கன்னடத் திரையுலகில் ரசிகர்கள் மனதைக் கவர்ந்த இளம் நாயகிகளில் ஒருவராக மிளிரும் சைத்ரா, தமிழில் ‘3BHK’ படத்தின் மூலம் அறிமுகமாகி உள்ளார்.
வித்தியாசமான கதைக்களம், கதாபாத்திரங்களில் நடிக்கக்கூடியவர் என குறுகிய காலத்திலேயே நல்ல பெயர் வாங்கியுள்ள இவர், தமிழிலும் அத்தகைய வாய்ப்புகளையே எதிர்பார்ப்பதாகச் சொல்கிறார்.
ஸ்ரீ கணேஷின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘3BHK’ படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பைப் பெற சைத்ராவுக்கு ஒரே ஒரு காட்சி மட்டுமே தேவைப்பட்டதாம்.
“எனது கதாபாத்திரத்திற்கும் சித்தார்த்துக்கும் இடையிலான ஓர் அழகான பரிமாற்றம் அந்தக் காட்சி. அதை தமிழ் தெரிந்த நண்பர் வாசித்துக் காட்டினார். மிக அழகான, உணர்வுபூர்வமான அக்காட்சி என் மனதைத் தொட்டது.
“உடனடியாக ஸ்ரீ கணேஷை கைப்பேசியில் அழைத்து, ‘இந்த காட்சிக்கு நான் தயாராக வருவேன். நான் நடிப்பதைப் பாருங்கள், பிறகு முடிவு செய்யுங்கள்’ என்று சொன்னேன். பதிலுக்கு அவரும் ‘நான் மனதில் நினைத்த ஐஸ்வர்யா கதாபாத்திரத்துக்கு நீங்கள்தான் பொருத்தமானவர்’ என்றார்.
‘3BHK’படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பில் ஐஸ்வர்யா கதாபாத்திரம் குறித்து அதிகம் விவரிக்கப்படவில்லை. எனினும் அக்கதாபாத்திரம் பலரைக் கவர்ந்தது.
“ஐஸ்வர்யா எளிமையானவர், அமைதியானவர் எனத் தோன்றலாம். அவர் அதிக உணர்ச்சிகளைக் காட்டமாட்டார். ஆனால், சூழ்நிலைகளுக்கு ஏற்ப சமநிலையுடனும் முதிர்ச்சியுடனும் பதிலளிப்பார். இப்படித்தான் ஐஸ்வர்யா குறித்து எனக்கு விவரிக்கப்பட்டது.
“இத்தகைய வேடங்களில் நடிப்பது எனக்குப் புதிதல்ல. ஏற்கெனவே, பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணாகவும் பாலியல் தொழிலாளியாகவும் நடித்த அனுபவம் உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“ஆயினும், ஐஸ்வர்யா போன்ற கதாபாத்திரம் மிகவும் சவாலானது. நான் எல்லாவற்றுக்கும் எதிர்வினையாற்றக் கூடியவள். ஆனால், ஐஸ்வர்யா அதற்கு நேர்மாறான பெண். இந்த வேறுபாடு காரணமாகவே நான் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டேன்,” என்கிறார் சைத்ரா.
சிறு வயது முதல் தன்னம்பிக்கையுடன் செயல்படுவதான் தமது முக்கியமான அடையாளமாக இருந்தது என்று சொல்லும் சைத்ரா, ஐஸ்வர்யா கதாபாத்திரத்துக்காக தனது ஆற்றலை முழுமையாகக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்ததாகச் சொல்கிறார்.
இந்தப் படத்தில் ஒப்பந்தமாகும்போது சைத்ராவுக்கு தமிழ் அறவே தெரியாதாம். அதனால் மொழியை சரியாகப் பேசுவது, வசனங்களை மனப்பாடம் செய்வது ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருந்ததாம்.
எனினும் இப்படத்தின் தமிழ், தெலுங்குப் பதிப்புகளுக்கு இவரேதான் பின்னணி குரல் கொடுத்துள்ளார்.
“படத்தின் நாயகன் சித்தார்த் என்னை மிகவும் ஊக்குவித்தார். அதற்காக நன்றி. இன்று ரசிகர்கள் என்னை நல்ல நடிகை எனப் பாராட்டுகிறார்கள் என்றால் அதற்கு சித்தார்த்தின் வழிகாட்டுதலும் ஒரு காரணம்.
“எனக்கு எல்லாம் முறையாக, குறித்த நேரத்தில் நடக்க வேண்டும். நடிகையாவதற்கு முன்பே எனக்கு எது தேவை, எது தேவை இல்லை என்பதில் தெளிவாக இருப்பேன். எனக்கு என்ன வேண்டும் என்பது எனக்கு மட்டுமே தெரியும் என்பதிலும் உறுதியாக இருந்தேன்.
“சில காலம் ஒரே மாதிரியான பாத்திரங்களைச் செய்ய வேண்டியிருக்கலாம். ஆனால் ஒரு நடிகையாக நான் நடிக்கக்கூடிய பல கதாபாத்திரங்கள் இருக்கும். அவற்றையும் நிச்சயம் அடையாளம் காண்பேன்,” என்று சொல்லும் சைத்ரா, தமிழில் அடுத்து ராஜு முருகனின் ‘மை லார்ட்’ படத்தில் சசிகுமாருடன் இணைந்து நடிக்கிறார்.
இதில் இவருக்கு கோவில்பட்டி கிராமத்துப் பெண் கதாபாத்திரமாம்.