கர்நாடகாவைச் சேர்ந்த தனக்கு வாய்ப்பு தந்து, ஆதரவு அளித்தது தமிழ் மண்ணும் தமிழ் மக்களும்தான் என்று தனது பேட்டிகளில் தவறாமல் குறிப்பிடுகிறார் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.
இவர் நாயகியாக நடித்த ‘சென்னை ஃபைல்ஸ்: முதல் பக்கம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஷில்பா, தமிழ்ச் சினிமாவில் மட்டும்தான் அனைத்து பேதங்களையும் கடந்து, திறமைக்கு மட்டுமே மதிப்பு கொடுப்பதாகக் குறிப்பிட்டார்.
“எனக்கு வாழ்வளித்த தமிழ் ரசிகர்களுக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடிப்பேன்,” என்றார் ஷில்பா.
இவர் ஏற்கெனவே, ‘காளி’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, ‘சிங்க பெண்ணே’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என விரும்புவதாகவும் நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் தொடர்ந்து ஓராண்டு கால்ஷீட் அளிக்கத் தயாராக இருப்பதாகவும் கூறுகிறார் ஷில்பா மஞ்சுநாத்.

