தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழ்நாட்டில் பரவும் ‘ஸ்க்ரப் டைபஸ்’ நோய்: சுகாதாரத் துறை எச்சரிக்கை

2 mins read
58d69d1a-d01a-473a-b13e-e3cb1a9bf485
பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வநாயகம். - படம்: ஊடகம்

சென்னை: தமிழ்நாட்டில் பூச்சிக்கடியால் ‘ஸ்க்ரப் டைபஸ்’ என்ற நோய் தற்போது பரவி வருவதாக எச்சரித்துள்ள சுகாதாரத் துறை, மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

பொதுவாகவே விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளும் செடி, கொடிகள் அதிகம் இருக்கும் பகுதியில் வசிப்பவர்களும் ‘ஸ்க்ரப் டைபஸ்’ நோயால் பாதிக்கப்படும் ஆபத்து அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வநாயகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “ஓரியன்டியா சுட்சுகாமுஷி என்ற ஒட்டுண்ணியால் ‘ஸ்க்ரப் டைபஸ்’ என்ற காய்ச்சல் பரவி வருகிறது.

“இதன் அறிகுறியாக காய்ச்சல், உடல் வலி, தலைவலி போன்றவை ஏற்படும் என்றும் உடலின் பல்வேறு இடங்களிலும் கருப்புக் கொப்புளங்கள் உருவாகும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

“தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தற்போது இந்த நோய் பரவி வருகிறது. வேலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சிலரும் இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

“எனவே, விவசாயம், புதர் நிறைந்த பகுதி அருகே வசிப்பவர்கள், காடுகளில் வேலை செய்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் இந்த நோய் உயிரிழப்பை ஏற்படத்தக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

“ஒருவருக்கு ஐந்து நாள்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக ஐஜிஎம் ஆன்ட்டிபாடி மற்றும் எலிசா போன்ற மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

”உத்தரப்பிரதேச மாநிலத்தில்தான் முதன்முதலில் இந்த நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. கடந்த 2021ல் பலருக்கும் பரவிய மர்மக் காய்ச்சல் தொடர்பான சோதனையில் ‘ஸ்க்ரப் டைபஸ்’ காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டது.

“இந்தக் காய்ச்சல் தொடர்பாக பொதுமக்களிடயே குறிப்பாக கிராம மக்களிடம் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்,” என்று தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தியிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்