சமந்தா: கணவர் அளித்த நம்பிக்கையால் நடிப்பைத் தொடர்கிறேன்

சமந்தா: கணவர் அளித்த நம்பிக்கையால் நடிப்பைத் தொடர்கிறேன்

2 mins read
a8e41cf2-7cb5-426f-b95d-dd1ff7914234
நடிகை சமந்தா. - படம்: ஃபேஸ்புக்

உடல்நலக் குறைபாடு காரணமாகத் தாம் நடிப்பைக் கைவிட நினைத்ததாகவும் கணவர் அளித்த நம்பிக்கையால் மீண்டும் நடிக்க வந்ததாகவும் நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ராஜ் நிடிமோருவை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட சமந்தா, அண்மைய நேர்காணல் ஒன்றில் தமது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

“எனக்கு ‘மையோசிடிஸ்’ என்னும் ‘தன்னுடல் தாக்கு நோய்’ பாதிப்பு ஏற்பட்டதால் ஓராண்டு காலம் நடிப்பிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டேன்.

“பல தொழில்களில் முதலீடு செய்தேன். நான் ஒரு தொழில்முனைவோராக மாறுவதற்கு எனக்கு ஏற்பட்ட உடல்நலப் பாதிப்புதான் முக்கியக் காரணம்.

“திரைப்படப் படப்பிடிப்பில் பிறர் எனக்காகக் காத்திருப்பதை விரும்பவில்லை. அது மற்றவர்களின் நேரத்தை வீணடிப்பதாகிவிடும். எனவே, ‘மா இன்டி பங்காரம்’ என்ற படத்தைத் தயாரிக்க முடிவெடுத்தேன்,” என்று கூறினார் சமந்தா.

இருப்பினும், கணவர் ராஜ் நிடிமோரு அளித்த ஊக்கமும் நம்பிக்கையுமே தம்மை மீண்டும் நடிக்கச் செய்ததாகச் சமந்தா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

‘மா இன்டி பங்காரம்’ படத்தில் நடிக்க சாய் பல்லவி மறுத்துவிட்டார். அதனால்தான் நான் அந்தப் படத்தில் நடிக்க முடிவு செய்தேன். அந்தக் கதைக்கு நல்ல ஆற்றல் உள்ளது என்றும் அது திரைக்கு வர வேண்டும் என்றும் நான் கருதினேன் என்றார் சமந்தா.

“நாம் எப்போதும் வலிமையானவர்களாகக் காட்டிக்கொள்ள வேண்டியதில்லை என்பதை நான் மெல்ல உணர்ந்து வருகிறேன். இந்த இயலாமை அல்லது பலவீனத்தை ஏற்றுக்கொள்வது என்பது, நான் இன்னும் போராடிக்கொண்டிருக்கும் ஒரு விஷயமாகவே உள்ளது.

“நான் மிக விரைவில் முழுமையாகக் குணமடைவேன் என்று மருத்துவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் எனக்கு நல்ல நாள்களும் கடினமான நாள்களும் இருந்திருக்கின்றன.

“இன்னும் ஒரு நாளைக் கூட என்னால் தாங்கிக்கொள்ள முடியாது என்று தோன்றும் தருணங்களில்கூட, எப்படியோ அந்தத் தருணம் கடந்துவிடுகிறது. குணமடைவதை நோக்கி நான் மேலும் ஒரு நாள் நெருங்கிவிட்டேன் என்பதையே இது குறிக்கிறது என்று நினைக்கிறேன்.

“உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். இதுவும் கடந்து போகும்,” என்ற வார்த்தைகளுடன் அவர் தனது நேர்காணலை நிறைவு செய்தார்.

குறிப்புச் சொற்கள்
சமந்தாநடிகைகணவர்நம்பிக்கைநேர்காணல்