மகனின் பிரார்த்தனை என்னை மீட்டெடுத்தது: ‘பாம்பே’ ஜெயஸ்ரீ

2 mins read
4f5b9ec6-c463-4e82-8422-cd2f83d7a5a4
‘பாம்பே’ ஜெயஸ்ரீ. - படம்: ஊடகம்
multi-img1 of 2

தனது மகனின் பிரார்த்தனையும் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் வாழ்த்துகளும்தான் தன்னை மீட்டெடுத்துள்ளதாகச் சொல்கிறார் பாடகி ‘பாம்பே’ ஜெயஸ்ரீ.

‘வசீகரா’ உள்ளிட்ட திரையிசைப் பாடல்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த இவர், கர்நாடக இசையிலும் கோலோச்சியவர்.

கடந்த ஆண்டு மார்ச் 17ஆம் தேதி, லண்டனில் நடைபெற்ற கச்சேரிக்காகச் சென்னையில் இருந்து சென்ற பாம்பே ஜெயஸ்ரீக்கு, அங்கு தனக்கு உடல்நலக்குறைவு ஏற்படும் என்றோ, உயிருக்கே போராட வேண்டியிருக்கும் என்றோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், அப்படிப்பட்ட ஆபத்து ஒன்று காத்திருந்தது.

லண்டன் தங்குவிடுதியில் திடீரென மயங்கி விழுந்த அவரை, மருத்துவமனையில் சேர்த்து பரிசோதித்தபோது வலது பக்க மூளையில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.

லேசாக நினைவு திரும்பியபோது தீவிர சிகிச்சையில் பல நாள்களைக் கழித்திருந்தார் ஜெயஸ்ரீ. பேச்சு வரவில்லை, இடது பக்கம் செயலிழந்துவிட்டிருந்தது.

“எட்டு வாரங்களுக்குப் பிறகுதான் எதுவும் சொல்லமுடியும் என்று மருத்துவர்கள் கூறியதைக் கேட்டு ஜெயஸ்ரீயின் கணவர், சகோதரர், மகன் அம்ரித் ஆகியோர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

“எனது மனமும் குடும்பத்தாரின் நிம்மதியும் குலைந்துபோயிருந்த அந்த வேளையில் மகன் அம்ரித் என்னுடன் செலவிட்ட தருணங்களை மறக்க இயலாது. மருத்துவமனையில் என் அறையில் இருந்த சன்னலோரம் தரையில் அமர்ந்து எனக்காகப் பாடிக்கொண்டே இருப்பான். பிரார்த்தனை செய்ததுபோல் பாடுவான்,” என்று நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறார் ஜெயஸ்ரீ.

“அம்மாவுக்கு வாய், மூக்கு எனப் பல இடங்களில் குழாய்களைச் செருகி இருந்தனர். அவரால் பேச முடியாது. ஒரு நோட்டும் பேனாவும் கொடுத்து ஏதாவது எழுதும்படி சொன்னேன். அப்படி அவர் எழுதிய ‘நிலா நிலா ஓடிவா’ என்ற பாடல்தான் எனது அடுத்த இசைத்தொகுப்பின் முதல்பாடல்,” என்கிறார் மகன் அம்ரித்.

தொடர்புடைய செய்திகள்

அம்மாவின் வழியைப் பின்பற்றி இசைத்துறையில் சாதித்துவரும் இவர், மலையாளத்தில் ‘வருஷங்களுக்கு சேஷம்’ என்ற படத்துக்கு இசையமைத்துள்ளார். அப்படத்தில் தன் தாயையும் பாட வைத்திருக்கிறார். தமிழில் நடிகர் சித்தார்த் நடிக்கும் 40வது படத்துக்கு அம்ரித்தான் இசை.

சென்னை திரும்பியதும், நீடித்த சிகிச்சையின் பலனாக இப்போது உடல்நலம் தேறியுள்ளார் பாம்பே ஜெயஸ்ரீ. சிங்கப்பூர் நடன நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் நாடகத்துக்கு இசையமைக்கிறார் ஜெயஸ்ரீ.

இந்த நாடகத்தின் முதல் காட்சி, வரும் ஜனவரி மாதம் சிங்கப்பூரில் நடைபெறுமாம். எனினும் இந்த நாடகத்துக்காக அவர் பாடவில்லை. இசைக்கு மட்டுமே பொறுப்பேற்றுள்ளாராம்.

நீண்ட இடைவெளிக்குப்பிறகு இசைப்பணியில் ஈடுபட்டிருப்பது தமக்கு புத்துணர்ச்சியும் தெம்பும் அளிப்பதாகச் சொல்லும் பாம்பே ஜெயஸ்ரீ, தனது அறக்கட்டளை மூலம் ‘ஆட்டிசம்’ பாதித்த குழந்தைகளுக்குப் பல ஆண்டுகளாக இசை பயிற்றுவித்து வருகிறார்.

“இப்போது பாட முடியவில்லை என்கிற கவலையோ, வருத்தமோ இல்லை. ஆனால் மீண்டும் பாட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அடுத்த ஆண்டுக்குள் என்னை மேடைகளில் காண முடியும்,” என்கிறார் ஜெயஸ்ரீ.

குறிப்புச் சொற்கள்