சென்னையில் ‘இந்தியா-ஆசியான் திரைப்பட விழா 2025’ வெள்ளிக் கிழமை (அக்டோபர் 17 தொடங்கியது.
இவ்விழாவை மலேசிய தலைமையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டதாகக் குறிப்பிட்ட உள்ளூர் ஊடகம், சென்னையில் உள்ள மலேசிய துணைத் தூதரகம், இந்திய வெளியுறவு அமைச்சு, இந்திய சுற்றுலாத் துறை, தென்னிந்தியாவில் உள்ள ஆசியான் நாடுகளின் தூதரகங்கள் மற்றும் அவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை இணைந்து நடத்தியதாகத் தெரிவித்தது..
மூன்று நாள் விழாவை தஜிகிஸ்தான், பெலாரஸ் மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகளுக்கான முன்னாள் இந்தியத் தூதர் பி.ஆர். முத்துக்குமார் தொடங்கி வைத்தார்.
திரைப்பட இயக்குநர் பி.வாசு, வெளியுறவு அமைச்சகத்தின் கிளைச் செயலகத் தலைவர் திரு. எஸ். விஜயகுமார் , இந்திய சுற்றுலா அமைச்சின் வட்டார இயக்குநர் வெங்கடேசன் தத்தாரேயன், சென்னையில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதர் எட்கர் பாங், சென்னையில் உள்ள தாய்லாந்து துணைத் தூதர் ரச்சா அரிபார்க், மியான்மார் கௌரவ தூதர் ஜே. ரங்கநாதன், திரைப்படத் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன், ஏவிஎம் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மலேசியா, இந்தியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த படங்கள் விழாவில் திரையிடப்பட்டன. இந்தியாவின் சார்பில் பொன்னியின் செல்வன், ‘டுவெல்த் பெயில்’ படங்கள் திரையிடப்பட்டன.