யூடியூப் தளத்தில் வெளியிட ‘ரீல்ஸ்’ காணொளிகளை எடுக்கும் ஆசையில் திருவண்ணாமலையில் உள்ள வனப்பகுதிக்குள் தனியாகச் சென்று திரும்பிய சின்னத்திரை நடிகை அர்ச்சனா ரவிசந்திரனிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
அவர் அனுமதியின்றி அண்ணாமலையார் கோவிலுக்குப் பின்புறம் உள்ள வனப்பகுதியில் நுழைந்து மலை உச்சி வரை தனியாகச் சென்று திரும்பியதாகக் கூறப்படுகிறது.
பின்னர் தாம் எடுத்த புகைப்படங்கள், காணொளிகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டு, கணிசமான வருமானமும் பெற்றதாகத் தெரிகிறது.
அந்தக் காணொளிப் பதிவுகளில் மலை ஏறி இறங்க மிகவும் சிரமப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இருள் சூழ்ந்தபோது மிகவும் அச்சமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், அவரது இந்த முயற்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அர்ச்சனா சென்று வந்த மலைப்பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அனுமதியின்றி அங்கு செல்வது தவறு.
எனவே, இது குறித்து வனத்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், அனுமதி பெற்றுத்தான் மலையேற வேண்டும் என்பது தமக்குத் தெரியாது என்றும் அதனால் மன்னிப்பு கோருகிறேன் என்றும் கூறியுள்ளார் அர்ச்சனா.
இவர் ‘ராஜா ராணி’, ‘பாரதி கண்ணம்மா’, ‘இந்திரா’ உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்தவர். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

