தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மருத்துவச் சேவையில் திரைக் கலைஞர்கள்

4 mins read
7d5a4ced-7256-400f-9a90-851e8baeeb30
பவித்ரா மாரிமுத்து. - படம்: ஊடகம்
multi-img1 of 16

அறுவை சிகிச்சைக் கூடத்தில் இருக்க வேண்டிய மருத்துவர்கள் சினிமா திரையரங்குகளில் காட்சி தருகிறார்கள்.

மருத்துவம் படித்திருந்தபோதும், கலையுலகப் புகழ் விருப்பம் காரணமாக, சிலர் திரையுலகில் நட்சத்திரங்களாகிவிட்டார்கள். மருத்துவம் படிக்காதவர்கள் சில கலைஞர்கள் மருத்துவமனைகளை நடத்தி வருகிறார்கள்.

பலர், பலவிதமாக விமர்சித்தாலும், மருத்துவத்தின் மூலம் சேவையாற்ற வேண்டும் என்பதே அவர்களில் பெரும்பாலானோரின் எண்ணம்.

அப்படிப்பட்டவர்களின் பட்டியல் அந்தக் காலத்தில் இருந்தது உண்டு. குறிப்பிட்ட சிலரை மட்டும் இந்தச் செய்தியில் பார்ப்போம்.

நடிகர் ராஜசேகர்

தெலுங்கு சினிமாவின் அதிரடி நாயகனான டாக்டர் ராஜசேகர் பாரதிராஜாவால் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அவர் சினிமாவில் நுழைவதற்கு முன் சென்னையில் எம்பிபிஎஸ் படத்துவிட்டு, சென்னை அமைந்தகரையில் மருத்துவகம் நடத்தி வந்தார்.

இவரது மகள்கள் சிவாத்மிகா, ஷிவானி இருவரும் மருத்துவம் படித்திருந்தாலும் பெற்றோரைப் போலவே நடிப்புத்துறையில் நுழைந்துள்ளனர்.

நடிகர் அஜ்மல்

‘அஞ்சாதே’ படம் மூலம் அறிமுகமான அஜ்மல் மருத்துவர் ஆவார். உக்ரைன் நாட்டின் வின்னிட்சியா தேசிய மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இவர் மருத்துவம் படித்துள்ளார்.

நடிகர் பரத் ரெட்டி

காவல்துறை அதிகாரி, வில்லன் எனப் பல கதாபாத்திரங்களில் தமிழ், தெலுங்கில் நடித்து வருகிறார் டாக்டர் பரத் ரெட்டி.

ஆந்திராவில் மருத்துவம் படித்தவர். தற்போது ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் இதய நிபுணராகப் பணியாற்றிக்கொண்டே நடித்து வருகிறார்.

இயக்குநர் சங்கரின் இளைய மகளான அதிதி சங்கர், நடிகைகள் சாய் பல்லவி, ஸ்ரீ லீலா ஆகியோரும் எம்பிபிஎஸ் முடித்தவர்கள்தான்.

மானுஷி சில்லர்

பிரபல நடிகையான மானுஷி, ஒரு மருத்துவர். அதிலும் ‘நீட்’ தேர்வில் முதல் முறையிலேயே நல்ல மதிப்பெண்களுடன் சாதித்தவர்.

ஹரியானா மாநிலத்தில் அரசு மருத்துவக் கல்லூரியான பகத் பூல் சிங் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்தவர் மானுஷி.

ஐஸ்வர்யா லட்சுமி

‘கட்டாகுஸ்தி’, ‘பொன்னியின் செல்வன்’ படங்களில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி மருத்துவர் ஆவார்.

2017ஆம் ஆண்டு, கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ஸ்ரீ நாராயண மருத்துவ அறிவியல் மையத்தில் மருத்துவப் படிப்பை முடித்தார்.

சூரி கதாநாயகனாக நடித்த ‘மாமன்’ படத்தில் மருத்துவராகவே நடித்திருக்கும் ஐஸ்வர்யா லட்சுமியைப் பாராட்டியுள்ளார் சூரி.

“ஐஸ்வர்யா லட்சுமி இப்படத்துக்கு பெரிய ஆதரவாக இருந்தார். உண்மையிலும் அவர் மருத்துவராக இருப்பதால், திரையில் அந்தக் கதாபாத்திரத்தை நம்பிக்கையுடனும் இயல்பான முறையிலும் சிறப்பாகச் செய்திருக்கிறார். அவரது நல்ல மனம், அவரை இன்னும் உயரம் நோக்கி கொண்டுசெல்லும்,” எனப் பதிவிட்டுள்ளார் சூரி.

நடிகர் நெப்போலியன் மருத்துவமனை

நடிகர் நெப்போலியன் அமெரிக்காவில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவரது மூத்த மகன் தனுஷ், குழந்தைப் பருவம் முதலே, தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

எவ்வளவோ மருத்துவமனைகளில் எத்தனையோ சிகிச்சைகள் அளித்தும் பலனில்லை.

