காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பேசப்படும் இளம் நாயகியாக மாறிவிட்டார் சாரா அர்ஜுன். அண்மையில் வெளியான ‘துரந்தர்’ இந்திப் படத்தின் கதாநாயகியான இவர்தான் தற்போது இந்திய ரசிகர்களின் கனவுக் கன்னி.
ஒரு காலத்தில் தமிழில் வெளியான ‘தெய்வத் திருமகள்’ படத்தில் விக்கிரமுடன் குழந்தை நட்சத்திரமாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சாரா.
அதற்கு முன்னதாக ஏ.எல். விஜய் இயக்கிய ‘சைவம்’ படத்திலும் சுட்டிக் குழந்தையாக ரசிகர்களின் மனம் கவர்ந்தார். அண்மைய பேட்டியில் அவர் கூறியுள்ள தகவல்கள் இளையர்கள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளது.
திருமணம் செய்து கொள்ளாமல் உறவில் இருப்பது, தெரு நாய்களின் நலன் குறித்தெல்லாம் கருத்து தெரிவித்துள்ளார் சாரா.
“நான் நடிக்க வந்தபோது 18 மாதக் குழந்தையாக இருந்தேன். நூற்றுக்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களில் நடித்த பிறகே கதாநாயகியானேன்.
“நான் ‘சைவம்’ படத்தில் நடித்தபோது படக்குழுவினர் அனைவரும் சிறு குழந்தை என்பதால் என்னை உற்சாகப்படுத்துவார்கள். இயக்குநர் விஜய் ஏதாவது தின்பண்டங்கள் வாங்கித் தந்து என்னை நன்றாக நடிக்க வைப்பார்.
“’பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து முடித்ததும் என்னை உறைவிடப் பள்ளியில் சேர்த்துவிட்டனர். அந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு நிகராக என்னையும் அழகாகக் காட்டியிருப்பார் இயக்குநர் மணிரத்னம். அவருக்கு என் மீது அவ்வளவு பாசம்.
“அவருடன் படப்பிடிப்பில் பணியாற்றும் போது யாருக்கும் சாப்பிடக்கூட நேரம் கிடைக்காது என்பார்கள். ஆனால், நான் மட்டும் நன்றாக சாப்பிட்டுவிட்டுத் தூங்கவும் செய்வேன்,” என்று குறிப்பிட்டுள்ள சாராவுக்கு தமிழில் பிடித்தமான நாயகன் சூர்யா.
தொடர்புடைய செய்திகள்
தெலுங்கில் பிடித்த நாயகன் விஜய் தேவரகொண்டா. இருவருடனும் ஒரு படத்திலாவது நடித்து விட ஆசையாம்.
பிடித்த இசையமைப்பாளர் இளையராஜா. அவரது இசையில் உருவான காதல் பாடல்களைக் கேட்கும்போது மெய் மறந்து போவதாக சொல்கிறார்.
“இன்றைய தேதியில் காதலில் கலப்படம் அதிகமாகி விட்டது. காதல் உறவுகள் நச்சுத்தன்மை கொண்டவையாக மாறிவிட்டன. இதையெல்லாம் பார்க்கும்போது பயமாக இருக்கிறது.
“எது குறித்தும் நம்பகத்தன்மை ஏற்படுவதில்லை. மாறாக சந்தேகம் தான் அதிகரிக்கிறது. என்னைப் பொறுத்தவரை மனித நேயம் என்பது மிகவும் முக்கியம்.
“எங்கேனும் சாலையில் தனியாக நிற்கும் நாய்க்குட்டியைப் பார்த்துவிட்டால் வருத்தமாக இருக்கும். அதற்கு உணவு கிடைக்குமா, உடல் நலம் நன்றாக உள்ளதா என்றெல்லாம் யோசித்து கவலைப்படுவேன்,” என்று பேட்டியில் மனம் திறந்துள்ளார் சாரா அர்ஜுன்.

