தமிழ் மக்கள் உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் உணர்வு ஒன்றுதான் என்றும் சிங்கப்பூர் ரசிகர்கள் தனது ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தைப் பெரிதும் வரவேற்பார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ்.
வெள்ளிக்கிழமை வெளிவரவுள்ள தமது 25ஆவது திரைப்படம் குறித்தும், தனது இசைப் பயணம், அனுபவங்கள் குறித்தும் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்ட இவர், “எனது 17 வயதில் திரைத்துறைக்குள் முழுமையாக நுழைந்துவிட்டேன். 20 ஆண்டுகாலப் பயணத்திற்குப்பின் இன்னும் மக்கள் என்னை ரசிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது எனது பொறுப்பைக் கூட்டியுள்ளதாக உணர்கிறேன்,” என்றார்.
இன்னும் பல்வேறு வழிகளில் மக்களை மகிழ்விக்க விருப்பம் உள்ளதாகக் கூறிய இவர், “எந்தக் கடினமான செயலையும் கையிலெடுத்து அதனைச் சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டும் எனும் மனப்பான்மை எனக்கு உண்டு. அப்படித்தான் நடிப்பிற்குள் வந்தேன்,” என்றார்.
தனது இசைப் பயணத்தையும் நடிப்புப் பயணத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது என்று சொன்ன ஜி.வி. பிரகாஷ், “ஏறத்தாழ 100 படங்கள் இசையமைத்தபின் இந்த அன்பும் ஆதரவும் கிடைத்துள்ளது. அதே ஆதரவை 25 படங்கள் நடித்த நடிகனுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது,” என்றார்.
சிறு வயதிலிருந்து இசை, இசைக்கருவிகள் உள்ளிட்டவற்றை முறையாகப் பயின்று இசையமைப்பில் நுழைந்த இவர், நடிப்பில் அடியெடுத்து வைத்தபோது ‘ஆடுகளம்’ நரேனிடம் நடிப்புப் பயிலரங்கில் பங்கேற்றதையும், தொடர்ந்து தான் பணியாற்றிய இயக்குநர்களிடம் கற்று தனது நடிப்பை மெரு[Ϟ]கேற்றியுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
ஒரே மாதிரியான செயல்களைச் செய்வதைவிட பல்வேறு புதிய பரிமாணங்கள் ஏற்பது தன்னைத் துடிப்புடன் வைத்துள்ளதாக ஜி.வி. பிரகாஷ் குறிப்பிட்டார். தனது 25ஆவது படத்தில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ள இவர், “பொதுவாகவே பல வேலைகளைச் செய்வது கடினம்தான். அதிலும் ஒரே படத்தில் அனைத்தையும் செய்வதற்குக் கடின உழைப்பும் நேர நிர்வாகமும் உதவியது,” என்று சொன்னார்.
“ஒரு பணியை மேற்கொள்ளும்போது, அதில் முழுக் கவனத்தையும் செலுத்துவேன். இசை அமைக்கும்போது நடிப்பதை மறந்துவிடுவேன். நடிக்கும்போது இசையமைப்பாளராக இல்லாமல் நடிகனாக மாறி, அதில் முழு உழைப்பையும் செலுத்துவேன்,” என்கிறார் ஜி.வி. பிரகாஷ்.
“கிங்ஸ்டன் படத்திற்காக பெரிய கப்பல் அமைத்தோம். ‘ஹைட்ராலிக்’ தொழில்நுட்பத்தில் அது உண்மையான கப்பல்போல இயங்கும். தவிர,‘கிராபிக்ஸ்’ காட்சிகளும் சிறப்பாக வந்துள்ளன,” என்றார்.
தொடர்புடைய செய்திகள்
“சிங்கப்பூரில் ஜீ ஸ்டுடி[Ϟ]யோஸ் வெளியிடவுள்ள இப்படம் எப்போதும்போல இல்லாமல் மாறுபட்ட படமாக இருக்கும். கடல்சார் மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்தும். திகில், ‘ஃபேன்டசி’ கலந்த திரைப்படம் இது. அனைவரும் ரசிப்பார்கள் என எதிர்பார்க்கிறேன்,” என்றார் ஜி.வி. பிரகாஷ்.