தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய அளவில் பிரபலமான நடிகையாக விளங்கும் சமந்தா, அண்மையில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டார்.
அமெரிக்கா, தென்கொரியா நாடுகளில் தொடர் சிகிச்சை பெற்று, தனது நோயிலிருந்து குணமடைந்துள்ளார். ஓராண்டு காலத்துக்குப் பின்னர் மீண்டும் நடிப்பதற்குத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டுள்ளார். அதற்காக குதிரையேற்றப் பயிற்சி, தற்காப்புப் பயிற்சிகளைப் பயின்று உடலைக் கட்டுக்கோப்பாக மாற்றியுள்ளார்.
சொந்தமாகத் தயாரிப்பு நிறுவனத்தையும் துவங்கியுள்ள சமந்தா, முதல் படமாக ‘மா இண்டி பங்காரம்’ படத்தை தயாரித்து வருகிறார். அதிரடி சண்டைக் காட்சிகள் கொண்ட இப்படத்தில் நாயகியாக நடிக்கவும் உள்ளார்.
மலையாளத்தில் மம்முட்டியுடன் கௌதம் மேனன் படத்தில் அறிமுகமாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘சிட்டாடல்’ தொடரிலும் சமந்தா நடித்துள்ளார். இந்தத் தொடர் விரைவில் வெளியாகவுள்ளது.
கடைசியாக விஜய் தேவரகொண்டாவுடன் ‘குஷி’ படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் “வாழ்க்கையின் தங்கம்” எனக் குறிப்பிட்டு உடற்பயிற்சி முதல் படப்பிடிப்பு வரையிலான அனைத்து விவரங்களையும் பதிவிட்டுள்ளார்.
அதில் தனது ஒருநாள் பொழுதை எப்படி செலவிடுகிறார் என சமந்தா பகிர்ந்திருப்பதாவது:
காலை 6 மணிக்கு சூரிய வெளிச்சத்தில் சிறிது நேரம் இருக்கிறேன். பின்னர் நல்லெண்ணெய்யால் வாய் கொப்பளித்தல், சீன முறையில் இரத்த ஓட்டத்தைச் சீராக்க ‘குவா ஷா’ பயிற்சியில் ஈடுபடுகிறேன். பின்னர் 7 மணிக்கு உடற்பயிற்சி செய்துவிட்டு கடவுளை வணங்குவேன்.
தொடர்புடைய செய்திகள்
பிறகு காரில் செல்லும்போது கண்களுக்கான சிகிச்சை, 9 மணிக்கு படப்பிடிப்புக்குச் செல்லுதல், மாலை 6 மணிக்கு ஒரு தனிப்பட்ட சிகிச்சை, இரவு 7 மணிக்கு விளையாட்டு, இரவு 9.30 மணிக்கு தியானம், இரவு 10 மணிக்கு தூங்கச் செல்வது என அந்தப் பட்டியல் நீளும் எனச் சொல்கிறார் சமந்தா.

