அப்பா பாசத்தை வெளிப்படுத்தும் ‘அப்பாகுட்டி’ படப் பாடல்

அப்பா பாசத்தை வெளிப்படுத்தும் ‘அப்பாகுட்டி’ படப் பாடல்

1 of 2
படம்: ஏபிபி தேசம்.
படம்: பிஹைன்ட் வுட்ஸ்

14 Nov 2026 - 4:30 pm

2 mins read

தமிழ்த் திரைத்துறையில் வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் உணர்வுபூர்வமான இசையால் ரசிகர்களைக் கட்டிப்போடுவதிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி.

இவரது நடிப்பில் இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அப்பாகுட்டி’ திரைப்படம், நவம்பர் 20ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியீடு காண்கிறது.

பிரீத்தி அஸ்ரானி, குழந்தை நட்சத்திரம் லிதன்யா சிவபாலன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடந்தேறியது.

விழாவில் பங்கேற்றுப் பேசிய விஜய் ஆண்டனி, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் தமது அடுத்தடுத்த படங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

குறிப்பாக, பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பிச்சைக்காரன்’ பட வரிசையின் மூன்றாம் பாகம் குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

“பிச்சைக்காரன்-3’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு, இதர பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு இப்படத்தைத் திரைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம்,” என விஜய் ஆண்டனி குறிப்பிட்டபோது, அரங்கம் அதிர்ந்தது.

“அயோத்தி’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் நான் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பணிகளும் மிகச் சிறப்பாக நிறைவடைந்துள்ளன. அதில் இதுவரை ஏற்றிராத முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அந்தத் திரைப்படம் வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் வெளியாகும்,” என்றும் விஜய் ஆண்டனி அறிவித்தார்.

தொடர்ந்து ‘அப்பாகுட்டி’ படத்தின் இசை, பாடல்கள் உருவான விதம் குறித்து நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த அவர், அப்படத்தில் அப்பா பாசத்தை எடுத்துக்கூறும் உணர்வுபூர்வமான பாடல் இடம்பெற்றுள்ளதாகக் கூறினார்.

“பிச்சைக்காரன்’ முதல் பாகத்தின் இசை உரிமையை விற்பனை செய்ய முயன்றபோது, ‘நூறு சாமிகள் இருந்தாலும்...’ என்ற அம்மா பாடலைக் கேட்ட பல நிறுவனங்கள், ‘இந்தக் காலத்தில் அம்மா பாடல்கள் எல்லாம் எடுபடாது’ எனக் கூறி வாங்க மறுத்துவிட்டன.

“வழக்கமான விலையைவிட வெறும் பத்து விழுக்காட்டுத் தொகையை மட்டுமே அவர்கள் வழங்க முன்வந்ததால், பாடல் உரிமையை யாருக்கும் கொடுக்காமல் நானே வைத்துக்கொண்டேன். ஆனால், படம் வெளியான பிறகு அந்தப் பாடல் படைத்த சாதனை அனைவருக்கும் தெரியும்.

“அதேபோன்ற சூழல்தான் தற்போதும் உள்ளது. ‘அப்பாகுட்டி’ படத்தில் இடம்பெற்றுள்ள உணர்வுபூர்வமான அப்பா பாடலைக் கேட்டுவிட்டு சிலர், ‘இப்போதெல்லாம் இதுபோன்ற பாடல்களை யாரும் கேட்பதில்லை’ என்றனர். அதைக் கேட்டதும் எனக்கு ‘பிச்சைக்காரன்-1’ படம்தான் நினைவுக்கு வந்தது.

“அன்று அம்மா பாடலுக்குக் கிடைத்த அதே பிரம்மாண்ட வெற்றி, நிச்சயம் இந்த அப்பா பாடலுக்கும், ‘அப்பாகுட்டி’ திரைப்படத்திற்கும் கிடைக்கும். அந்த அளவுக்கு இந்தப் பாடல் என் மனத்தைக் கரைத்துவிட்டது.

“தந்தை மீது பாசமுள்ள எந்த மகனும் அந்தப் பாடலைக் கேட்டுவிட்டுச் சாதாரணமாகக் கடந்துபோய்விட முடியாது,” என்றார் விஜய் ஆண்டனி.

குறிப்புச் சொற்கள்