தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா....

3 mins read
கவிஞர் கண்ணதாசன் கவிச்சுவை (16)
96e3b6a2-f1c8-49a0-afcc-61cd5ba53190
‘கர்ணன்’ படத்தில் ‘மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா’ பாடல் வரும் காட்சியில் நடிகர் என்.டி.ராம ராவ். - காணொளிப் படம்: யூடியூப்

தமிழ்த் திரையுலகில் பல வெற்றிப் படங்களைத் தந்து பலரின் கவனத்தை ஈர்த்தவர் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என படத் தயாரிப்பின் அனைத்து அம்சங்களிலும் பெரும் சாதனை புரிந்த பி ஆர் பந்துலு.

அவர் நடிகர் திலகம் சிவாஜியை வைத்து எடுத்த ‘கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி’, ‘சபாஷ் மீனா’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘பலே பாண்டியா’, ‘கர்ணன்’, ‘முரடன் முத்து’ போன்ற படங்கங்கள் காலத்தால் அழியாதவை. 

அவற்றை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். அதுவும் சக்தி கிருஷ்ணசாமி வசன நடையில் வந்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் சிவாஜி பேசும் தீப்பொறி பறக்கும் வசன நடை இன்றும் பலரால் விரும்பிப் பேசப்படுகிறது.

இவர் தயாரித்த காவியமான ‘கர்ணன்’ படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், படத்தில் கிருஷ்ணரின் கீதோபதேசமும் இடம்பெற வேண்டும் என்று கூறியுள்ளார். 

தயாரிப்புக் குழுவினர் இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். காரணம், படத்தின் ஓட்டம் அந்த நிலையில் மூன்றே கால் மணிநேரத்தை எடுத்துக் கொண்டதாம். கீதோபதேசத்தையும் சேர்த்தால் படத்தின் நீளம் கட்டுக்கடங்காமல் போகுமே எனக் கையைப் பிசைந்து கொண்டிருந்தனராம். 

என்ன செய்வது என்று தெரியாத நிலையில், உதவி இயக்குநர்கள் இதை இசையமைப்பாளர் விஸ்வநாதனிடம் கூறியுள்ளனர். அவரோ சற்றும் தயங்காமல் கவிஞர் கண்ணதாசனிடம் சொன்னால் போயிற்று. அதை ஒரு பாடலிலேயே சொல்லி விடுவாரே என்றாராம்.

அப்படிப் பிறந்ததுதான் அந்தப் படத்துக்குத் தனிச் சிறப்பு சேர்க்கும் ‘மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா...’ கீதோபதேசத்தின் சாரத்தை கவிஞர் ஒரே பாடலில் கொண்டு வரும் அற்புதம்.

மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே போர் நிச்சயம் என்ற நிலையில், இருதரப்பும் போருக்குத் தயாராக நிற்கும் பொழுது, அர்ஜுனன் நிலைகுலைந்து தேர்த்தட்டில் சாய்கிறான், போரிட மறுக்கிறான். எதிரில் நிற்கும் பீஷ்மர், துரோணர் போன்ற குருமார்களுடனும் பெரியோர், உறவினர்களுடனும் எப்படிப் போர் புரிவது என்று கிருஷ்ணரிடம் கேட்கிறான். அரசுக்கும் பதவிக்கும் ஆசைகொண்டு ஒருவரை ஒருவர் அழிக்கும் போர் தனக்கு வேண்டாம் என்று கூறுகிறான்.

அதில் பிறந்ததுதான் கண்ணன் அர்ஜுனனுக்குத் தரும் உபதேசம். பாசம், பந்தம் என்பதை விடுத்து, அறம் தழைக்க மனிதன் கர்மம் செய்யக் கடமைப்பட்டவன் என்று உபதேசிக்கிறார். மேலும், கடமையைச் செய்யும் மனிதன் அதன் பலன்களை எதிர்பார்த்துச் செய்யக்கூடாது என்றும் அந்தப் பலன்கள் அவனுக்கு உரியதல்ல என்றும் கூறி போராடுமாறு பரந்தாமன் அர்ஜுனனுக்குப் போதிக்கிறார். இனி கவிஞரின் மறக்க முடியாத அந்தப் பாடலைப் பார்ப்போம்.

“மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா மரணத்தின் தன்மை சொல்வேன் மானிடர் ஆன்மா மரணம் எய்தாது மறுபடிப் பிறந்திருக்கும் மேனியைக் கொல்வாய், வீரத்தில் அதுவும் ஒன்று நீ விட்டுவிட்டாலும் அவர்களின் மேனி வெந்துதான் தீரும் ஓர் நாள்.

“ஆம், ஆன்மாவுக்கு அழிவில்லை, அழிவு உடலுக்கு மட்டுந்தான் என்றும் போரில் அவர்கள் மரணமடையவில்லை என்றாலும் என்றாவது ஒரு நாள் அவர்கள் உடல் அழியும் என்றும் கூறுகிறார் கிருஷ்ணர். என்னைக் கொலை செய்யும் பாவத்தைச் செய்ய நீ தூண்டலாமா என்று கேட்கும் அர்ஜுனனைப் பார்த்து தொடர்ந்து உபதேசம் செய்யும் பரமாத்மா,

“என்னை அறிந்தாய், எல்லா உயிரும் எனதென்றும் அறிந்துகொண்டாய் கண்ணன் மனது கல் மனது என்றோ காண்டீபம் நழுவ விட்டாய்மன்னரும் நானே, மக்களும் நானே, மரம், செடி, கொடியும் நானே சொன்னவன் கண்ணன், சொல்பவன் கண்ணன் துணிந்து நில், தர்மம் வாழ...” என்று அர்ஜுனனை அமைதிப்படுத்துகிறான். 

இதைக் கேட்கும் அர்ஜுனன், ஆனால் கொல்லப் போவது நான்தானே, அந்தப் பழியெல்லாம் என்னைத்தானே சாரும்அதை நீ ஏற்றுக்கொள்வாயா என்கிறான். இதைத் தொடர்ந்து கண்ணன், எல்லாப் பழி, பாவம், புண்ணியம் தன்னையே சாரும் என்று, “புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால் அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே. போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே. கண்ணனே காட்டினான், கண்ணனே தாக்கினான், கண்ணனே கொலை செய்கின்றான், காண்டீபம் எழுக, நின் கை வன்மை எழுக, இக்களமெல்லாம் சிவக்க வாழ்க...,” என்று உபதேசம் செய்கிறான்.

அதுவும் போர்க்களம் ரத்தக்காடாக மாறும் என்பதால் களமெல்லாம் சிவக்க வாழ்க என்று பாடல் வரிகளை கவிஞர் அமைத்துள்ளார். இப்படி சில நிமிடங்களிலேயே கீதையின் சாராம்சத்தை கவிஞர் மிக அற்புதமாக நமக்குத் தருகிறார். இந்தப் பாடலைக் காலா காலமும் என்னால் மட்டுமல்ல பலரால் மறக்க இயலாது. 

படத்தின் அனைத்துப் பாடல்களையும் நீங்களும் கேட்டு ஆனந்தமடையுங்கள்.

குறிப்புச் சொற்கள்