சிங்கப்பூரில் பல்வேறு பாரம்பரியக் கலைகள் தழைத்துவரும் நிலையில், இன்றளவும் பெருவரவேற்புடன் திகழ்வது தமிழ் நாடகத் துறை.
சிங்கப்பூரை மையமாகக் கொண்ட, உள்ளூர்க் கதைகளைப் பேசும் நாடகங்கள் படைத்ததில் முன்னோடியாகத் திகழ்ந்தோரில் குறிப்பிடத்தக்கவர் திரு எஸ் எஸ் சர்மா. இவர் எழுத்து, இதழியல், நாடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்.
எழுத்துத் துறையில் தொடங்கி, கதை, தொடர்கதை எனப் பயணம் செய்த இவர், சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தின் ஆதரவுடன் நாடகத் துறையில் அடியெடுத்து வைத்தார்.
கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட நாடகங்களை உருவாக்கியுள்ளதுடன் தயாரிப்பு, இயக்கம், நடிப்பு, மேடை மேலாண்மையென 70க்கும் மேற்பட்ட நாடகங்களில் இவர் பங்காற்றியுள்ளார்.
நகைச்சுவை, சமகாலப் பகடி, திகில் என அனைத்துப் பாணிகளிலும் நாடகங்கள் படைத்த திரு சர்மா, சிங்கப்பூர்த் தமிழ் நாடகத் துறையில் பல மாற்றங்களுக்குத் தொடக்கப்புள்ளியும் வைத்தவர்.
நவீன காலத்தில் பாரம்பரியமாகப் போற்றி வளர்க்கப்பட்ட பல அருங்கலைகள் ஓரங்கட்டப்பட்டு விட்டதாலும், நவீன தாக்கத்தாலும் அழிந்து வருவதாகக் கருதியதாகவும், பணியாற்றிக்கொண்டே ஓய்வு நேரத்தை எவ்வாறு கலைத்துறைக்காகச் செலவழிக்க முடியும் என்பதற்குத் தாம் எடுத்துக்காட்டக விளங்கியதாகவும் அவர் தமது அனுபவ நூலில் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்வத்துக்கு வித்திட்ட எழுத்துப்பணி
தமிழ் எழுத்துத் துறையின்மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாகத் திரு சர்மா முதன்முதலில் தமிழ் முரசு நாளிதழில் எட்டாண்டுகள் பணிபுரிந்தார். அது இலக்கியப் பணிக்கு உறுதியான அடித்தளமாகத் தமிழ் முரசில் பணியாற்றிய நாள்கள் அமைந்தன என்று அவர் தமது நூலில் பதிவு செய்துள்ளார்.
தமிழவேள் கோ சாரங்கபாணியின் அறிவுரையின் பேரில் மொழிபெயர்ப்பைக் கற்றுக்கொண்டேன் என்றும் அது ஒரு தனிக் கலையெனத் தமக்கு உணர்த்திய அவரை மறக்கவே முடியாது என்றும் திரு சர்மா பதிவிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அப்போது, இலங்கை, இந்தியப் பத்திரிகைகளுக்கும் இவர் செய்திகள் அனுப்பி வந்தார். ‘குண்டூசி’, பாசரசு நடத்திய ‘கலை’ ஆகிய இதழ்களிலும் இவர் செய்தியாளராகப் பணியாற்றினார். இலங்கையின் வீரகேசரி, ஈழகேசரி இதழ்களுக்கும் எழுதிவந்தார். ‘பேசும் படம்’ என்ற மாத இதழிலும் சிங்கப்பூர் பற்றிய கட்டுரைகள் பலவற்றை எழுதினார். பத்துப் பயணக்கட்டுரை நூல்கள், ஐந்து கட்டுரை நூல்களுடன் எட்டு நாடக நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.
இல்லந்தோறும் இடம்பெற்ற இதழாக நீண்டகாலம் திகழ்ந்த ‘இந்தியன் மூவி நியூஸ்’ பத்திரிகையை 1952 முதல் நாற்பதாண்டுகளுக்கு ஆசிரியர் பொறுப்பிலிருந்து நடத்தினார். வேல், மலேசியா மலர், அலை ஓசை ஆகிய இதழ்களையும் ஆசிரியராக வழிநடத்தினார்.
இந்தத் திரைத்துறைப் பத்திரிகைக்காகப் பல பிரபலங்களை நேர்கண்ட இவரை நாடகத்துறையை நோக்கி பார்வையைத் திருப்பச் செய்ததும் ஒரு நேர்காணல்தான்.
நாடகத்துறைக்கு இட்டுச் சென்ற நேர்காணல்
இந்தியாவின் முன்னணி இதழான ஆனந்த விகடன் ஆசிரியர் தேவனை நேர்கண்ட வாய்ப்பும், அதனைத் தொடர்ந்து அவர் எழுதிய நாடகத்தைச் சிங்கப்பூரில் தயாரிக்க வேண்டும் எனும் முடிவும் திரு சர்மாவை அத்துறைக்குள் நுழையக் காரணமாக அமைந்தது.
சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம் தொடங்கப்பட்டதிலிருந்து அதில் பங்காற்றி வந்த இவர், அக்குழுவுடன் இணைந்து அப்போதைய ஆனந்த விகடன் ஆசிரியர் எழுதிய ‘கோமதியின் காதலன்’ நாடகத்தை முதன்முறையாக மேடையேற்றினார்.
இந்திய நுண்கலைக் கழகத்தில் அரங்கேறிய முதல் தமிழ் நாடகம் அதுதான். 1954ஆம் ஆண்டு ஏப்ரல் 14, 15 தேதிகளில் அரங்கேறிய இந்நாடகம் மக்களிடையே பெருவரவேற்பு பெற்றது.
அது அளித்த ஊக்கத்தில் அடுத்தடுத்து சிறுகதைகள், தொடர்கதைகள், நாடகங்களையும் எழுதத் தொடங்கினார் திரு சர்மா.
சிங்கப்பூரையும் மலாயவையும் உள்ளடக்கிய மலேசியா சுதந்திரம் பெற்ற ஆகஸ்ட் 31ஆம் நாளன்று தென்கிழக்கு ஆசியாவைத் தமிழன் கி.பி.12 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்ததை விவரிக்கும் இவரது ‘பவானி’ நாடகம் பல ஊர்களில் அரங்கேறியது.
அடுத்ததாக ‘எடுக்காத படம்’ எனும் முழுநீள நகைச்சுவை நாடகத்தையும் எழுதினார் திரு சர்மா. திரைப்படம் தயாரிக்க முதன் முதலாக வரும் ஒரு படத் தயாரிப்புக் குழுவினர் உள்ளுர் நடிகர்களை வைத்துப் படம் தயாரிக்க பட்டபாட்டை விவரிக்கும் விதமாக அமைந்த இந்நாடகம், கிட்டத்தட்ட இருபதாண்டுகள் மலேசியாவின் பல பகுதிகளிலும் இந்தோனீசியாவிலும் மேடையேறியது.
கலைமாலை, சிங்கப்பூர் வசந்தம், தேன் துளி, சிங்கப்பூர்ச் சித்திரங்கள் எனச் சிங்கப்பூரின் சிறப்பை வெளிப்படுத்தும் பல்வேறு நாடகங்களையும் திரு சர்மா படைத்தார்.
ஒவ்வோர் ஊரிலும் நாடகங்களை நடத்தும்போதும் அங்குப் புகழ்பெற்ற தெருக்கள், கடைகள், புகழாளர்கள் பற்றிய குறிப்புகளை எடுத்துக்கொண்டு நகைச்சுவையுடன் பொருத்தமாக இணைப்பதில் இவர் கவனமாக இருந்தார்.
சிங்கை மண்ணின் வாசனை மிளிர ஆங்கிலம், மலாய், சீன மொழிகளையும் நகைச்சுவையுடன் புகுத்தி, அரங்கம் அதிரும் கலகலப்பான நாடகங்களைப் படைத்தார் திரு சர்மா.
இசை, பாடல், நடனத்துடன் அமைந்த இவரது திகில் நாடகமான ‘கபுகா’ சிங்கப்பூர் மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாடகத்தின் கதாநாயகன் இரு வேடங்களில் நடிப்பதாக அமைந்திருந்த இக்கதையில், ஒத்த தோற்றம் கொண்ட இருவரை நடிக்கவைத்து, கதாப்பாத்திரம் மாறும்போது கீழுள்ள பெட்டியிலிருந்து நொடிப்பொழுதில் இடமாறும் நுட்பத்தைக் கையாண்டார் திரு சர்மா. இது நாடக உலகின் ஆகப் புதிய முயற்சியெனப் பாராட்டப்பட்டது.
தொடர்ந்து இவரது நாடகங்களுக்குக் கவிஞர் கண்ணதாசன், எஸ் டி சுப்புலட்சுமி, டி கே சண்முகம் உள்ளிட்ட பலரும் பாராட்டு மடல்கள் எழுதினர்.
பல்வேறு ‘முதல்’களுக்குச் சொந்தக்காரர்
இரண்டாம் உலகப் போருக்குப் பின் அனைத்து நாடகங்களும் சமூகச் சீர்திருத்த நாடகங்களாக அமைந்தாலும், எளிமையான, விறுவிறுப்பான திரைப்பட பாணி நாடகங்கள் படைப்பதிலேயே திரு சர்மாவுக்கு ஆர்வம் இருந்தது. கதை ஓட்டத்தில் மக்கள் கருத்துகளை உள்வாங்கினால் போதும், சொற்பொழிவுகளாகச் சொல்லத் தேவையில்லை என்பது இவரது ஆழமான நம்பிக்கையாக இருந்தது.
