தனது மனைவியும் நடிகையுமான ஸ்ரீதேவி தம்மை அழகாகக் காட்டிக்கொள்ள பலவகையிலும் மெனக்கெட்டதாக அவரது கணவர் போனி கபூர் கூறியுள்ளார்.
தனது தோற்றம் அழகாக இருக்கவேண்டும் என்பதற்காக ஸ்ரீதேவி கடும் உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்ததாக ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“சில சமயங்களில் தாம் விரும்பிய தோற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக அவர் பல நாள்களாகச் சரியாகச் சாப்பிடாமல்கூட இருப்பார். இதனால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரது செயல் கவலை அளிக்கும் விதமாகவும் இருக்கும்.
“என்னைத் திருமணம் செய்த காலத்தில் அவருக்கு ரத்தக்கொதிப்பின் அளவு குறைவாக இருந்தது. இதனால் உணவில் உப்பு சேர்க்க மாட்டார்,” என்று போனி கபூர் தெரிவித்துள்ளார்.
உணவுக் கட்டுப்பாடுகள் காரணமாக ஸ்ரீதேவியின் உடல்நலப் போராட்டம் அதிகரித்ததாக குறிப்பிட்டுள்ள அவர், ஒரு கட்டத்தில் தாம் மிகுந்த கவலை அடைந்ததாகக் கூறியுள்ளார்.
“ஒரு சமயம் படப்பிடிப்புத் தளத்தில் ஸ்ரீதேவி திடீரென மயங்கி விழுந்துவிட்டார். இத்தகவலை நடிகர் நாகார்ஜுனா என்னிடம் தெரிவித்தார். உணவுக் கட்டுப்பாடு காரணமாகவே ஸ்ரீதேவியின் உடல்நிலை இவ்வாறு மோசமடைந்தது என்பது பின்னர் தெரியவந்தது,” என்று போனி கபூர் மேலும் கூறியுள்ளார்.
நடிகை ஸ்ரீதேவி இந்தி திரை உலக தயாரிப்பாளர் போனிகபூரைத் திருமணம் செய்துகொண்ட பிறகு தமிழ்த் திரை உலகில் இருந்து விலகினார்.
அவருக்கு ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்டு துபாயில் உள்ள தங்கு விடுதியின் அறையில் தவறி விழுந்து அவர் உயிரிழந்தார்.