நல்ல நடன இயக்குநராக அறியப்பட்டவர் சாண்டி. திடீரென ‘லியோ’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் தனது வில்லத்தனத்தை அபாரமாக வெளிப்படுத்தினார்.
இப்போது, சத்தமில்லாமல் மேலும் சில படங்களில் நடித்து முடித்துவிட்டார். தொடர்ந்து அடர்த்தியான வில்லன் கதாபாத்திரங்களாக அமைகிறது போலும். ஆனாலும் எந்தவித முணுமுணுப்பும் இன்றி களமிறங்கி தன்னிடம் உள்ளதை திரையில் கொண்டுவர மேற்கொள்ளும் முயற்சி இதுவரை சோடை போகவில்லை.
அப்படி அண்மையில் கொடூர வில்லனாக மலையாளத்தில் தன்னுடைய அறிமுகப் படமான ‘லோகா’வில் மிரட்டியிருந்த சாண்டி, அடுத்து ‘கிஷ்கிந்தபுரி’ என்ற படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாகி உள்ளார். இதிலும் அவருக்கு வில்லன் வேடம்தான்.
கன்னட சினிமா ரசிகர்களுக்கும் சாண்டி அறிமுகமாகப் போகிறார். கன்னடத்தில் அவரது அறிமுகப் படத்துக்கு ‘ரோஸி’ என்று பெயர் வைத்துள்ளனர். இதில் திருநங்கை கதாபாத்திரத்திரமாம்.
திருநங்கையாக நடிப்பதில் தனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்றும் கதைப்படி, படத்தில் வரும் மிக ஆபத்தான கதாபாத்திரம் அதுதான் என்றும் விகடன் ஊடகத்துக்கு அளித்த அண்மைய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் சாண்டி.