இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் ‘அரசன்’ திரைப்படத்தில் மும்முரமாக நடித்து வரும் சிலம்பரசன், அடுத்து இயக்குநர் கீர்த்தீஸ்வரனுடன் இணைய உள்ளார்.
அவர்களுடன் சாய் அபயங்கர் இணைகிறார். அம்மூவரின் கூட்டணியில் உருவாகும் படம் குறித்து கோடம்பாக்கத்தில் பல்வேறு எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன.
இந்தப் படத்துக்காக மீண்டும் காக்கிச்சட்டை அணிகிறார் சிம்பு. ‘டியூட்’ திரைப்படத்தின் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கும் புதிய திரைப்படத்தில் சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வெளியானதுமே சிம்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தைத் தொடங்கிவிட்டனர்.
இதற்கு முன்பு ‘ஒஸ்தி’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் சிம்பு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் மீண்டும் திரையில் கம்பீரமான காக்கி உடையில் தோன்ற இருப்பதுதான் அவரது ரசிகர்களின் உற்சாகத்துக்குக் காரணம்.
‘டியூட்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த சாய் அபயங்கர்தான் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஏற்கெனவே படத்தின் ஒரு பாடலுக்கு மெட்டமைத்துவிட்டாராம்.
சிலம்பரசனுக்கும் சாய் அபயங்கருக்கும் இடையே உள்ள நல்ல புரிதல் காரணமாக, இசைத்தளத்தில் இந்தப் பாடல் நிச்சயம் பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கதாநாயகியாக நடிக்க முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதத்தில் படப்பிடிப்பைத் தொடங்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
