இளையர்களின் அபிமான இசையமைப்பாளராக வளர்ந்து வருகிறார் சாய் அபயங்கர்.
இந்நிலையில், தங்கள் மகன் மீது ரசிகர்கள் காட்டும் அன்புக்காக சாயின் பெற்றோர் நன்றி தெரிவித்துள்ளனர்.
சாய் அபயங்கரின் பெற்றோரான திப்பு, ஹரிணி ஆகிய இருவருமே பாடகர்கள்தான்.
அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது தங்கள் மகன் குறித்து இருவரும் பெருமிதத்துடன் சில சுவாரசியமான தகவல்களையும் பகிர்ந்துகொண்டனர்.
“எங்கள் மகனுக்கு ரசிகர்கள் அளிக்கும் ஆதரவு எத்தகைய உணர்வை அளித்துள்ளது என்பதை விவரிக்க வார்த்தைகள் இல்லை.
“2024 ஜனவரி 22 வரைக்கும் சாய் இப்படி ஒரு இடத்திற்கு வருவார் என்று எங்களுக்குத் தெரியாது.
“அன்றுதான் ‘திங்க் மியூசிக்’ நிறுவனத்தின் ‘கட்சி சேரா’ தனியிசைப் பாடல் வெளியானது. இன்று சாய் இப்படியோர் இடத்திற்கு வருவதற்கு ரசிகர்களின் அன்பும் பிரார்த்தனைகளுமே முக்கியமான காரணம்,” என்றார் திப்பு.
இதையடுத்துப் பேசிய ஹரிணி, தன் மகனுக்குக் கிடைத்துள்ள வரவேற்பைத் தமக்கு கிடைத்ததாகக் கருதி மகிழ்வதாகக் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“சாய் கடும் உழைப்பாளி. ஒவ்வொரு நாளும் 19 மணி நேரம் வேலை பார்ப்பார். நம்ப முடியாவிட்டாலும் அதுதான் உண்மை.
“அவருடைய கடுமையான உழைப்பைப் பார்க்கும்போது வியப்பாக இருக்கும். அவரை ஆதரிக்கும் அனைவருக்கும் நன்றி,” என்றார் ஹரிணி.
‘சித்தர புத்திரி’, ‘ஆசைக் கூட’ என மேலும் இரண்டு தனியிசைப் பாடல்களை வெளியிட்டுள்ளார் சாய் அபயங்கர். அவற்றைப் பார்த்துத்தான் திரைப்படங்களில் பணியாற்ற அவருக்கு அழைப்புகள் வந்தன.
பெற்றோரை அடுத்துப் பேசிய அவர், “இந்தப் பையனிடம் ஏதோ இருக்கிறது. பாடல்களை நல்லவிதமாகக் கொடுத்துவிடுகிறார் என்று இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் நினைக்கிறார்கள். அந்த நம்பிக்கையில் என்னிடம் வருபவர்களை ஏமாற்றாமல் நானும் சரியாகச் செயல்பட்டு இருப்பதாக நினைக்கிறேன்,” என்ற சாய் அபயங்கர், தன் மீதான விமர்சனங்கள் குறித்தும் விளக்கம் அளித்தார்.
டுவிட்டர், இன்ஸ்டகிராம் என சமூக ஊடகங்களில் தாம் அதிக நேரம் செலவிடுவதில்லை என்றும் இந்தக் கொள்கையில் உறுதியாக இருந்தால் விமர்சனங்களில் இருந்து தப்பித்துவிடலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“எனக்கு வெளியே செல்வதில் விருப்பம் இல்லை. பெரும்பாலும் ஒலிப்பதிவுக்கூடத்தில்தான் இருப்பேன். இசையில் மட்டுமே கவனம் செலுத்தப் பிடிக்கும். எனக்குப் பிடித்தமான இசையைத்தான் உருவாக்குகிறேன். அதற்கு மக்களின் ஆதரவு கிடைத்திருக்கிறது. அது எனக்கும்கூட மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார் சாய் அபயங்கர்.