யுவன் சங்கர் ராஜா பெரிய நடிகர், சின்ன நடிகர் என்றெல்லாம் பாகுபாடு பார்க்காமல் அனைத்து படங்களுக்கும் ஒரே மாதிரியாக இசையமைப்பார் என நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.
“இந்த நல்ல குணம், அவரது தந்தை இளையராஜாவிடம் இருந்து வந்திருக்கும்,” என நினைப்பதாக ‘நேசிப்பாயா’ படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
“ஒரு படத்தின் கதை பிடித்திருந்தால் அதற்கு வெற்றிப் பாடல்களைத் தர வேண்டும் என முடிவு செய்யக்கூடியவர் யுவன்.
“அவர் இதுவரை இசை அமைத்த படங்களைப் பார்த்தால் அனைத்தையும் ஒரே மாதிரியாகத்தான் கையாண்டுள்ளார் என்பது புரியும்.
“எனவேதான் அவரை ‘எல்லா காலத்திலும் சிறந்தவர்’ (கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்) என்பதைக் கடந்து, ‘காலத்திற்கு அப்பாற்பட்டவர்’ எனக் குறிப்பிட வேண்டும். அதுதான் சரியாக இருக்கும்,” என்றார் சிவகார்த்திகேயன்.