சிங்கப்பூரில் தாம் நடந்து பார்க்காத சாலைகளே இல்லை என்றும் இங்குள்ள ஒவ்வொரு தெருவும் தமக்குப் பரிட்சயம் என்றும் நடிகரும் இசையமைப்பாளருமான ‘ஹிப்ஹாப்’ தமிழா ஆதி கூறியுள்ளார்.
வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) சிங்கப்பூர் உள்ளரங்கில் மேஸ்ட்ரோ புரொடக்ஷன்ஸ் ஏற்பாட்டில் ‘ஹிப்ஹாப்’ தமிழா படைக்கவுள்ள ‘ரிட்டர்ன் ஆஃப் த டிராகன் மச்சி’ நேரடி இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அதை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) சிங்கப்பூர் வந்திருந்த ஆதி, மதியம் 3 மணியளவில் செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்று ரசிகர்களுடனும் உரையாடினார்.
தமது இசை, திரையுலகப் பயண அனுபவங்கள், தமக்கென்று ஒரு பெயரை உருவாக்கிக்கொண்ட ஒரு கலைஞரின் கண்ணோட்டத்திலிருந்து ஆலோசனைகள், நடைபெறவிருக்கும் இசை நிகழ்ச்சி ஆகியவை குறித்தும் அவர் அனைவருடனும் பகிர்ந்துகொண்டார்.
“இன்று காலையில் சிங்கப்பூருக்கு வந்தவுடன் முதல் வேலையாக ஹைனானீஸ் கோழிச் சோற்றைக் கேட்டேன்,” என்று ஒருநாள் பயணமாக சிங்கப்பூருக்கு வந்த ஆதி சிரித்தபடி கூறினார்.
தாம் சிங்கப்பூருக்கு அடிக்கடி வந்திருப்பதாகக் கூறிய அவர், தம் மனைவியை முதன்முதலில் இங்குதான் சந்தித்ததாக சொன்னார். இதுபோன்ற பல்வேறு காரணங்களால் சிங்கப்பூர் தமது மனத்திற்கு மிகவும் நெருக்கமான நகரம் என்றார் ஆதி.
நியூட்டன் உணவு நிலையத்தில் உட்கார்ந்து ஓய்வெடுப்பதும் ஆர்ச்சர்ட் ரோட்டில் சுற்றித் திரிவதும் தமக்கு மிகவும் பிடிக்கும் என்று அவர் சொன்னார்.
மேலும், தமது இசைப் பயணத்தை முதன்முதலில் தொடங்கியபோது, சிங்கப்பூரில்தான் தமக்கு தேவைப்பட்ட கருவிகளை வாங்கியதாகக் கூறினார். குறிப்பாக, சிம் லிம் ஸ்குவேர் கட்டடத்தில் தமது முதல் ஒலிவாங்கிக் கருவியை வாங்கிய அனுபவத்தை நினைவுகூர்ந்தார்.
“போராட்டங்களுக்கு நடுவில் முன்னேறி வரும் ஒரு கலைஞனாக நான் இருந்த காலகட்டத்தில் பலமுறை சிங்கப்பூருக்கு வந்துள்ளேன்,” என்றார் அவர். இப்போது தமது வாழ்க்கையின் அடுத்த கட்டத்தில் மீண்டும் சிங்கப்பூருக்குத் திரும்பி, தம்முடைய இசை நிகழ்ச்சியைப் படைக்கவுள்ளதை எண்ணிப் பூரிப்படைவதாக அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
இம்மாத இறுதியில் சிங்கப்பூரில் நடைபெறவுள்ள தமது இசை நிகழ்ச்சி குறித்து பேசிய ஆதி, “இந்த இசை நிகழ்ச்சி, அது நடைபெறவுள்ள ஒவ்வொரு நகரத்திலும் ஒருமுறை மட்டும்தான் நடைபெறும் என்பதால் இந்த அனுபவத்தை மீண்டும் பெற முடியாது. இந்த அனுபவம் சிங்கப்பூர் ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒன்றாக இருக்கும்,” என்று உறுதிப்படக் கூறினார்.
ஆட்டமும் பாட்டமும் கொண்ட மூன்று மணி நேர இடைவிடாத குதூகல இசை நிகழ்ச்சியாக இது இருக்கும் என்பதால் அதற்கேற்ப உடையணிந்து வருமாறு அவர் ரசிகர்களைக் கேட்டுக்கொண்டார்.
“இது ஓர் இசை இயக்குநரின் இசை நிகழ்ச்சி அல்ல. தன்னைத் தானே உருவாக்கிக் கொண்ட ஒரு கலைஞனின் இசை நிகழ்ச்சி,” என்றார் ஆதி.
மலேசியாவைத் தொடர்ந்து சிங்கப்பூரில் நேரடி இசை நிகழ்ச்சி படைக்கத் தாம் ஆவலுடன் காத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

