திரையில் மின்னும் தீபாவளித் திரைப்படங்கள்

திரையில் மின்னும் தீபாவளித் திரைப்படங்கள்

1 of 2
படம்: சினிமா எக்ஸ்பிரஸ்
கோப்புப் படம்: என்டிடிவி

07 Nov 2026 - 11:09 am

2 mins read

பொதுவாகத் தீபாவளிப் பண்டிகை என்றாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான்.

முன்னணி நட்சத்திரங்களின் ஐந்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வரிசைகட்டி நின்று திரையரங்குகளை அலங்கரிக்கும். ஆனால், இந்த 2026ஆம் ஆண்டு தீபாவளிப் போட்டியில் பெரிய அளவிலான நெரிசல் ஏதுமின்றி, இரண்டு நேரடித் தமிழ்ப் படங்கள் மட்டுமே திரையில் மோதத் தயாராக உள்ளன.

மூன்றாவது வெற்றியை நோக்கும் சூர்யா

‘ரோமாஞ்சம்’, ‘ஆவேஷம்’ போன்ற பிரம்மாண்ட வெற்றிப்படங்களை இயக்கிய ஜித்து மாதவனின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சீன்’ திரைப்படம் நவம்பர் 6ஆம் தேதி திரைக்கு வரும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.

‘ழகரம் ஸ்டுடியோஸ்’, ‘2டி என்டர்டெயின்மென்ட்’ இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் மீண்டும் களமிறங்கியுள்ளார் நஸ்ரியா.

இந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியீடு கண்ட ‘கருப்பு’ (ரூ.340 கோடி வசூல்), ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ (ரூ.200 கோடி வசூல்) ஆகிய படங்களைத் தொடர்ந்து, இத்திரைப்படம் அவருக்குத் தொடர்ந்து மூன்றாவது வெற்றியைத் தரும் என்ற எதிர்பார்ப்பு திரையுலகில் நிலவுகிறது.

சுஷின் ஷியாமின் பின்னணி இசை, நஸ்லென், ஆனந்தராஜின் நகைச்சுவைக் கூட்டணி ஆகியவை இளையர்களைத் திரையரங்கு நோக்கி ஈர்க்கும் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

பக்திமயமாக வரும் ‘மூக்குத்தி அம்மன்-2’

சுந்தர் சி இயக்கத்தில் ‘வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்’ தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன்-2’ திரைப்படமும் நவம்பர் 6ல் வெளியீடு காணும் என்பது ரசிகர்களுக்கு முன்பே தெரியும்.

2020இல் நேரடியாக ஓடிடியில் வெளியீடு கண்டு அமோக வரவேற்பைப் பெற்ற ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகியுள்ளது.

திரையுலகில் முப்பது ஆண்டுகால அனுபவம் கொண்ட சுந்தர் சி, வழக்கமான தனது பிரம்மாண்ட கிராஃபிக்ஸ் காட்சிகளுடனும் நகைச்சுவை உணர்வுடனும் இப்படத்தை இயக்கியுள்ளார்.

நயன்தாராவின் அம்மன் தோற்றமும் அவருக்கு எதிரான தீய சக்திகளாக ரெஜினா கசாண்ட்ரா, துனியா விஜய் நடித்துள்ள காட்சிகளும் குடும்பப் பார்வையாளர்களைப் பெரிதும் கவரும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.

‘ஹிப்ஹாப்’ தமிழாவின் இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படம் இந்த தீபாவளிக்குக் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய சிறந்த தேர்வாக அமையும் என்கிறார்கள் ஏற்கெனவே படத்தைப் பார்த்துவிட்ட விமர்சகர்கள்.

பிரம்மாண்ட மொழிமாற்றுத் திரைப்படம் ‘ராமாயணா’

நேரடித் தமிழ்ப் படங்களைத் தவிர்த்து, நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் தமிழ் மொழிமாற்றுப் பதிப்பும் நவம்பர் 5ஆம் தேதி வெளியீடு கண்டது.

வெவ்வேறு வகையான திரைப்படங்கள் களமிறங்குவதால், இந்த ஆண்டின் தீபாவளிப் பந்தயத்தில் பெரிய அளவிலான வசூல் மோதல்கள் இருக்காது என்றும் அனைத்துப் படங்களுக்குமான திரையரங்க ஒதுக்கீடு சீராக இருக்கும் என்றும் திரைத்துறை நிபுணர்கள் கருதுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்