தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புகழ்பெற்ற தத்துப் பிள்ளைகளின் கதை

4 mins read
99cb23bf-95a8-4c8c-8f88-41b245723177
அஞ்சலி. - படம்: ஊடகம்
multi-img1 of 4

’பெத்து எடுத்தவதான்

என்னையும் தத்துக் கொடுத்துப்புட்டா

பெத்த கடனுக்குத்தான்

என்ன வித்து வட்டியகட்டிபுட்டா

- ரஜினி நடித்த ‘வேலைக்காரன்’ படத்திற்காக இளையராஜா இசையில் மலேசியா வாசுதேவன், பாடிய இந்தப் பாடலை கவிஞர் மு.மேத்தா எழுதியிருந்தார்.

இப்படி வேண்டா வெறுப்பாகத் தத்து கொடுப்பவர்களும் உண்டு. விரும்பிய தத்துப் பிள்ளையாக வேறொரு வீட்டில் வளர்ந்தவர்களும் உண்டு.

சாதி மண ரீதியிலிருந்து சட்டரீதிவரை குழந்தைகளைத் தத்துக் கொடுப்பது, தத்தெடுப்பது என முறைகள் உள்ளன.

இளம் மரக்கன்றை (குழந்தையை) பிடுங்கி இன்னொரு இடத்தில் நடலாம். ஆனால் ஓங்கி வளர்ந்த மரத்தை (25 வயது இளைஞரை) வேரோடு பெயர்த்து இன்னொரு இடத்தில் நடும்போது மரத்தின் மனசு வலிக்கத்தானே செய்யும்.

இப்படி தத்துப் போவதில் ஆயிரம் உளவியல் சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. இருப்பினும் இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப்போவது… தத்துக் கொடுக்கப்பட்டு பின்னாளில் நாடறிந்த பிரபலமாகிய சிலரைப்பற்றி…

கவிஞர் கண்ணதாசன்

சாத்தப்ப செட்டியார், விசாலாட்சி ஆச்சி தம்பதியர்க்கு எட்டாவது பிள்ளையாகப் பிறந்தவர் முத்தையா (மொத்தம் பத்து பிள்ளைகள்).

அவரது பெற்றோரிடம் கஷ்டத்திற்கு ஏழாயிரம் ரூபாயைக் கொடுத்து முத்தையாவை பழனியப்ப செட்டியார் சிகப்பி ஆச்சி தம்பதி தத்தெடுத்தனர். சிகப்பி ஆச்சியின் வீட்டில் ‘நாராயணன்’ என்ற பெயரில் வளர்ந்தார் முத்தையா.

14 வயதைக் கடந்த நிலையில் சென்னை வந்து பத்திரிகை அலுவலகம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தபோது முத்தையா என்கிற நாராயணன் தனது பெயரை ‘கண்ணதாசன்’ என மாற்றிக் கொண்டார்.

கவிதையால் சாதனை படைத்த கவியரசு கண்ணதாசனை இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழுலகம் மறக்க முடியுமா?

நடிகை ஜெயமாலினி:

‘பெரிய இடத்துப் பெண்’ உட்பட சில படங்களில் வாயாடிப் பெண்ணாக நடித்த ஜோதி லட்சுமி அதன் பின் கவர்ச்சி நடனத்துக்குப் பெயர் பெற்ற நடிகையானார். ஜோதி லட்சுமியின் சொந்தத் தங்கைதான் ’ஜெகன்மோகினி’ புகழ் ஜெயமாலினி. (இவர்களின் உறவினர் நடிகை டி.ஆர்.ராஜகுமாரி)

தொடக்க கால தமிழ் சினிமாவில் கதாநாயகியாகவும் பிறகு குணச்சித்திர நடிகையுமான எஸ்.பி.எல்.தனலட்சுமியின் தத்துப் பிள்ளையாக வளர்ந்தவர் ஜெயமாலினி.

இந்தியாவின் எல்லா மொழி படங்களிலும் ‘அயிட்டம் சாங்ஸ்’ எனப்படும் குத்துப் பாட்டுக்கு ஆடிப் புகழ் பெற்றவர் ஜெயமாலினி. இவரைப் படப்பிடிப்பின்போது நேரில் பார்க்கக் கூடிய கூட்டத்தைப்பார்த்து நடிகர் என்.டி.ராமாராவ் வியந்த சம்பவங்களும் உண்டு.

“உறவினர்களின் பாதுகாப்போடு வாருங்கள். உங்கள் பணத்தில் பாதியை அவர்கள் சாப்பிட்டாலும் மீதிப் பாதியை உங்களுக்காக வைத்திருப்பார்கள்.

“பெற்ற தாயை, உடன்பிறந்த அண்ணனை ஒதுக்கி வைத்துவிட்டு எவ்வித சொந்தமுமில்லாத ஒருவரின் பிடியில் இருந்ததால்தான் நடிகை சில்க் ஸ்மிதாவுக்கு மோசமான கதி நேர்ந்தது,” என சில ஆண்டுகளுக்கு முன் கருத்து தெரிவித்திருந்தார் ஜெயமாலினி.

