவு பாதுகாப்பு இருக்கிறது என்றால் உங்களுக்கு இன்னும் நிறைய இருக்கும்’ என்றேன்.
“நான் சொன்ன அந்த வார்த்தைகளை மட்டுமே அவர் முழுமையாக நம்பினார். என்னை நம்பி ஹைதராபாத் வந்தார். ஆனால் அந்த நம்பிக்கை வீணாகிவிட்டது. என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு என்றால், சார், நீங்கள் தாராளமாக வரலாம்’ என அவரிடம் சொன்னதுதான்.
தொடர்புடைய செய்திகள்
“நினைத்துப் பார்த்தால் மிகவும் வேதனையாக உள்ளது. நல்ல மனிதரை இழந்துவிட்டோம். சைலஜா இப்போது வரை அவரை நினைத்து வேதனையில்தான் இருக்கிறார்.
“எனக்குத் தெரிந்து, எஸ்.பி.பி. இறப்பதற்கு முன்பு, சைலஜா அம்மா வேறு மாதிரி இருந்தார். இப்போது வேறு மாதிரி இருக்கிறார்,” என்று தன் மன வேதனையைத் தெரிவித்துள்ளார் சுபலேகா சுதாகர்.