‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் தனது கனவுகள் பலவும் நனவாகி உள்ளதாகச் சொல்கிறார் நடிகை சுவாசிகா.
படம் பார்த்த மோகன்லால், இயக்குநர் சங்கர் உள்ளிட்ட பலரும் இவரைப் பாராட்டியுள்ளனர்.
அந்த மகிழ்ச்சியான தருணங்களை வாழ்நாள் முழுவதும் மறக்க இயலாது என்றார்.
அடுத்து சூர்யா, துல்கர் சல்மான் என முன்னணி நடிகர்களுடன் நடிக்க உள்ளார் சுவாசிகா. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அருமையாக நடிப்பதாக அனைவரும் பாராட்டுகிறார்களாம்.
“உங்கள் நடிப்பு ரகசியம் என்னவென்று கேட்கிறார்கள். அப்படியெல்லாம் ஏதுமில்லை. எனக்கான கதாபாத்திரம் பற்றி யோசிக்கும்போது மனத்தில் சில ஐடியாக்கள் தோன்றும். ‘இப்படிச் செய்தால் நன்றாக இருக்கும்’ என நினைப்பேன். எனினும், படப்பிடிப்புக்குச் சென்ற பிறகே கதாபாத்திரம் மெருகேறும்.
“ஒவ்வோர் இயக்குநரும், ‘இந்த அளவு நடித்தால் போதும்’ என ஒவ்வோர் பாத்திரத்துக்கும் ஓர் அளவுகோல் குறித்திருப்பார்கள். ‘லப்பர் பந்து’ படத்தைப் பொறுத்தவரை, இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து எனது கதாபாத்திரத்துக்கான அனைத்து உணர்வுகளையும் முகத்திலேயே வெளிப்படுத்திவிடுமாறு அறிவுறுத்தினார். அதைத்தான் செய்தேன். நல்ல பெயர் கிடைத்தது,” என்று சொல்லும் சுவாசிகா, ‘மாமன்’ படத்தில், அக்கா கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடித்து பாராட்டுகளை அள்ளியுள்ளார்.
மிக எதார்த்தமாக நடித்திருப்பதாக விமர்சகர்களும் இவரைப் பாராட்டியுள்ளனர்.
நிஜ வாழ்க்கையிலும் இவருக்கு தம்பி இருப்பதால், கச்சிதமாக நடிக்க முடிந்தது.
தொடர்புடைய செய்திகள்
“நிஜ வாழ்க்கையில் எனக்கு நேராத, அனுபவப்படாத இடங்களையும் இயக்குநர் பிரசாந்த்தும் நிறைய சொல்லிக்கொடுத்தார்.
“என்னைப் பொறுத்தவரை, எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், மற்றவர்களைவிட நன்றாக நடிக்க வேண்டும் என நினைப்பேன். வழக்கமான, சாதாரணமான கதாபாத்திரம்தானே என லேசாக நினைத்துவிட்டால் சறுக்கிவிட்டுவிடும்.
“சூரிதான் ‘மாமன்’ படத்தின் கதையை எழுதியுள்ளார். அவரும்கூட நிஜ வாழ்க்கையில் கூட்டுக்குடும்பத்தில் வாழ்பவர். அதனால்தான் ‘மாமன்’ பாத்திரத்திற்கு அவரே மிகவும் பொருத்தமாக இருந்தார்.
“சில காட்சிகளில் ‘கிளிசரினே’ இல்லாமல் அவர் இயல்பாகவே அழுததைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தைப் பார்த்தவர்கள், அடுத்த பத்து ஆண்டுகளில் சூரி கதாநாயகனாக உயர்வார் என நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.
“ஆனால், இயக்குநர் வெற்றி மாறனின் கனவில் கடவுள் தோன்றி சூரியை கதாநாயகனாக்க வேண்டும் என்று சொல்லியிருக்கலாம்.
“அதேபோல் ‘லப்பர் பந்து’ இயக்குநரை நான் இதற்கு முன் சந்தித்ததே இல்லை. ஆனால், அவரே தேடி வந்து இந்தக் கதாபாத்திரத்தில் நீங்கள்தான் நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
“ஒருவேளை கடவுள் சொல்லித்தான் அவர் என்னைத் தேடி வந்திருப்பதாகக் கருதுகிறேன்,” என்று ஆனந்த விகடன் ஊடகப் பேட்டியில் சுவாசிகா கூறியுள்ளார்.
திரைப்பட நடிகையாவதற்கு முன்பு சின்னத்திரை தொடர்களில் நடித்துக் கொண்டிருந்தார் சுவாசிகா.
திரைத்துறையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைதான் புதுப் படங்கள் வெளியாவது வழக்கம். சிலருக்கு ஒரே வெள்ளிக்கிழமையில் வாழ்க்கை முற்றிலும் மாறிப்போகும். பலருக்கு கடின உழைப்புதான் வெற்றி தரும்.
“அந்த வகையில், நான், திரு சூரி போன்றவர்கள் மற்றவர்களுக்கு நல்ல முன்மாதிரி எனலாம். பல ஆண்டுகளாக சினிமாவில் வெற்றிக்காகக் காத்திருக்கும் பலருக்கு எங்கள் வாழ்க்கை நம்பிக்கை அளிக்கும். உண்மையாக உழைத்தால் நிச்சயம் உங்கள் மீது வெளிச்சம் படும்,” என தீர்க்கமாகச் சொல்கிறார் நடிகை சுவாசிகா.