ஆத்மார்த்தமாக உழைப்பதே மகிழ்ச்சியின் ரகசியம்: தம்பி ராமையா

2 mins read
60ec2a95-3148-47c3-9aaf-2f6a2574ea52
மகன் உமாபதியுடன் தம்பி ராமையா. - படம்: ஊடகம்

“என் மகன் உமாபதி விவரமான தொழில்நுட்பக் கலைஞராக உருவாகியுள்ளார் என்பதால் ஒரு தந்தையாக, மகனைப் பற்றிய பயம் போய்விட்டது,” என்கிறார் நகைச்சுவை, குணச்சித்திர நடிகர் தம்பி ராமையா.

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் திரையுலகில் சரியாகச் சாதிப்பார் என்றும் அண்மைய பேட்டி ஒன்றில் அவர் அடித்துக் கூறியுள்ளார்.

“திருமணத்துக்குப் பிறகு என் மகன் கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள ‘ராஜா கிளி’ படம் திரைக்கு வந்துள்ளது. என் மகனைப் பொறுத்தவரை, ஒரு திரைப்படத்தைப் பார்த்த உடனேயே, அது ஓடும், ஓடாது என்பதைச் சரியாகக் கணித்துவிடுகிறார். எனது சிறு வயதில் நானும் இப்படித்தான் இருந்தேன்.

“அதேபோல் திரையுலகில் யாரேனும் புதிதாக அறிமுகமானால் அவரது எதிர்காலம் குறித்தும் சரியாகக் கணித்துவிடுவார் உமாபதி.

“உதாரணத்துக்கு, நடிகர் யோகிபாபு தொடக்கக் காலத்தில் சில படங்களில் ஒன்றிரண்டு காட்சிகள் மட்டுமே வந்து போவார். அப்போதே யோகி பாபு பெரிய நடிகர் ஆவார் என்று அவரது வளர்ச்சியை உமாபதியால் கணிக்க முடிந்தது. அதுதான் பின்னாள்களில் நடந்தது.

“என் மகனது கணிப்பு எப்போதுமே சரியாகத்தான் இருக்கும்,” என்று மகனைப் பாராட்டுகிறார் உமாபதி.

அண்மையில் நடிகர் விஜய்யின் மகன், ஜேசன் சஞ்சய்யை இவர் நேரில் தேடிச் சென்று சந்தித்ததாகவும் இதையடுத்து ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் உமாபதி நடிக்க இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியானது. ஆனால் இது வெறும் வதந்தி என்கிறார் தம்பி ராமையா.

“நான் ஒரு படப்பிடிப்பில் இருந்தபோது தனது படத்தின் படப்பிடிப்புக்காக பார்க்க வந்தார் ஜேசன். மூத்த நடிகர் என்ற முறையில் அவரை உற்சாகப்படுத்த நானே சென்று அவரைப் பார்த்தேன்.

“அவரைப் பார்த்த உடனேயே ஆச்சரியம் அடைந்தேன். ஏனெனில், ஜேசன் சஞ்சய்யின் தோற்றத்துக்கு அவர் நினைத்தால் ரூ.100 கோடி செலவு செய்து நாயகனாக நடிக்கலாம். அப்படி ஒரு தோற்றம் கொண்டவர். ஆனால் அவர் நடிப்பைத் தேர்வு செய்யாமல் படம் இயக்குவதில் ஆர்வமாக உள்ளார்.

“அவர் எடுத்தது சரியான முடிவு என்றும் தாத்தா எஸ்ஏசி போல் பேரனும் திரைத்துறையில் தடம்பதிப்பார் என்று கூறி வாழ்த்தினேன். அவ்வளவுதான்.

“எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதன் ரகசியம் என்ன என்று கேட்டால், தோல்வியை ஏற்றுக் கொண்டால்தான் வெற்றிக்கான பாதை திறக்கும். அதேபோல் அறிவு சார்ந்து இயங்குவது போர் அடித்துவிடும்.

“ஆத்மார்த்தமாக இயங்குவதுதான் மகிழ்ச்சியை அதிகரிக்கும். இதை உணர்ந்து நான் ஆத்மார்த்தமாக உழைக்கிறேன். அதுதான் காரணம்,” எனப் பளிச்சென்று சொல்கிறார் தம்பி ராமையா.

குறிப்புச் சொற்கள்