இதனாலேயே பல்வேறு மாற்றங்களுக்கு இவர் முதலாகத் திகழ்ந்தார்.
சிங்கப்பூர் கலைஞர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ‘சுழல்’தான் முதன்முதலாகக் கடல் கடந்து வெளிநாடு ஒன்றில் அரங்கேற்றப்பட்ட முழு நீள நாடகம்.
இவர் படைப்பில் உருவான இயந்திர மனிதனை அடிப்படையாகக் கொண்ட ‘விண்வெளி வீரன்’ நாடகம் தமிழில் உருவான முதல் அறிவியல் நாடகம்.
சிங்கப்பூரின் முன்னணி இசைக் கலைஞரான இசைச் செல்வர் பன்னீர்செல்வம் முதன்முதலில் மேடையேறிப் பாடியது இவரது ‘சுழல்’ நாடகத்தில்தான்.
வெளிப்புற அரங்கில் நடைபெற்ற சிங்கப்பூர் நாடகங்களை குளிரூட்டப்பட்ட உள்ளரங்கு நாடகங்களாகச் சுவை மாறாமல் மாற்றியது, ஒலி, ஒளிக் காட்சிகளில் புதுமை, திருத்தமான எளிய மக்களின் தமிழில் வசனங்கள், நகைச்சுவை நடனங்கள் எனப் பல நவீனங்களைப் புகுத்திய முதல் நாடக ஆசிரியரும் இவர்தான்.
வான்குடையிலிருந்து இறங்கி அந்தரத்தில் ஆடுவது போன்ற நடனக் காட்சியை அமைப்பது உள்ளிட்ட நுணுக்கமான புதுமைகளையும் திரு சர்மா நாடகங்களில் புகுத்தினார்.
நாடகத்தின்வழி தமிழ், கலைத் தொண்டு
நாடகங்கள்மூலம் மொழியை வளர்ப்பதைத் தாண்டி, சமூகப் பணிகளையும் இவர் மேற்கொண்டார். கோலக் கிள்ளான் ‘திருக்குறள் மன்றத்துக்கு’ நிதி திரட்ட, தமது பிரபலமான ‘மர்ம மாளிகை’ நாடகத்தை இரு நாள்கள் அரங்கேற்றி அதன்மூலம் கணிசமான நிதி திரட்டினார்.
கிம் கியாட் சமூக மன்றச் செயலாளராகவும் திரு சர்மா செயல்பட்டார். தமது ‘இந்து சமயத்திற்கு இனிய விழா’ எனும் கட்டுரை நூல் விற்பனையில் திரட்டப்பட்ட நிதியைச் சிங்கப்பூர் இந்து சபைக்கு நன்கொடையாகவும் அளித்தார்.
மலேசியாவில் நடத்திய நாடகத்தின்மூலம் திரண்ட நிதியைத் தமிழ்ப் பள்ளிக்கூடங்களுக்கும் ஏழை மாணவர்களுக்குப் புத்தகங்கள் வாங்குவதற்கும் மலேசிய இந்திய காங்கிரஸ் தமிழ் இளைஞர் மணி மன்றம் போன்ற அமைப்புகளின் வளர்ச்சி நிதிக்கும் தேசப் பாதுகாப்பு நிதியெனப் பல்வேறு நிதித் தேவைகளுக்கும் இவர் பயன்படுத்தினார்.
தொடர்ந்து பல ஆண்டுகள் நாடகத் துறையில் பயணித்த இவர், 100 ஆண்டுகளில் நடைபெற்ற நாடகங்கள்பற்றிய ஆய்வுக் கட்டுரையைச் சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரவை 1977ல் நடத்திய ஆய்வரங்கில் படித்தார்.
இதுகுறித்து, “உலகத் தமிழ் அரங்கில் சின்னஞ்சிறு குடியரசின் தமிழ் மேடைக் கலை பற்றிக் குரல் கொடுக்க முடிந்ததை ஒரு மறக்க முடியாத சாதனையாகவே நான் கருதுகிறேன்,” என்று தமது நூலில் பதிவு செய்துள்ளார்.
தமது அரை நூற்றாண்டுகால நாடக அனுபவங்களை ‘நாடகம் நடத்தினோம்’ எனும் பெயரில் நூலாக எழுதியுள்ளார். இன்றைய இளம் தலைமுறையினர்க்குத் தாங்கள் ஆற்றிய கலைப் பணியினை நினைவுபடுத்தவே இந்தப் படைப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இயல், இசை, நாடகத்தின்மீது பேரார்வம் கொண்ட திரு சர்மா, அத்திறன்களை ஊக்குவிக்க இந்தியக் கலை மன்றத்தைத் தொடங்கினார். சிங்கப்பூர் இந்தியர் சங்கச் சமூக, கலாசாரச் செயலாளர், ஹொங் கா சமூக மன்ற இந்திய நற்பணிக் குழுத் தலைவர், சமூகத் தற்காப்புக் குழுச் செயலாளர் எனப் பல்வேறு பொறுப்புகளிலும் திறம்பட அவர் செயலாற்றினார்.
