தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிரிக்கெட் வீராங்கனைக்கு உதவிய சிவகார்த்திகேயன்

1 mins read
b0cbf21d-7c8d-4974-9ca9-d38fec9b89b2
சிவகார்த்திகேயனுடன் சஜீவன் சஜானா. - படம்: ஊடகம்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனையான சஜீவன் சஜானா, நடிகர் சிவகார்த்திகேயன் செய்த உதவியைத் தன்னால் மறக்கவே இயலாது எனக் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் தயாரித்த ‘கனா’ படத்தில் சஜீவன் சஜானாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கிராமத்துப் பெண் ஒருவர், எவ்வாறு இந்திய கிரிக்கெட் அணியில் இணைந்து பெரிய வீராங்கனையாக உயர்கிறார் என்பதுதான் ‘கனா’ படத்தின் கதையாகும். இதில் சிவகார்த்திகேயன் பயிற்சியாளராக முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார்.

இந்நிலையில், இப்படத்தில் நடித்த தனக்கு கேரள மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தின்போது சிவகார்த்திகேயன் உதவியதாகக் கூறியுள்ளார் சஜீவன் சஜானா.

“சில ஆண்டுகளுக்கு முன்பு, கேரளாவில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது சிவகார்த்திகேயன் என்னைத் தொடர்புகொண்டு பேசினார். ஏதாவது உதவி தேவைப்படுகிறதா என்று விசாரித்தார்.

“அப்போது என்னிடம் இருந்த கிரிக்கெட் மட்டை, பந்து உள்ளிட்ட ‘கிரிக்கெட் கிட்’ வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது என்றேன். எனக்குப் புதிதாக ஒன்று தேவைப்படுவதாகவும் கூறினேன். அடுத்த வாரமே எனக்குத் தேவையானவற்றை அனுப்பி வைத்தார் சிவா.

“அந்தச் சமயம் ஒரு முக்கியமான போட்டியில் நான் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. சிவகார்த்திகேயன் செய்த உதவி அந்தச் சமயத்தில் எனக்குப் பெரிதும் கைகொடுத்தது,” என்று சஜீவன் சஜானா மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்