நடிகர் அரவிந்த்சாமி

‘டும்டும்டும்’ உட்பட சில படங்களிலும், ‘மெட்டி ஒலி’ உள்ளிட்ட சில தொலைக்காட்சித் தொடர்களில் நடித்ததால் பெரும் புகழ் பெற்றவர் டெல்லிகுமார். இன்றும் பிஸியாக பல தொடர்களில் நடித்து வருகிறார்.

டெல்லி குமார் குடும்பத்துடன் டெல்லியில் வசித்து வந்தார். அவருடைய அக்கா வசந்தா, அவரது கணவரான ‘சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் நிறுவனர்களில் ஒருவருமான வெங்கட்ராம துரைசாமி தம்பதிக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தையில்லாததால் தங்களுக்கு பிறக்கும் முதல் குழந்தையை அக்காவுக்கு தத்துக் கொடுத்து விடுவதென முடிவு செய்தார் டெல்லி குமார்.

அதன்படி ஆண் குழந்தை பிறந்ததும் தத்துக் கொடுத்தனர். அப்படி கொடுக்கப்பட்ட குழந்தைதான் நடிகர் அரவிந்த்சாமி.

தத்துக் கொடுக்கப்பட்ட அரவிந்த்சாமியின் உண்மைக் கதையை உணர்ந்தே அவரை தனது ‘சாசனம்’ படத்தில் நடிக்க வைத்தார் ‘உதிரிப்பூக்கள்’ மகேந்திரன்.

‘சாசனம்’ கதை தத்துக் கொடுக்கப்பட்டவனின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

அரவிந்த்சாமி எப்போதும் ‘டெல்லி குமார்’ தான் எனது பயாலாஜிகல் தந்தை என ஓரிடத்திலும் சொன்னதில்லை.

அரவிந்த்சாமியின் வளர்ப்புத்தந்தை சாமி சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.

டெல்லி குமாருக்கோ தன் மகன் அரவிந்த்சாமி தன்னிடம் இயல்பாகப் பேசுவதில்லையே என்கிற கவலை இருக்கத்தான் செய்கிறது.

ஆனால் அரவிந்த்சாமியோ, தன் பெற்றோர் சாமி,– வசந்தா ஆகியோர்தான் என்பதில் உள்ள உறுதியை ஒரு போதும் விட்டுக் கொடுக்காமல் இருக்கிறார்.

தத்துக் கொடுத்த கோபமோ என்னவோ!

நடிகை அஞ்சலி

ஆந்திராவைச் சேர்ந்த அஞ்சலி கல்லூரி படிப்பைத் தொடர சென்னை வந்தார். அவரை அவரது சித்தி பாரதிதேவி தத்தெடுத்துக் கொண்டார். அஞ்சலிக்கு இருந்த சினிமா ஆசையை அறிந்த சித்தி, அவர் மூலம் பலனடைய தத்தெடுத்தார்.

அஞ்சலி நடிகையாக சம்பாதிக்கத் தொடங்கியதும் தன்னை விட்டு சொந்தத்தாயுடன் போய் விடக்கூடாது எனப் பலவிதமாக தொல்லை கொடுத்தார், ரகசியமாகக் கண்காணித்தார்.

அஞ்சலி எங்கு படப்பிடிப்பிற்கு சென்றாலும் பாதுகாப்பு என்ற பெயரில் கண்காணிப்புக்கு ஆள்போட்டார். பெரும்பாலும் பாரதிதேவியின் கணவர்தான் கண்காணிப்புக்குச் செல்வார்.

“நாம் சம்பாதித்துப் போடுகிறோம். அதை அனுபவித்துக் கொண்டு இப்படி கொடுமைப்படுத்துகிறார்களே,” என மனம் வெதும்பி தங்கு விடுதியில் இருந்து தனக்கு வேண்டப்பட்ட தெலுங்கு முன்னணி நடிகரின் வீட்டில் தஞ்சமடைந்தார் அஞ்சலி.

அதிர்ச்சியான பாரதிதேவி “என் வளர்ப்பு மகள் அஞ்சலியை காணவில்லை, கண்டுபிடித்துத் தர வேண்டும்’ என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

ஆனால் அஞ்சலியோ ஹைதராபாத் காவல் ஆணையர் அலுவலகத்தில் முன்னிலையாகி, ‘நான் மேஜர். என்னை யாரும் கடத்தவில்லை, காணாமலும் போகவில்லை. என் சித்தி குடும்பத்துடன் இருக்கப் பிடிக்காததால் சுயமாக வெளியேறியுள்ளேன் என விளக்கமளித்தார்.

உண்மையான பாசம் இருப்பின் பிள்ளை வளர்ப்பு உள்ளிட்ட குடும்பப் பொறுப்புகள் அனத்துமே வெறும் சுமையல்ல, சுகமான சுமை!

குறிப்புச் சொற்கள்