கென் கருணாசைப் பாராட்டிய சிம்பு

கென் கருணாசைப் பாராட்டிய சிம்பு

1 mins read
b10c5bfd-1303-4315-af8d-34e3b45b0f84
மார்ச் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘யூத்’, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. - படம்: சினிமாஸ்பைஸ்

நகைச்சுவை நடிகர் கருணாசின் மகன் கென் கருணாஸ் இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’.

மார்ச் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான அப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

அண்மையில் அப்படத்தை ஒரு பிரத்யேகக் காட்சியில் பார்த்த சிம்பு, கென் கருணாசின் இயக்கத்தையும் நடிப்பையும் வெகுவாகப் பாராட்டினார். “படம் மிகவும் புதுமையாக இருக்கிறது. இன்றைய இளையர்கள் காதலை எப்படிக் கையாள்கின்றனர் என்பதை மிகவும் எதார்த்தமாக கென் காட்டியுள்ளார்,” எனத் தமது சமூக ஊடகப் பதிவில் சிம்பு தெரிவித்தார்.

“குறிப்பாக, ஒரு சிறிய வயதில் நடிப்பதுடன், ஒரு படத்தையும் இயக்கி அதில் வெற்றியும் பெறுவது சாதாரணமானதன்று. கென் ஒரு முழுமையான கலைஞனாக உருவெடுத்துள்ளார்,” என அவர் கென்னைப் புகழ்ந்தார்.

90களில் சிம்பு, தனுஷ் ஆகியோர் நடித்த ‘காதல் அழிவதில்லை’, ‘துள்ளுவதோ இளமை’ போன்ற படங்கள் ஏற்படுத்திய அதே தாக்கத்தை, இன்றைய காலத்திற்கு ஏற்ப ‘யூத்’ படம் உருவாக்குவதாகத் திரையுலக விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

அதைத் தமது பதிவில் குறிப்பிட்ட சிம்பு, “மீண்டும் அந்தத் துள்ளலான நாள்களைப் பார்ப்பது போல் இருக்கிறது,” என நெகிழ்ந்தார். சிம்பு பாராட்டியது குறித்துப் பேசிய கென், “சிறுவயதில் இருந்தே சிம்புவின் நடை, உடை, பாவனை, நடிப்பு ஆகியவற்றைப் பார்த்து வளர்ந்தவன் நான். அவரே என் படத்தின் முன்னோட்டக் காட்சியை வெளியிட்டு, இப்போது படத்தைப் பாராட்டியது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய விருது,” என்று தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்