அண்ணா என்று அழைத்த சாய் பல்லவி: கோபப்பட்ட சிவா

3 mins read
5cfc6815-9621-437f-8543-e2491dc43581
சாய் பல்லவி. - படம்: ஊடகம்

‘அமரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அப்படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி ஒருமுறை தன்னை அண்ணா என்று அழைத்ததாகக் குறிப்பிட்டார்.

இதைக்கேட்டு நிகழ்ச்சி அரங்கில் இருந்த அனைவரும் வாய்விட்டுச் சிரித்தனர்.

இந்த சுவாரசியமான சம்பவம் குறித்து மேலும் பேசிய சிவகார்த்திகேயன், சில ஆண்டுகளுக்கு முன்பு சாய் பல்லவி நடிப்பில் வெளியான ’பிரேமம்’ மலையாளப் படத்தைப் பார்த்தபிறகு, தானும் அவரது தீவிர ரசிகராக மாறிவிட்டதாகக் குறிப்பிட்டார்.

“எப்போதுமே ஆசிரியர் என்றால் மாணவர்கள் தெறித்து ஓடுவார்கள். ஆனால் ‘பிரேமம்’ படத்தில் ஆசிரியை மலருக்கு கிடைத்த மரியாதை வியக்கவைத்தது.

“ஒரு முறை சாய் பல்லவியின் கைப்பேசி எண்ணை வாங்கி அவரைத் தொடர்புகொண்டேன். மிகச் சிறப்பாக நடித்திருப்பதாகவும் அறிமுக, இறுதிக் காட்சிகள் அருமையாக உள்ளதாகவும் பாராட்டினேன்.

“அதற்கு சாய் பல்லவி, ‘ரொம்ப நன்றி அண்ணா’ என்றார். அதைக் கேட்டதும் கடுப்பாகிவிட்டேன்.

“நிறுத்துமா. நான் ‘மலர் டீச்சரி’டம் பேசுவதாக நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் ஏன் சாய் பல்லவி போல் பேசுகிறீர்கள். தயவுசெய்து அண்ணா என்று மட்டும் அழைக்கவேண்டாம். ஏனெனில், என்றாவது ஒரு நாள் நாம் சேர்ந்து நடிப்போம் என்று சொன்னேன். அன்று நான் சொன்னது ‘அமரன்’ படம் மூலமாக நிறைவேறியுள்ளது,” என்று சிரிப்பலைக்கு மத்தியில் குறிப்பிட்டார் சிவகார்த்திகேயன்.

சாய் பல்லவி ஒவ்வொரு படத்திலும் தன்னை ஒரு சிறந்த நடிகையாக உயர்த்திக்கொண்டே வருகிறார் என்று குறிப்பிட்ட சிவா, சாய் பல்லவி படங்கள் என்றால் தனித்துவமாக இருக்கும் என்ற பெயரையும் பெற்றுள்ளதாகப் பாராட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

இதற்கிடையே, இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மணிரத்னம், தானும் சாய் பல்லவியின் தீவிர ரசிகர் என்று குறிப்பிட, நிகழ்ச்சியில் பங்கேற்ற சாய் பல்லவியின் முகம் வெட்கத்தில் சிவந்தது.

“சாய் பல்லவி ஒரு சிறந்த நடிகை. எந்தக் கதாபாத்திரத்தில் தோன்றினாலும் அவரது நடிப்பு இயல்பாக இருக்கும். அவரது படங்களைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன். அந்த வகையில், நான் அவரது ரசிகன். சாய் பல்லவியுடன் ஒரு படத்தில் பணியாற்ற வேண்டும் என ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்றார் மணிரத்னம்.

மேலும், சிவகார்த்திகேயன் தன்னைப் போலவே திரையுலகில் படிப்படியாக உயர்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

“தற்போது ஒருசிலர் ஓரிரு படங்களில் நடித்தாலோ அல்லது படங்களை இயக்கினாலோ, புகழ்பெற்ற இயக்குநர்களாக முன்னணிக்கு வந்துவிடுகிறார்கள். ஆனால், நான் படிப்படியாக வளர்ந்து வந்தேன். சிவாவும் என்னைப் போல் முன்னேறி வந்திருக்கிறார்.

“தற்போதைய சூழலில் கற்பனைக் கதைகளை இயக்குவதுகூட எளிதான விஷயம்தான். ஆனால், உண்மைக்கதைகளை இயக்குவது மிகவும் கடினம். மிகக் கவனமாகச் செயல்படாவிட்டால் எல்லாமே சிக்கலாகிவிடும்,” என்றார் மணிரத்னம்.

இதையடுத்து பேசிய சாய் பல்லவி, தொடக்கத்தில் தமக்கு திரைத்துறை மீது ஆர்வம் இல்லை என்றும் மணிரத்னத்தின் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தைப் பார்த்த பின்புதான் சினிமாவில் நடிக்கும் ஆசை வந்தது என்றும் குறிப்பிட்டார்.

“அதுபோன்ற படங்களில் நடிக்க ஆசைப்பட்டேன். மணிரத்னத்தை ஒருமுறையாவது சந்திக்க முடியுமா என ஏங்கி இருக்கிறேன். இன்று அவரைச் சந்தித்தது பெரிய ஆச்சரியம் எனில், அவர் என்னைப்பற்றி குறிப்பிட்ட வார்த்தைகள் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“எனது சினிமா வாழ்க்கை முடிவதற்குள் மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என விரும்புகிறேன். இதை அவரிடம் நேரடியாகச் சொல்லிவிடலாமா என்ற யோசனையும் இருந்தது.

“ஆனால் இறைவன் இந்தக் குறிப்பிட்ட நாளைத் தேர்வு செய்து எனது ஆசையை நிறைவேற்றியுள்ளார்,” என்றார் சாய் பல்லவி.

குறிப்புச் சொற்கள்