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் பாரம்பரிய முறைப்படி மயோபதி முறையால் இந்நோய்க்கு சிகிச்சையளிப்பதை அறிந்து மகனை அங்கு அழைத்துச் சென்றார். சிகிச்சையில் முன்னேற்றம் உண்டானது.

அங்கு சிகிச்சைக்கு தங்கள் குழந்தைகளுடன் வந்தவர்கள் தங்கி சிகிச்சை பெற இட வசதி இல்லாததை நெப்போலியனிடம் சொல்ல, பெரிய அளவில் ஒரு மயோபதி மருத்துவமனையைக் கட்டியுள்ளார் அவர்.

இப்போது இரண்டாவது மயோபதி மருத்துவனைக்கும் பூமி பூசையைப் போட்டு, அதற்கான வேலைகளைச் செய்து வருகிறார். ஏறக்குறைய 12 ஆண்டுகளாக இந்த மருத்துவமனையை வசதியற்ற மக்களுக்காக நடத்தி வருகிறார் நெப்போலியன்.

நடிகர் பாலகிருஷ்ணா

தெலுங்குத் திரை நாயகன் பாலகிருஷ்ணாவின் தாயார் பசவதாரகம் புற்றுநோயால் இறந்தார். அதனால் ஹைதராபாத்தில் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனையை கடந்த பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து தன் தாயார் பெயரில், பசவதாரகம் இந்தோ - அமெரிக்கா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இயக்குநர் பாரதிராஜா - தயாரிப்பாளர் தாணு

இயக்குநர் பாரதிராஜா சென்னை தியாகராய நகரில் ‘பாரதிராஜா மருத்துவமனை’ நடத்தி வருகிறார். இது கட்டண மருத்துவமனைதான்.

இதன் இதய நோய் பிரிவு, திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பெயரில் இயங்கி வருகிறது.

அண்மையில் மருத்துவமனையின் பங்குகளை வாங்கியதால் தாணு பெயரில் இதய சிகிச்சைப் பிரிவு இயங்குகிறது.

ஜெய்சங்கர் மகன் மருத்துவமனை

தன் மூத்த மகன் விஜய் சங்கரை கண் மருத்துவத்துக்கு படிக்க வைத்தார் பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கர். மகனைத் தேடி வந்த சினிமா வாய்ப்புகளையும் துரத்தினார் ஜெய். சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் ‘சங்கர் கண் மருத்துவமனை’யை நடத்தி வருகிறார் விஜய் சங்கர். திரைப் பிரபலங்கள் பலரும் இவரிடம் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சின்னத்திரை பாலா கட்டப்போகும் மருத்துவமனை

நோயாளிகள் மருத்துவமனை செல்ல இலவச ஆட்டோ, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ உதவிகளைச் செய்து வரும் தொலைக்காட்சிப் புகழ் பாலா, இலவச மருத்துவமனையைக் கட்டத் திட்டமிட்டுள்ளாராம்.

“நான் படிக்க வைக்கும் ஒரு மாணவர், பொறியியல் படிப்பை முடித்ததும் மருத்துவமனை கட்டடத்திற்கான ‘பிளான்’ போட்டுத்தருவதாகச் சொல்லியிருக்கிறார்,” என பாலா தெரிவித்துள்ளார்.

சிரஞ்சீவியின் மருத்துவமனை திட்டம்

தெலுங்கு திரைப்படப் புகழ் சிரஞ்சீவி, தெலுங்குத் திரைப்படத் தொழிலாளர்களுக்காக இலவச மருத்துவமனைக்குத் திட்டமிட்டு வருகிறார். தனது தந்தை பெயரில் பத்துப் படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையைக் கட்டி வருகிறார்.

இதற்கு தெலுங்கு கிரிக்கெட் சங்கம் ரூ.20 லட்சம் வழங்கியுள்ளது. அத்துடன், பல தொழிலதிபர்கள் சிரஞ்சீவியிடம் நிதி கொடுத்து வருகிறார்கள்.

ரஜினி மருத்துவமனை கட்டுகிறாரா?

சென்னை திருப்போரூரை அடுத்த நாவலூரில் 12 ஏக்கர் நிலம் வாங்கிய ரஜினி, கடந்த ஆண்டு திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகம் வந்து நிலத்தைப் பதிவு செய்தார்.

இங்கு இலவச மருத்துவமனையைக் கட்டவிருக்கிறார் ரஜினி என்ற பேச்சு அடிபடுகிறது.

மருத்துவம் என்பது மகத்துவம்.

அந்த மகத்துவச் சேவையை மனித நேயத்துடன் செய்துவரும், செய்யவிருக்கும் திரைப் பிரபலங்களைப் பாராட்டுவோம்!

குறிப்புச் சொற்கள்