தமிழவேள் விருது, சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம் வழங்கிய கலாரத்னா விருது உட்பட பல விருதுகளுக்கும் இவர் சொந்தக்காரர்.
புகழாளர்களின் பாராட்டு
சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம், அவாண்ட் நாடகக் குழு இணைந்து சிங்கப்பூரின் நாடகத்துறையில் தடம் பதித்த மூத்த நாடக ஆசிரியரான 95 வயதாகும் எஸ். எஸ். சர்மாவைச் சிறப்பித்துள்ளது.
“மேடை நாடகங்களில் சிங்கப்பூர்ச் சமூகம் குறித்துப் பேசிய முதல் நாடக ஆசிரியர் திரு சர்மா. மொழி, பண்பாடு, கனவுகள் உள்ளிட்டவற்றை எடுத்துக்காட்டும் நாடகங்களை இயற்றியவர். மேடை நாடகங்களில் திரு சர்மா அதிகமான பெண்களை நடிக்க வைத்தார். அவருக்கு விழா எடுப்பதில் பெருமை,” என்றார் சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத் துணைத் தலைவர் முனைவர் இளவழகன் முருகன்.
“ஏறத்தாழ 140 நாடுகளில் தமிழர்கள் பரவி வாழ்கின்றனர். எங்கும் சிங்கப்பூரில் உள்ள நாடக உலகம் இல்லை என்றே சொல்லலாம். அதற்கு வித்திட்ட வெகுசிலரில் ஒருவர் எஸ் எஸ் சர்மா. அவரது நாடகங்களைப் பார்த்து வளர்ந்ததால் இங்கு இன்னும் உள்ளூர்க் கதை சொல்லும் வகையில் நாடகத் துறையினர் துடிப்புடன் செயல்படுகின்றனர்,” என்று சிலிர்ப்புடன் பகிர்ந்துகொண்டார் அவரது நாடகங்கள் குறித்து உரையாற்றிய அதிபதி அனைத்துலக நாடக நிறுவனத்தின் கலை இயக்குநர் புகழேந்தி.
“உலகின் எந்தப் பகுதிக்குச் சென்று நாடகம் நடத்தினாலும், திரு சர்மாவின் கதைக்களம் சிங்கப்பூராகவே இருக்கும். மொழியே மாறினாலும் களம் மாறாமல் பார்த்துக்கொண்டார். அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்வதும், அவர் முன்னிலையில் பேசக் கிடைத்த வாய்ப்பும் பெரும்பேறு,” என்றும் திரு புகழேந்தி சொன்னார்.
“ஏறத்தாழ 30, 40 ஆண்டுகளுக்குமுன், குறைந்த தொழில்நுட்பம் கொண்ட சூழலிலும் புதுமைகளைப் புகுத்தி நாடகம் நடத்தியவர் திரு சர்மா. நிறைய பயணப்பட்டவர். அவரது நாடகக் குழுவில் அவரது மொத்தக் குடும்பமும் இயங்கியது. புதிய கலைஞர்களை உருவாக்கினார். அவர் கட்டமைத்த தளத்தில் நாங்கள் பயணிக்கிறோம். இது பெருமைக்குரியது,” என்றார் அவாண்ட் நாடகக் குழுவின் இயக்குநர் செல்வா.
“சிங்கப்பூரின் தமிழ் நாடகத்துறையை முன்னோக்கி இட்டுச் செல்லும் புதிய திறமைகளை ஊக்கப்படுத்தி, கலைகள் ஆடம்பரமாகக் கருதப்பட்ட காலகட்டத்தில் ஒரு துடிப்பான படைப்புச் சமூகத்தை வளர்த்தவர் திரு சர்மா. தமிழை வாழும் மொழியாக நிலைத்திருக்கச் செய்வதிலும் அவரது நாடகங்கள் உறுதுணையாக அமைந்தன. நம் மண்ணின் கலைஞரை நாம் கொண்டாடுவது அவசியம்,” என்று சமகால நாடகத்துறைப் பிரபலமான வடிவழகன் (வடி பிவிஎஸ்எஸ்) கூறினார்.
மேலும், “நம் பல்லின சமூகத்தில் தமிழ் நாடகத்துறைக்கு வளமான வரலாறு உள்ளது என்பதையும் அத்துடன் நம் வாழ்வு பின்னிப்பிணைந்துள்ளது என்பதையும் பதிவுசெய்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்,” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.