நடிகை சமந்தா தனது முதல் குழந்தையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வேளையில், தமது கர்ப்ப கால அனுபவங்களை இன்ஸ்டகிராமில் திறந்த மனதுடன் பகிர்ந்துவருகிறார்.
உணவுப் பழக்கம், உடற்பயிற்சி முறைகள், கணவர் ராஜ் நிடிமோருவுடனான சுற்றுலாப் புகைப்படங்கள் ஆகியவற்றை அவர் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், உடற்பயிற்சிக் கூடத்தில் அதிக எடையுள்ள உபகரணங்களைக் கொண்டு பயிற்சி செய்யும் புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கர்ப்ப காலத்தில் அதிக எடையைத் தூக்கக் கூடாது. அதிக எடையுள்ள பயிற்சிகளைத் தவிர்க்கவேண்டும் என்ற பொதுவான கருத்து நிலவுவதால் இப்புகைப்படங்கள் விவாதப் பொருளாகியுள்ளன.
இது குறித்துச் சமந்தா கூறுகையில், “பல ஆண்டுகளாக எடை தூக்கும் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்துவருகிறேன். மருத்துவ அனுமதியுடனேயே கர்ப்ப காலத்திலும் அதனைத் தொடர்கிறேன்.
“எனது பயிற்சியாளர் கர்ப்ப கால உடற்பயிற்சிகளில் சான்றிதழ் பெற்றவர். எனது உடல்நிலைக்கு ஏற்ப பயிற்சிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன,” என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
ஒவ்வொரு கர்ப்பமும் வித்தியாசமானது. ஒவ்வொருவரின் உடலமைப்பும் மாறுபட்டது என்பதால், தமது உடற்பயிற்சி முறையைப் பிற பெண்கள் அப்படியே பின்பற்ற வேண்டாம் என்றும் சமந்தா கேட்டுக்கொண்டுள்ளார்.
கர்ப்ப காலத்தில் உடற்பயிற்சியைத் தொடங்கும் முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து, தகுதியான பயிற்சியாளரின் வழிகாட்டுதலுடன் செயல்படுங்கள் என்றும் சமந்தா அறிவுறுத்தி உள்ளார்.


